இலவச விவசாய மின் இணைப்புக்கு ரூ.2,400 கோடி வசூல் செய்தது என்ன ஆனது? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
தத்கல் முறையில் பெறும் விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கினால், ஏழை, எளிய விவசாயிகள் பாதிக்கப்படைய மாட்டார்களா என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

Published : September 2, 2026 at 1:14 PM IST
மதுரை: விவசாயிகளுக்கு தத்கல் முறையில் வழங்கப்படும் இலவச மின்சார இணைப்புக்கு ரூ.2,431 கோடி வசூல் செய்தது தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த மனகிரி செல்வகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தத்கல் முறையின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தும் விண்ணப்பதாரர்கள், இலவச விவசாய மின் இணைப்பிற்காக காத்திருக்கும் பிற விண்ணப்பதாரர்களை விட முன்னுரிமை பெற முடிகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், தட்கல் திட்டத்தின் கீழ் 89,289 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் ₹2,431.51 கோடி வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 44,993 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திய போதிலும், 44,296 விண்ணப்பதாரர்கள் நிலுவையில் உள்ளனர்.
மேற்கண்ட புள்ளிவிவரங்களின் படி வசூலிக்கப்பட்ட ₹2,431 கோடி நிதி, அதன் கணக்கு மற்றும் பயன்பாடு, வழங்கப்பட்ட இணைப்புகளுக்காக செய்யப்பட்ட செலவு மற்றும் எஞ்சிய தொகை எவ்வாறு கணக்கில் காட்டப்பட்டுள்ளது என்ற தகவல் இல்லை.
இவ்வளவு பெரிய தொகை வசூலிக்கப்பட்டுள்ளது அது எந்த கணக்கில் உள்ளது என விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஏனென்றால் இத்திட்டம், அரசாணை படி செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க தணிக்கை விசாரணை செய்ய வேண்டும்.
மேலும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 44,993 இணைப்புகளின் பயனாளிகள் பற்றிய விவரங்கள் வழங்கப்படவில்லை. இதனால் தகுதியற்ற ஒரே நபர் பல இணைப்புகளை பெற்றுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. இதை பொதுமக்கள் சரிபார்ப்பது தடையாகியுள்ளது.
எனவே, வெளிப்படைத்தன்மையாக இதன் பயனாளிகளை சரிபார்த்தல் வேண்டும். மாவட்ட வாரியான தரவுகளை வெளியிடுதல் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தகுதியுள்ள விவசாயிகள், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் பாரபட்சமற்ற முன்னுரிமை முறையை உருவாக்குதல் உத்தரவிட வேண்டும்.
தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் (PAG) மூலம் சிறப்புத் தணிக்கை, குழு வசூலிக்கப்பட்ட தொகை குறித்து தணிக்கை செய்ய வேண்டும்.
| இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழைக்கு பம்ப் செட் தயாரா? மழை நீரால் மக்கள் பாதிக்கக்கூடாது - அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவுகள் |
இதில் ஊழல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மூலம் விசாரணை வேண்டும். மேலும் ஏழை எளிய விவசாயிகளை பாதிக்கும் தற்போதைய தட்கல் முறையை, ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, இந்த தட்கல் திட்டம் மூலம் வசூல் செய்த பணம், என்ன ஆனது என்பது குறித்த விவரம் இல்லை. விவசாயிகள் என்ற பெயரில் பெரும் பணக்காரர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இதனால் சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
மின்வாரியத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு குறித்து அரசு தரப்பிடம் தகவல் கேட்டு சொல்வதாக தெரிவித்தார்.
அப்பொழுது நீதிபதிகள், ரூ.2400 கோடி வசூல் செய்து என்ன செய்தீர்கள்? இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு எந்த அரசாணை அடிப்படையில் வசூலிக்கப்பட்டது? அரசு தணிக்கை கணக்கில் இந்த பணத்தை எவ்வாறு வரவு வைத்துள்ளது? ரூ.2400 கோடி பணத்தை என்ன செய்ய போகிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் தத்கல் முறையில் பெரிய விவசாயிகளுககு இணைப்பு வழங்கினால், ஏழை, எளிய விவசாயிகள் பாதிக்கப்படைய மாட்டார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இத்திட்டத்தின் கீழ் எத்தனை பயனாளிகள் பயனடைந்தனர்? காத்திருப்போர் பட்டியல் சீனியாரிட்டி முறைப்படி வைத்து உள்ளீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுகுறித்து மின்சார துறை செயலர், நிதித்துறை செயலர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.

