ETV Bharat / state

"திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று 5 பேர் பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா?“ - நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் கேள்வி

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் இனி மாவட்ட ஆட்சியர் ஆஜராக தேவையில்லை, நாளை மறுநாள் காவல் துறை ஆணையர் மட்டும் விசாரணைக்கு ஆஜராக மதுரை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 7:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: நீதிமன்றம் தெரிவிக்கும் 5 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா? என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் இராம ரவிக்குமார், அரசபாண்டி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற டிசம்பர் 1 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் டிசம்பர் 3 ஆம் தேதி மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் மனுதாரர்கள் மலைக்கு நேரில் சென்று தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி தீபம் ஏற்ற சென்ற மனுதாரர்கள், திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். ஏற்கனவே 144 தடையாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது உறுதி செய்யப்பட்ட பிறகும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது மட்டுமின்றி, அரசபாண்டி தரப்பில் புதிதாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதிப்பு செய்ததற்காக அகில இந்திய பணிகளில் (ஐஏஎஸ், ஐபிஎஸ்) உள்ள அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகள் (நடத்தை) 1968 அடிப்படையில் துறைரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மாவட்ட ஆட்சியர் தரப்பில், “சட்டத்தை செயல்படுத்த வேண்டியது தான் நிர்வாகத்தின் கடமை. சூழலைக் கருத்தில் கொண்டு தான், இந்த விவகாரத்தில் செயல்பட்டேன். சட்டத்தை கடைபிடித்து, பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறேன். வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் இருக்க வேண்டும் என்பது இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். அடுத்த கார்த்திகை தீபம் வருவதற்கு முன் உரிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீங்கள் படித்திருப்பீர்கள். ஏற்கனவே ஏற்றிய இடத்தில் என்று சொல்லவில்லை, இந்துக்களுக்கு சொந்தமான பகுதியில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தோம்” என தெரிவித்தார். பின்னர், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: இறைச்சிக் கடைகளில் ஆடு, கோழி, மாடு வெட்டுவதற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மேலும், நீதிமன்றம் சொல்லும் 5 நபர்களை மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு மாவட்ட ஆட்சியர் அனுமதித்தால் இந்த வழக்கை முடித்து வைப்பதாக கூறிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் 4 மணிக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதே போல, இந்த வழக்கில் இனி மாவட்ட ஆட்சியர் ஆஜராகத் தேவையில்லை. நாளை மறுநாள் காவல் துறை ஆணையாளர் மட்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.