மோசடி விவகாரம்: அமைச்சர் பி.டி.ஆரின் முன்னாள் உதவியாளர் ஜாமின் மனு ஒத்திவைப்பு
வீட்டு மனை விவகாரத்தில் ரூ.76 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சரின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Published : March 3, 2026 at 5:58 PM IST
மதுரை: வீட்டு மனை மோசடி வழக்கில் அமைச்சர் பி.டி.ஆரின் முன்னாள் உதவியாளரின் ஜாமின் மனு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் வீட்டு மனை விவகாரத்தில் ரூ.76 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி இருவரையும் மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என அமைச்சரின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி இருவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு, கடந்த வாரம் நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கலாவதிக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதேசமயம் ஜெய் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மனு நீதிபதி K.K.ராமகிருஷ்ணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
| இதையும் படிங்க: மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்.. தாயை கொலை செய்த மகன் கைது |
வழக்கு பின்னணி:
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள விஸ்வாஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீத்தாராமன்(70) கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி என்பவர் தன்னை ஏமாற்றி ரூ.76 லட்சம் மதிப்பிலான மனையை கிரையம் செய்து மோசடி செய்ததாக மதுரை மத்திய குற்றப்பரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் மதுரை பேச்சியம்மன்படித்துறையை சேர்ந்த ஜெய் பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி இருவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் பேரில் பிப்.6 ஆம் தேதி ஜெய் பாலாஜி மற்றும் கலாவதியிடம் விசாரணை நடத்திய போலீசார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜெய் பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரை பணியிலிருந்து விலக்கியதாக கூறப்படுகிறது. மேலும், நிதியமைச்சராக தியாகராஜன் பொறுப்பேற்றவுடன் ஜெய் பாலாஜியும் அவரது மனைவியும் அமைச்சரின் பெயரைக்கூறி, மாநகராட்சி உட்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு வேலைகளை பி.டி.ஆருக்கு தெரியாமலே செய்து பணம் சம்பாதித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

