கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து இல்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டம்
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் ஒருவர் பட்டியலின சமூக உறுப்பினர் என்ற அந்தஸ்தை இழந்துவிடுகிறார் என்று உச்சநீதிமன்றமும் குறிப்பிட்டுள்ளது.

Published : September 2, 2026 at 9:00 PM IST
மதுரை: கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நபர்கள் பட்டியலின சமூகத்துக்கான அந்தஸ்தை இழப்பதுடன், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டப் பாதுகாப்பை கோர முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் தென்கரையை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தான் பணியாற்றிய பள்ளியின் முதல்வர் சாதி ரீதியாக தன்னை இழிவுபடுத்தியதாகவும், இதன் காரணமாக பழிவாங்கும் நோக்கில் வேறு கல்வி நிறுவனத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தான் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறிய அவர், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி நிர்வாகம் தரப்பில் முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மனுதாரர் கடந்த 2015ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் உள்ள தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றதுடன், தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருவது குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மதமாற்றம் தொடர்பான தகவலை மறைத்துவிட்டு தன்னை இந்து ஆதிதிராவிடர் எனக் குறிப்பிட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது.
அந்த வாதங்களை பரிசீலித்த நீதிபதி, அரசியலமைப்பின் கீழ் பட்டியலின சமூகத்திற்கான அங்கீகாரம் குறிப்பிட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி அந்த மதத்தைப் பின்பற்றத் தொடங்கிய பின்னர், முந்தைய பட்டியலின அந்தஸ்தின் அடிப்படையில் எஸ்.சி சமூகத்துக்கான சிறப்பு சட்டப் பாதுகாப்புகளை கோர முடியாது என தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ரவிகுமார் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
அதேபோல, பள்ளி நிர்வாகத்தினருக்கு எதிராக எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய அவரது மனுவும் ஏற்கப்படவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பும் உறுதி
இதே சட்டக் கொள்கையை உச்சநீதிமன்றமும் 2026 மார்ச் 24-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் ஒருவர் பட்டியலின சமூக உறுப்பினர் என்ற அந்தஸ்தை இழந்துவிடுகிறார் என்றும், அந்த அடிப்படை அந்தஸ்து இல்லாத நிலையில் எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், மதமாற்றத்திற்கு பின்னரும் SC அந்தஸ்தைத் தொடர்ந்து கோருவது தொடர்பான சட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

