ETV Bharat / state

'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் சான்று கிடைக்குமா? காலை வெளியாகிறது தீர்ப்பு... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இன்று காலை 10.30 மணிக்கு 'ஜனநாயகன்' சென்சார் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன் திரைப்படத்தில் ஒரு காட்சி
ஜனநாயகன் திரைப்படத்தில் ஒரு காட்சி (KVN Production)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 7:37 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் தீர்ப்பை எதிர்பார்த்து விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசியலில் களம் புகுந்த விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்', உலகமெங்கும் இன்று (ஜன.9) வெளியாவதாக இருந்தது. பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதால் அங்கு ஜனநாயகனுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் மறுத்துவிட்டது. மத உணர்வை புண்படுத்தும் வகையில் வசனம் இருப்பதால் சென்சார் சான்று வழங்கவில்லை என தணிக்கை வாரியம் விளக்கம் அளித்தது. இதனால் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ''ரூ.3 ஆயிரம் கொடுக்கிறோம்.. ஓட்டு போடுங்க...'' - பகிரங்கமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்

இதனிடையே, தணிக்கை வாரியத்துக்கு எதிராக 'ஜனநாயகன்' திரைப்படத்தை தயாரித்த கே.வி.என் புரோடக்சன் நிறுவனம், உயர் நீதிமன்றத்தின் கதவை தட்டியது. நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், சர்ச்சைக்குரிய 14 காட்சிகளை நீக்குமாறு பரிந்துரைத்திருப்பதாகவும், மறுதணிக்கை குழு படம் பார்த்த பிறகே சென்சார் சான்று வழங்க முடியும் எனவும் தணிக்கை குழு திட்டவட்டமாக தெரிவித்தது.

இதனை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9ஆம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தனர். இதனால், ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாக இருந்த 'ஜனநாயகன்' படத்தை கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தள்ளி வைத்தது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர், நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வழங்கவுள்ளனர். இந்த தீர்ப்பை பொறுத்தே, ஜனநாயகன் திரைப்படத்தில் ரிலீஸ் தேதி தீர்மானிக்கப்படும்.

ஆகவே, 'ஜனநாயகன்' படத்திற்காக பல மாதங்களாக காத்திருக்கும் விஜய்யின் ரசிகர்கள், இந்த தீர்ப்புக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே, இப்படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்படாததை கண்டித்து திரையுலகினரும், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.