ETV Bharat / state

சீமைக் கருவேல மரம் விவகாரம்: தெற்கு ரயில்வே பொறியாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

"நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?" என தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 10, 2026 at 10:39 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றாதது குறித்து தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை அண்மையில் விசாரித்த உயர் நீதிமன்றம், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீட்டுக்கான கனிம நிதியை இரண்டு வாரங்களில் விடுவிக்க வேண்டும் என வனத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கானது, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜி.கே.முத்துகுமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே கைது; விமானத்திற்குள் சென்று போலீசார் அதிரடி

அதில், "நீதிமன்ற உத்தரவுபடி, நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட குழுவின் ஒப்புதலை பெற்ற பின், தேவைப்படும் இடங்களில், சீமை கருவேல மரங்களை அகற்ற, அந்தந்த மாவட்டங்களின் கனிம நிதியை பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், "ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர். மேலும், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாத தெற்கு ரயில்வேக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என்பது குறித்து வரும் நவம்பர் 6-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, ரயில்வே தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.