மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு
மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கக் கோரியும், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும் மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்த மனுவில் முகாந்திரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

Published : June 2, 2026 at 10:04 PM IST
சென்னை: விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, மாணிக்கம் தாகூரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தேர்தல் வேட்புமனுவில் உண்மை தகவல்களை மாணிக்கம் தாகூர் மறைத்ததாகவும், பிரச்சாரத்தின்போது ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார்.
இந்த நிலையில், விஜய பிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் கூறப்பட்டிருந்த சில குற்றச்சாட்டுக்களை நீக்கக் கோரியும், தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
| இதையும் படிங்க: பொதுக்கூட்டத்தில் வீராவேசம்; சட்டமன்றத்தில் மயான அமைதி - முதல்வர் விஜய்க்கு ஆ.ராசா கிடுக்கிப்பிடி கேள்வி |
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், "மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கக் கோரியும், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும் மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்த மனுவில் முகாந்திரம் இல்லை" என கூறி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், "தேர்தல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்" என மாணிக்கம் தாகூர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகின்ற ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

