ETV Bharat / state

புதுச்சேரியில் தாயார் பூர்வீகத்தை கொண்ட குழந்தைகளுக்கும் சாதி சான்றிதழ் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கமே சமூகத்தில் பின்தங்கிய நிலையை சரிசெய்வதுதானே தவிர, அந்த சமூக அந்தஸ்து தந்தை வழியில் வந்ததா? அல்லது தாய் வழியில் வந்ததா? என்பதை தீர்மானிப்பதற்காக இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 9:50 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: புதுச்சேரியில் தாயாரின் பூர்வீகத்தை கொண்ட குழந்தைகளுக்கும் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரியில் பிறந்து, அங்கு வளர்ந்த குழந்தைகளின் தாயார் புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும், அவர்களது தந்தை வெளிமாநிலத்தைச் சேர்ந்தராக இருந்தால் அவர்களுக்கு தாயாரின் சாதி அடிப்படையில் சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டது. சிலருக்கு புலம்பெயர்ந்தோர் என சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனால் தங்களுக்கான புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு பலன்களை பெற முடியவில்லை பாதிக்கப்பட்ட 28 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி, புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட தாயாரின் பூர்வீக சாதியை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால், அரசு வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15 மற்றும் 16 அனைவருக்குமான சமத்துவத்தை உறுதி செய்கின்றன. எனவே, சமூக அந்தஸ்தை தந்தையின் மூலம் மட்டுமே தீர்மானிக்கும் பாரம்பரியக் கருத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது. எனவே, தாயாரின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சட்டவிரோதமானது என தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு மாநிலத்தில் கிடைக்கும் சமூக அந்தஸ்து மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு பலன்களை புலம் பெயர்ந்தவர்கள் அப்படியே கோர முடியாது. சமூக அந்தஸ்து தந்தையின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கக் கோருவது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றதத்தில் நிலுவையில் உள்ளன என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.

அதில், புதுச்சேரியைச் சேர்ந்த ஆண் ஒருவர் வெளி மாநில பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், அவர்களது குழந்தைக்கு புதுச்சேரி பூர்வீகத்தின் அடிப்படையில் சாதி சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீட்டுப் பலன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அதுவே புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்துகொண்டால், அந்தக் குழந்தைக்கு தாயின் பூர்வீகத்தை ஏற்க மறுப்பது பாலின அடிப்படையிலான வேறுபாடாகும்.

இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கமே சமூகத்தில் பின்தங்கிய நிலையை சரிசெய்வதுதானே தவிர, அந்த சமூக அந்தஸ்து தந்தை வழியில் வந்ததா? அல்லது தாய் வழியில் வந்ததா? என்பதை தீர்மானிப்பதற்காக இல்லை. எனவே புதுச்சேரியில் பாலின அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.

இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கு; ட்விஸ்ட் வைத்த இசக்கி சுப்பையா - மறுத்த நீதிபதிகள்

இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பதால் தந்தை வழியாக மட்டுமே சமூக அந்தஸ்தை தீர்மானிக்க முடியும் என்ற கூற்றையும் ஏற்க முடியாது. ஒரு பெண்ணின் அடையாளம் திருமணத்துக்குப் பிறகு கணவரின் அடையாளத்தில் கரைந்து போய்விடக்கூடாது. பெண்களுக்கான சம உரிமையை அரசியலமைப்பு சட்டம் தந்துள்ளது.

எனவே, தந்தையின் பூர்வீக அடிப்படையில் மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு அவர்களின் தாயாரின் பூர்வீகத்தின் அடிப்படையில் உரிய சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து உரிமைகளையும், இடஒதுக்கீட்டு பலன்களையும் பெற முழு உரிமையுண்டு. அதேநேரம் தவறான கோரிக்கை முன்வைக்கப்பட்டாலோ அல்லது தாயாரின் பூர்வீகம் நிரூபிக்கப்படாவிட்டாலோ சாதி சான்றிதழ் வழங்க முடியாது என மறுப்பதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது குறிப்பிட்டுள்ளார்.