பணி நியமனத்தில் முறைகேடு; தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு தாக்கல் செய்ய இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Published : March 3, 2026 at 6:54 PM IST
சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக எம்.பி இன்பதுரை தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களை முறைகேடாக நியமனம் செய்ததில் சுமார் 1,020 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாக அமலாக்கத் துறை பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தது. மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யும் படி 2025 ஜூலை மாதம் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது.
கடிதத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, அதிமுக எம்.பி. இன்பதுரை உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை அனுப்பியது புகார் கடிதம் மட்டுமல்ல, சோதனையின் அடிப்படையில் ஆதாரங்களை வழங்கியிருப்பதால் அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிப்ரவரி 20ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், ''நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. மாநில அரசு மற்றும் அமைச்சருக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. அதனால், உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்'' என அதிமுக எம்பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இன்பதுரை தரப்பில், நீதிமன்றம் பிப்ரவரி 20ம் தேதி உத்தரவு பிறப்பித்து 10 நாட்கள் கடந்த பின்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 25ம் தேதி ஒத்திவைத்தனர்.
| இதையும் படிங்க: மகளிர் தினத்தன்று தவெக தேர்தல் அறிக்கை..? வெளியான முக்கிய தகவல் |

