அஜித்குமார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நிகிதா ஆஜர்; வேகமெடுக்கும் சிபிஐ விசாரணை
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Published : March 4, 2026 at 4:01 PM IST
மதுரை: கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் நகை காணாமல் போனதாக புகாரளித்த பேராசிரியை நிகிதா மதுரை மாவட்டக் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார், கடந்த ஆண்டு ஜூன் 27- ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஜூன் 28- ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் அஜித்குமார் கொலை செய்யப்பட்ட அன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களையும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
| இதையும் படிங்க: நான் வேண்டுமா? ஸ்டாலின் சார் வேண்டுமா? தஞ்சையில் விஜய் கேள்வி |
இந்த வழக்கில் நகையை காணவில்லை என புகாரளித்த மதுரையை சேர்ந்த பேராசிரியை நிகிதாவை அழைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10- ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதா நேரில் ஆஜராக உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து நிகிதா மதுரை மாவட்டக் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன் இன்று ஆஜரானார். வழக்கு விசாரணையின் போது, நிகிதா அளித்த புகாரை முடித்து வைக்க உள்ளதாக சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் தெரிவித்தார். இது குறித்து உங்களது கருத்து என்ன என நீதிபதி, நிகிதாவிடம் கேள்வி எழுப்பினார். அப்போது நிகிதா, "எனக்கு எதுவும் ஆட்சேபணை இல்லை; எனது புகார் கொடுத்த வழக்கை முடித்து வைக்கலாம்" எனத் தெரிவித்தார்.
இதனை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நிகிதாவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிகிதா, "நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது. தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் என்னை திட்டுகிறார்கள். நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கிற்கு பின் என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகார் அளித்து விட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது.
எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. மறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்து தான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது.
நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு. அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரை மடப்புரம் காவல் நிலையத்தில் தான் அஜித்குமார் இருந்தார்" என்றார்.

