பிரதமர் மோடியால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது - ராகுல் காந்தி ஆவேசம்
கேள்வி கேட்பதற்கான உங்கள் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கிறது; எனவே, மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Published : October 10, 2026 at 10:37 PM IST
சென்னை: "தமிழ் மொழியின் மீதும், தமிழ் வரலாற்றின் மீதும் பிரதமர் நரேந்திர மோடி தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க மாட்டோம்; பிரதமர் மோடி, தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது" என ராகுல் காந்தி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சி இன்று (அக்.10) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாட்டு வருவது எனக்கு பெருமை
அப்போது பேசிய ராகுல் காந்தி, "இந்த நிகழ்ச்சிக்காக மட்டும் இங்கு வருவது எனக்குப் பெருமை அல்ல. இந்த சிறந்த மண்ணுக்கு நான் எப்போது வந்தாலும், அது எனக்குப் பெருமையாகவே இருக்கிறது. இந்த மண்ணுக்கு நான் அடிக்கடி வருகிறேன். ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது, தமிழ்நாட்டு மக்களிடமிருந்து ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டே திரும்பிச் செல்கிறேன்.
மாணவர்களுக்கான 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஒரு மாணவராக இருப்பதன் அர்த்தம் என்ன? மாணவராக இருப்பதன் அடிப்படைத் தன்மை என்ன? என்பது குறித்து நாம் விவாதிக்க விரும்புகிறோம். ஒரு மாணவர் என்பவர் யார் என்ற கேள்வியை எழுப்பி, அது குறித்து நாங்கள் சிறிது ஆய்வு செய்தோம். அப்போது, இந்த மாநிலத்தை சேர்ந்த இரண்டு மாபெரும் சிந்தனையாளர்களான பெரியார் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் கருத்துகள் எங்களுக்கு கிடைத்தன. உடனடியாக, அவர்களிடமிருந்து இரண்டு முக்கியமான கருத்துகளைப் புரிந்துக் கொண்டோம்.
பெரியாரின் கருத்தை மேற்கோள்காட்டிய ராகுல்
ஒரு மாணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பெரியார் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, பகுத்தறிந்து பார்க்க வேண்டும் என்பதே பெரியாரின் கருத்து. அதேபோல், திருவள்ளுவர் தனது குறளில், தோண்டத் தோண்ட நீர் ஊறுவதுபோல, கற்கக் கற்க அறிவு பெருகும் என்ற கருத்தை எடுத்துரைக்கிறார்.
ஒரு மாணவராக இருப்பதன் அடிப்படைத் தன்மை என்பது ஆர்வம். கேள்வி கேட்பது, அறிவைப் பெறுவதற்கான தாகம், விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் ஆகியவையே ஒரு மாணவரின் அடிப்படையாகும். ஒரு மாணவரிடம் இருக்கும் இந்த ஆர்வம் தான் அவருக்கு வலிமையை அளிக்கிறது. கேள்விகள் கேட்கவும், புதிய விஷயங்களை ஆராயவும், புதிய இடங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளவும் இந்த ஆர்வம் உதவுகிறது.

அதுமட்டுமின்றி, ஒரு புதிய எதிர்காலத்தைப் பற்றியும், தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும், தங்கள் மாநிலத்தின் எதிர்காலத்தைப் பற்றியும், தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் எதிர்காலத்தைப் பற்றியும் கற்பனை செய்து பார்க்கும் ஆற்றலையும் இது வழங்குகிறது. மிக முக்கியமாக, சரியான முடிவுகளைத் தேர்ந்தெடுக்கும் திறனையும் இந்த ஆர்வம் மாணவர்களுக்கு அளிக்கிறது. ஆனால், இந்த ஆர்வம் வெறுமனே உருவாகிவிடுவதில்லை. அதற்கும் ஓர் அடித்தளம் இருக்கிறது.
கேள்வியைக் கேளுங்கள்
ஒரு மாணவரின் ஆர்வத்திற்கான அடித்தளம் எது? அது அவருடைய மொழி, கலாசாரம், வரலாறு, மரபுகள் மற்றும் கற்றல் அனுபவங்கள் ஆகியவையாகும். கேள்விகள் கேட்கவும், புதிய விஷயங்களை ஆராயவும் தேவையான அடித்தளம் இவற்றிலிருந்துதான் உருவாகிறது. இந்த அடித்தளம் இல்லாமல் ஆர்வம் உருவாவது கடினம். கேள்விகளைக் கேட்க முடியாது. வலிமையான எதிர்காலத்தையும். சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க முடியாது.
எனவே, ஆர்வம் என்பது உங்கள் மொழி, கலாசாரம், வரலாறு மற்றும் மண்ணிலிருந்து உருவாகிறது என்று நாம் கூறினோம். நீங்கள் கேள்விகளைக் கேட்பதற்கு இவையே அடிப்படையாக அமைகின்றன. ஆனால், இன்று ஆர்வம் என்பது உங்கள் முன்னேற்றத்திற்கான அடித்தளமாகவும் இருக்கிறது. நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு செயலாக இருந்தாலும், உருவாக்கப்படும். தொழிலாக இருந்தாலும், கட்டமைக்கப்படும். நாடாக இருந்தாலும், புதிய கண்டுபிடிப்புகள், கலை, நடனம், இசை என நீங்கள் சிறப்பாகச் செய்யும் அனைத்துமே நீங்கள் கேட்கும் ஒரு கேள்வியிலிருந்துதான் தொடங்குகின்றன. எனவே, கேள்வி கேட்பதுதான் ஆர்வத்தின் அடிப்படை. அதேபோல், கேள்வி கேட்பதுதான் முன்னேற்றத்தின் அடித்தளமும் ஆகும்.
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
இங்கு நாம் பெரியார் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டோம். பெரியார் ஒரு மகத்தான மனிதராகத் திகழ்ந்ததற்கு காரணம், அவர் அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தினார். ஒவ்வொருவரையும் கேள்வி கேட்டார். எனவே, மனிதகுலத்தின் முன்னேற்றத்தில் கேள்வி கேட்பது மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, ஜனநாயகமே ஆர்வத்திலிருந்தும் கேள்வி கேட்கும் மனப்பான்மையிலிருந்தும் உருவாகிறது.

ஆர்வம் என்பது கேள்விகளைக் கேட்பது. ஜனநாயகம் என்பது கேள்வி கேட்பதற்கான உங்கள் உரிமை. கேள்வி கேட்பதற்கான உங்கள் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கிறது. அதேபோல், உங்களை வழிநடத்துபவர்கள் மற்றும் அரசாங்கத்தை நடத்துபவர்களிடம் இருந்து பதில்களைப் பெறுவதற்கான வாய்ப்பை உங்கள் வாக்குரிமை உறுதி செய்கிறது.
எனவே, ஆர்வத்தின் மீதான தாக்குதல், உங்கள் மொழியின் மீதான தாக்குதல், உங்கள் கலாசாரத்தின் மீதான தாக்குதல் ஆகியவை இந்தியாவின் மீதான தாக்குதல், தமிழ்நாட்டின் மீதான தாக்குதல் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். தமிழ் கலாசாரம், உங்கள் மொழி, உங்கள் வரலாறு, உங்கள் பாரம்பரியம் ஆகியவற்றின் மீது முழுமையான தாக்குதல் நடத்தப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பிரதமர் மோடி, அமித்ஷா மீது குற்றச்சாட்டு
அமித்ஷா தமிழ்நாட்டு மக்களிடம் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறார். தமிழ் கலாசாரம், தமிழ் மொழி, வரலாறு ஆகியவை அவரது மொழி, அவரது வரலாறு, அவரது பாரம்பரியத்தைவிட இரண்டாம் பட்சமானவை என்று வெளிப்படையாகவும், பொதுவெளியிலும் கூறுகிறார். மோடியும், அமித்ஷாவும் ஆர்வத்துடன் கேள்வி கேட்கும் சிந்தனையின் அடித்தளத்தை சிதைக்கிறார்கள்.
முதலாவது, மொழித் திணிப்பு. புதிய கல்விக் கொள்கையின் காரணமாகத் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அது உங்களுக்குச் சொந்தமான பணம்; உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதி. ஆனால், இந்திய அரசு அதை உங்களுக்கு வழங்காமல் தடுத்து வைத்துள்ளது. இரண்டாவது, அதிகாரக் குவிப்பு, நீட் தேர்வின் காரணமாக, எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான இடங்களில் தமிழ் வழியில் படித்த மாணவர்களின் பங்கு குறைந்துள்ளது.

மூன்றாவது, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைப் புகுத்துவது, மாநிலப் பல்கலைக்கழகங்களில் 70 சதவீதப் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் உள்ளன. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார்.
இறுதியாக, சமீபத்திய தாக்குதல் தொகுதி மறுவரையறை. தமிழ்நாட்டைத் தண்டிக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலைக் குறைக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்கள் மீதும், அவர்களது மொழி, பாரம்பரியம், கலாசாரம், வரலாறு ஆகியவற்றின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள். இந்தத் தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக மோடி அச்சம், வெறுப்பு, பிரிவினை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்.
நரேந்திர மோடி, தமிழ் மொழியின் மீதும், தமிழ் வரலாற்றின் மீதும், தமிழ் கலாசாரத்தின் மீதும் தாக்குதல் நடத்துவதை நாம் அனுமதிக்க மாட்டோம். எதற்கும் அனுமதிக்க மாட்டோம். அவர் தமிழ்நாட்டைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்துச் செய்க
நீட் தேர்வை எதிர்த்துப் போராடி உயிரிழந்த மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேசுகையில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் ஒரே கோரிக்கை; நீட் தேர்வை ரத்து செய்வது என்பது ஒரு தேர்வை மட்டும் நீக்குவது அல்ல. நீட் தேர்வு எதையெல்லாம் பிரதிபலிக்கிறதோ, அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகும். வெவ்வேறு பிரச்சனைகள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு பள்ளிக் கல்வி முறைகளைக் கொண்ட மாநிலங்கள் அனைத்தின் மீதும் ஒரே தேர்வைத் திணிப்பது தவறானது.
பள்ளிக் கல்வியில் மறைந்திருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், அனைவருக்கும் ஒரே பொதுத்தேர்வை நடத்தி அதன் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை வழங்கும் முறையையும் எதிர்க்கிறோம். பயிற்சி மையங்களுக்குச் செல்வதைக் கட்டாயமாக்கி, பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் தேர்வு தவறானது. திறமையைவிடப் பணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேர்வு தவறானது. குறிப்பாக, மீண்டும் மீண்டும் தேர்வு எழுதும் மாணவர்கள் உட்பட லட்சக்கணக்கான மாணவர்களின் பல ஆண்டுகால வாழ்க்கையையும் ஆற்றலையும், தகுதி என்ற பெயரில் வீணடிக்கும் முறை தவறானது.
எனவே, உயர்கல்வியில் சேருவதற்கு நியாயமான, அதிகாரப் பரவலாக்கப்பட்ட, மாணவர்களின் உணர்வுகளையும் நலன்களையும் மதிக்கக்கூடிய வழிமுறை வேண்டும் என்பதற்காகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறோம். தற்போது, நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். இதற்கு உங்களுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. தயவு செய்து இந்த இயக்கத்தில் கையெழுத்திட்டு, ஆதரவு அளியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும், கையெழுத்து இயக்கத்தில் ராகுல் காந்தி கையெழுத்திட்டார்.
பிரதமர் மோடியின் அரசியல் ஆதிக்கத்தை முறியடிப்போம்
அதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "எதிர்க்கட்சிகள் மோடி, அமித்ஷா ஆகியோரைச் சுற்றி வளைத்துள்ளன. இந்த நாட்டுக்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களுக்காக மோடி பொறுப்பேற்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம். இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தை யாரும் தாக்கிவிட்டு தப்பித்துச் செல்ல முடியாது. இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்திவிட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் யாரும் தப்ப முடியாது.
அவர் யாராக இருந்தாலும் சரி, இந்தியப் பிரதமராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலையில்லை. அவர்கள் செய்த செயல்களுக்காக அந்த நபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவோம். மாணவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படுவது கவலையளிக்கிறது. ஜனநாயக நாடான இந்தியாவில் குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய மத்திய அரசும், பிரதமர் மோடியும் ஏன் அவற்றைப் பாதுகாக்கத் தவறுகிறார்கள்?
இந்த நாட்டின் மாணவர்களின் உறுதியையும், மக்களின் உணர்வையும் யாராலும் ஒடுக்க முடியாது. ஒருவர் தன்னை எவ்வளவு சக்தி வாய்ந்தவராகக் கருதினாலும், அவரிடம் எவ்வளவு அதிகாரமும், பணமும் இருந்தாலும், இந்த நாட்டின் மக்களின் உணர்வை ஒருபோதும் நசுக்க முடியாது. நாட்டில் தற்போது என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டுமானால், பிரதமர் நரேந்திர மோடி யார் என்பதைச் சற்று புரிந்துகொள்ள வேண்டும். நிதிச் சக்திகளாலும் சர்வதேச சக்திகளாலும், பிரதமர் மோடி சமரசம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அந்தச் சக்திகளே அவரைக் கட்டுப்படுத்துகின்றன.
தற்போது பிரதமர் மோடி தனது அரசியல் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடி வருகிறார். இந்தியாவில் நிலவும் மனநிலையும், மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியும், கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டப் பணிகளும் தற்போது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. டெல்லியில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு மாணவருக்கும், ஒன்றைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
இந்திய ஜனநாயகத்தைச் சீரழித்ததாகவும், ஞானேஷ் குமாரைப் பயன்படுத்தி தேர்தல்களில் முறைகேடு செய்ததாகவும், குற்றம்சாட்டப்படுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வோம். பிரதமர் மோடி நீதியை எதிர்கொள்வதைத் தடுக்க இந்த உலகில் எந்தச் சக்தியாலும் முடியாது என்று உறுதியளிக்கிறேன்.
டெல்லி மாணவர்கள் அனைவருக்கும் நான் கூற விரும்புவது ஒன்றுதான். கவலைப்படாதீர்கள். நீங்கள் நம்பும் கொள்கைகளுக்காகத் துணிந்து நில்லுங்கள். கேள்விகள் கேட்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் மோடியின் அரசியல் ஆதிக்கத்தை முறியடிப்போம்" என சூளுரைத்தார்.
டிவிகே, டிவிகே முழக்கம்
மாலை 05.00 மணிக்கு வர வேண்டிய ராகுல் காந்தி மாலை 06.45 மணிக்கு மேல் தான் வந்ததன் காரணமாக மாணவர்கள் பாதியிலயே சிலர் வெளியேறி சென்றனர். முன்னதாக நடந்த இசை நிகழ்ச்சியின் போது 'டிவிகே, டிவிகே, டிவிகே' என்று மாணவ, மாணவிகள் முழக்கமிட்டால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்தி பேட்டி
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "நாட்டின் இளைஞர்களுக்கு எதிராக பாஜகவும், அதன் குண்டர்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ன செய்தாலும், அவர்கள் செய்த செயல்களுக்கான பொறி அவர்களை நோக்கியே இறுகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பொறியிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது. ஏனெனில், இந்த நாட்டு மக்களுக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், அவர்கள் சதி செய்துள்ளனர். மேலும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், இந்த நாட்டின் இளைஞர்களும் ஒன்றிணைந்து, அவர்களுக்கான இடத்தை மெல்ல மெல்லச் சுருக்கி வருகின்றனர். இதிலிருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது என்பதை மீண்டும் கூறுகிறேன் மீண்டும் வலியுறுத்துகிறேன். அடுத்த கட்டத்தில் அவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு தற்காப்பு நடவடிக்கையும் எடுபடாது.
பிரதமர் மோடி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த நாட்டின் ஜனநாயகத்தை முழுமையாகச் சிதைத்துவிட்டனர். நாட்டின் இதயத்தின் மீதும், ஆன்மாவின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் இந்த நாட்டின் இளைஞர்களும் இந்தச் செயல்களுக்கு எதிராக மிக விரைவில் நீதியைப் பெற்றுத் தருவார்கள். நான் கூறுவதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
டெல்லியில் இன்று தாக்குதலுக்கு உள்ளான சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட இந்த நாட்டின் இளைஞர்களுக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் நிச்சயம் நீதி கிடைக்கும். அவர்களுக்கு நீதி கிடைப்பதை எதிர்க்கட்சிகளும், இளைஞர்களும் உறுதி செய்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

