ETV Bharat / state

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டிற்கு கனமழைக்கான ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 16 முதல் 18ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (IMD)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 12, 2026 at 11:18 AM IST

3 Min Read
Choose ETV Bharat

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் நாளை (அக்.13) தென்கிழக்கு வங்க கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தப் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 15 முதல் 18ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2-3 நாட்களில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை

மேலும், அடுத்த 2-3 நாட்களில் தென்னிந்திய தீபகற்பத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன எனவும், தென்மேற்கு பருவமழை விலகி உடனடியாக வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் வி.ஆர். துரை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, அக்டோபர் 13-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 13, 14 தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக நாளை (அக்.13) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை மறுநாள் (அக்.14) சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை?

அக்டோபர் 15: கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அக்.15 மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்
அக்.15 மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் (IMD Chennai)

ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 16: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அக்.16 மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்
அக்.16 மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் (IMD Chennai)

ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 17: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அக்.17 மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்
அக்.17 மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் (IMD Chennai)
இதையும் படிங்க: வட கிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? எல் நினோ தாக்கம் எப்போது நீங்கும்?

ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற எச்சரிக்கை என்றால் என்ன?

மஞ்சள் நிற எச்சரிக்கை என்பது பொதுவாக முதல்நிலை வானிலை எச்சரிக்கையாகும். இது மிதமான அல்லது அதற்கு சற்று மேலான மழையை குறிக்கிறது.

  • தீவிரம்: மிதமான மழை, இது சாதாரண வாழ்க்கைக்கு சற்று இடையூறாக இருக்கலாம்.
  • அபாய நிலை: குறைந்தபட்ச அளவிலான வெள்ளம் அல்லது நீர்த்தேக்கம் காணப்படும்.
  • நடவடிக்கை: வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை கவனித்துக்கொண்டு, தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும். நீர் தேங்கும் பகுதிகளை சரிபார்க்கவும்.

மஞ்சள் நிறக் குறியீடு, பொதுவாக மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்துகிறது. இவ்வாறான எச்சரிக்கை கிடைக்கும் போது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.