ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: ரயில்வே தேர்வில் சாதிக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் 'லோகோ பைலட்'
ரயில்வே தேர்வுகளுக்கு உதவியும் வகையில், தமிழ் வழியில் ’ரயில்வே கணிதம்’ என்ற வழிகாட்டு நூலை இரண்டு இளைஞர்கள் உருவாக்கி அரசு நூலகங்களுக்கு வழங்கியது குறித்து ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டிருந்தது.

Published : June 3, 2026 at 11:29 AM IST
சென்னை: ரயில்வே தேர்வில் வெற்றி பெற உதவும் வகையில் மாணவர்களுக்கு தமிழ் வழியில் நூல்களை உருவாக்கி வழங்கிய இளைஞர்களுடன், ரயில் ஓட்டுநர் (லோகோ பைலட்) அமுத செல்வனும் இணைந்துள்ளார். ஈடிவி பாரத்தில் வெளியான செய்தியின் தாக்கத்தால் இந்த பொது சேவையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து ரயில்வே தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு உதவும் வகையில், தமிழ் வழியில் ’ரயில்வே கணிதம்’ என்ற வழிகாட்டு நூலினை பாண்டுரங்கன், திருஞானசம்பந்தம் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக உழைத்து உருவாக்கினர்.
சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட (தலா ரூ.600 விலை) இந்த நூல்களை மதுரை, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு நூலகங்களுக்கு வழங்கினர்.
இதுகுறித்த செய்தி கடந்த டிசம்பர் 15-ம் தேதி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் வெளியானது. இந்த செய்தியை பார்த்த சென்னை ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் லோகோ பைலட் அமுத செல்வன், மேற்கண்ட இளைஞர்களோடு இணைந்து, ரயில்வே பணிகளை தமிழ்நாட்டு மாணவர்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்.
இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “ஐடிஐ டிப்ளமோ படிக்கின்ற மாணவர்களுக்கு ரயில்வே தேர்வுகள் குறித்து ஏதேனும் உதவிகள் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுதுதான், ஈடிவி பாரத் ஊடகத்தில் ரயில்வே தேர்வுகளுக்காக பாண்டுரங்கன் மற்றும் திருஞானசம்பந்தம் என்ற இரண்டு இளைஞர்கள் தமிழ் வழியில் ரயில்வே தேர்வு வழிகாட்டி உருவாக்கி, அந்நூலை அரசு நூலகங்கள் வாயிலாக இலவசமாக வழங்கிய செய்தியை பார்த்தேன்.
இதனை அடுத்து நானும் எனது சக லோகோ பைலட் சேகர் மற்றும் என்னுடன் டிப்ளமோ பயின்ற திருச்சி சேர்ந்த நண்பர் ஒருவர் ஆகியோர் இணைந்து முதற்கட்டமாக, ரூ.25 ஆயிரத்துக்கு இந்த வழிகாட்டு நூல்களை வாங்கி, சென்னையில் உள்ள அம்பத்தூர் ஐடிஐயில் பயிலும் மூன்று செட் மாணவர்களுக்கு வழங்கினோம்.
இந்த ஐடிஐ-யின் முதல்வரும் இயக்குனரும் எங்களுக்கு நல்ல ஊக்கம் தந்தனர். இது போக, அந்த ஐடிஐயில் இறுதியாண்டு பயிலும் அனைத்து துறை மாணவர்களுக்கும் நானும் பாண்டுரங்கனும் ஊக்கமளிப்பு நிகழ்ச்சி நடத்தினோம். அந்த நிகழ்ச்சியை மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்” என கூறினார்.
ஐடிஐ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி
தொடர்ந்து பேசிய அவர், “இதற்கு அடுத்தபடியாக கிண்டி ஐடிஐ-யில் ஃபிட்டர் மற்றும் மோட்டார் வெகிகிள் டிரேடு பயிலும் மாணவர்களுக்கும் ரயில்வே பணிகள் குறித்த ஊக்கப் பயிற்சியை வழங்கினோம். ரயில்வே தேர்வுகளுக்கு விண்ணப்பம் அனுப்புவது தொடங்கி அந்தத் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்வது, எப்படி எழுதுவது என்பது குறித்து முழு பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் அனைவருக்கும் சென்னை ஐசிஎஃப்-இல் ஒரு நாள் நேரடி கள ஆய்வு பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்த பயிற்சிகளுக்கு பிறகுதான் ரயில்வே பணிகள் குறித்த ஆர்வம் அந்த மாணவர்களுக்கு வந்தது. இதில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ரூ.1,250 மதிப்புள்ள ரயில்வே வழிகாட்டி நூல்களை ரூ.500க்கு வழங்கினோம்.

ரயில்வே தேர்வுகளுக்கு தற்போது மாணவர்கள் முன்வந்து முயற்சி எடுக்கத் தொடங்கி இருப்பது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
மேலும், “இனி வருங்காலங்களில் ஐடிஐ மற்றும் டிப்ளமோ பயின்ற மாணவர்களுக்குதான் நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உள்ளது. அடுத்து ஐந்தாண்டுகளில் அந்த நிலை உருவாகும் என நாங்கள் நம்புகிறோம். ஆகையால், இதற்காக ஒத்துழைப்பு நல்கி வரும் ஐடிஐ, பாலிடெக்னிக் நிர்வாகிகளுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த முயற்சியை தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் ஊடகத்திற்கு நன்றி
இதுகுறித்து ரயில்வே தேர்வு வழிகாட்டி பாண்டுரங்கன் கூறுகையில், ”ஈடிவி பாரத் ஊடகத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. அவர்கள் வெளியிட்ட ஒரு செய்தி தற்போது தமிழக ரயில்வே தேர்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் நான் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள ஐடிஐ பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக சென்று மாணவர்களுக்கு ரயில்வே தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக நாங்கள் உருவாக்கிய ரயில்வே தேர்வு வழிகாட்டி மற்றும் கணித நூல்களை மதுரை, சேலம், திண்டுக்கல் மாவட்ட நூலகங்களுக்கு இலவசமாக வழங்கினோம். இந்த செய்தி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் வெளியானதை பார்த்து சென்னை கோட்டத்தில் பணியாற்றும் லோகோ பைலட் அமுத செல்வன், என்னை தொடர்பு கொண்டு, எங்களுடைய விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இணைந்து செயலாற்றி வருகிறார்.
ரயில்வே துறையில் நிறைந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து தமிழ்நாட்டு மாணவர்கள் அறியாத நிலையில் உள்ளனர். அந்த அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக கொல்லிமலை, கருமந்துறை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐடிஐ-களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினேன்.
அதே போன்று ரயில்வேயில் பணிபுரிகின்ற நீங்களும் உங்கள் நண்பர்களும் ஐடிஐ மாணவர்களுக்கு நடைபெறும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசினால் நன்றாக இருக்கும் என தெரிவித்தேன். அமுத செல்வனும் தனது நேரத்தை ஒதுக்கி அம்பத்தூர் மற்றும் கிண்டி ஐடிஐ மாணவர்களிடம் தனது சேவையை தொடங்கியுள்ளார்.
மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேனா, திருக்குறள் புத்தகம் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி வருகிறார். மதுரை கோட்டத்தில் தற்போது பணியாற்றுகின்ற லோகோ பைலட் கருப்பசாமி எழுதிய 'நான் லோகோ பைலட் ஆன கதை' என்ற நூலையும் மாணவர்களுக்கு வழங்கி ஊக்குவிக்கிறார். தமிழக முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்” என தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே ரயில்வே போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராவது தான் சரியானதாக இருக்கும் என அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து திருஞானசம்பந்தம் கூறுகையில், ”நான் திண்டுக்கல்லில் ஐடிஐ முடித்துவிட்டு, பாண்டுரங்கனுடன் இணைந்து ரயில்வே தேர்வு எழுத மாணவர்களுக்காக வழிகாட்டும் பயிற்சிகளை அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கும், ஐடிஐ மாணவ - மாணவியருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்குவித்து வருகிறோம். தமிழக மாணவர்கள் அதிக அளவில் ரயில்வே பணிகளுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இதனை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறோம்.
இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை வழங்கியுள்ளோம். ரயில்வே தேர்வுகள் தற்போது மாதந்தோறும் நடைபெற்று வருகின்றன. அதனை தமிழ்நாடு மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

