தமிழ்நாடு சட்டப்பேரவை: 9:43 மணிகள் நடைபெற்று வரலாற்று சாதனை - சபாநாயகர் பெருமிதம்

Published : August 27, 2026 at 9:45 AM IST
|Updated : August 27, 2026 at 10:49 PM IST
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் 8வது நாளான இன்று கேள்வி - பதில் நேரத்துடன் அவை தொடங்கியது. இன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் இடம்பெறுகிறது. தொடர்ந்து 2026-27ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் சமூக நீதித் துறை, பிறபடுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்ரும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இடம்பெறுகிறது.
இதுவரை 7 நாட்கள் நடைபெற்ற விவாதங்களில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைகள், விளையாட்டு மேம்பாடு, பொதுப்பணி, மனிதவள மேம்பாடு துறைகள், நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, நீதி நிர்வாகம், எரிசக்தி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறைகள், இந்து சமய அறநிலையத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை, இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் இடம்பெற்றன.
LIVE FEED
மேகமலை மக்களை அரசு காக்க வேண்டும் - இ.கம்யூ எம்எல்ஏ கோரிக்கை
பேரவையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பேசினார். அப்போது அவர்,"வனவிலங்குகளைப் பாதுகாக்க சட்டம் இருப்பது போல் மக்களைப் பாதுகாக்கவும் சட்டம் இருக்கிறது. அதனை தமிழக அரசு உணர்ந்து, நீதிமன்றத்தில் வாதிட்டு மேகமலை பழங்குடியின மக்களைக் காக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
எம்ஜிஆர் கொடுத்த திருமண பரிசு: பேரவையில் நினைவுகூர்ந்த சபாநாயகர்
பேரவையில் இன்று பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்,"என் திருமணம் 1985-ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெற்றபோது எம்.ஜி.ஆ.ரால் வர முடியவில்லை. பின்னர் நானும் என் மனைவியும் கடிதம் கொடுத்தோம். அந்த கடிதத்தில், ' நாடார் கிறிஸ்தவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து விட்டீர்கள், கிறிஸ்தவ வன்னியர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அப்படி சேர்ப்பது தான் எங்கள் திருமண பரிசு' என்று எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தோம்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதிற்கும் முன்னுதாரணமான ஆணையாக இந்துக்களாக இருந்து கிறிஸ்தவராக மாறும் அனைவரையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர் என தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. அந்தந்த அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் இடம் கொடுக்கப்பட்டது.' என்றார்.
எம்எல்ஏக்களுக்கு அரசு பேருந்து வேண்டாம் - தமிமுன் அன்சாரி
எம்எல்ஏ.க்கள் சட்டமன்ற விடுதியில் இருந்து பேரவை வருவதற்கு அரசு பேருந்து வேண்டாம்; அது வீண் செலவு, சிறிய வேன் போதும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி சட்டமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து அவர் பேரவையில் பேசும்போது, "சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து தினமும் 20 முதல் 30 எம்.எல்.ஏக்கள் அரசு பேருந்தில் சட்டபேரவை வருகிறோம். எனக்கு சொந்தமாக கார் உள்ளது. ஆனாலும் ஏன் அரசு பேருந்தில் பேரவை வருகிறேன் என்று கேட்டால் பேருந்தில் வரும்போதுதான் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களோடு கட்சி சார்பின்றி கலந்துரையாட முடிகிறது. பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு பேருந்துக்கு 40 இருக்கைகள் உள்ளன. மொத்தம் 5 பேருந்துகள் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து தலைமைச் செயலகம் வருகின்றன.எதற்கு இந்த வீண் செலவு. பெரிய பேருந்துகளை வழங்குவதற்கு பதிலாக 4 சிறிய வேன்களை அனுப்பினால் 30 முதல் 40 பேர் வருவதற்கு சரியாக இருக்கும்.இதனை சபாநாயகர் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
9:43 மணிகள் நடைபெற்ற சட்டப்பேரவை - வரலாற்று சாதனை என சபாநாயகர் பெருமிதம்
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதம் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார். மேலும், தமக்கு தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அன்றைய தினம் ஏறத்தாழ 9 மணிகள் 43 நிமிடங்களுக்கு தொடர்ந்து எந்த இடையூறும் இல்லாமல் அவை நடைபெற்றதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி என்றும் அவர் கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கான அறிவிப்புகள்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அமைச்சர் சம்பத்குமார் அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. சென்னையில் புதிதாக சிறுபான்மையினர் மகளிர் கல்லூரி
சென்னை மாநகரில் சிறுபான்மையின மாணவியர் பட்டப்படிப்பு பயில ஏதுவாக, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் மூலம் ரூ.2.45 கோடியில் புதிய சிறுபான்மையினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சிறுபான்மையின ஏழை, எளிய மாணவியரின் உயர்கல்வி வாய்ப்புகள் மேம்படும்.
2. தமிழ்நாடு வக்ஃப் வாரிய நிர்வாக மானியம் ரூ. 5 கோடியாக உயர்வு
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளை மேற்கொள்ள, தற்போது வழங்கப்படும் ரூ.2.50 கோடி நிர்வாக மானியம் ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.
3. வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்திற்கு ரூ.40 கோடியில் புதிய கட்டடம்
பழுதடைந்துள்ள தற்போதைய கட்டடத்திற்குப் பதிலாக, நவீன வசதிகளுடன் கூடிய புதிய தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகக் கட்டடம் ரூ.40 கோடியில் கட்டப்படும்.
4. வாழ்வாதாரத்தை மேம்படுத்திட 5000 தேய்ப்பு பெட்டிகள் (Iron Boxes)
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட நடப்பாண்டில் 5000 பயனாளிகளுக்கு தேய்ப்புப் பெட்டிகள் (Iron Boxes) ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
5. சமூகநீதி பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்வு
சமூகநீதி பள்ளி விடுதிகளில், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 29 பள்ளி விடுதிகள், கல்லூரி மாணவ, மாணவியரின் தங்குமிடத்திற்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ. 6.42 கோடியில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும்.
6. இஸ்லாமிய சமூக மாணவியரின் இளங்கலைப் படிப்புக் கட்டணத்தை அரசே ஏற்கும்
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் உள்ளிட்ட இளங்கலைப் பட்டப்படிப்புகளில் பயிலும் முஸ்லிம் மாணவியரின் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அரசே ஏற்கும். முதலாம் ஆண்டு மாணவியருக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்படும்.
7. சமூகநீதி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்கு கொசுவலை
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,238 சமூகநீதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் சுகாதாரமான வாழ்விடச் சூழலை உறுதி செய்யும் நோக்கில், விடுதிகளில் உள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் ரூ.26.85 கோடியில் தரமான கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
8. 9, 10-ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ. 2,000 கல்வி உதவித்தொகை
1 முதல் 8-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகைத் திட்டம் தற்போது 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவியருக்கும் நீட்டிக்கப்பட்டு, ஆண்டிற்கு ரூ.2,000 வீதம் வழங்கப்படும். இதன்மூலம் 41,384 மாணவியர் பயன்பெறும் வகையில் ரூ.8.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
9. ஆங்கில பேச்சாற்றல் (Spoken English) பயிற்சி
உலகளாவிய கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சூழலுக்கு மாணாக்கர்களை தயார்படுத்த, சமூகநீதி பள்ளி விடுதிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 35,000 மாணவ, மாணவியருக்கு ஆங்கில பேச்சாற்றல் (Spoken English) பயிற்சி மற்றும் அதற்குத் தேவையான பயிற்சிப் பொருட்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும்.
10. சமூகநீதி விடுதிகளுக்கு சுற்றுச்சுவர்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சமூகநீதி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி கற்கும் சூழலை உறுதி செய்யும் நோக்கில், 95 சமூகநீதி மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு ரூ.12.61 கோடியில் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்படும்.
11. 10,000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்
சிறுபான்மையினர் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தகவல் தொழில் நுட்பம் (Information Technology), தானியங்கி வாகனங்கள் (Auto Mobile), ஆடை வடிவமைப்பு (Apparel designing), அழகு சாதனப் பொருட்கள் மற்றும் நலவாழ்வு (Beauty and Wellness), தையல் வேலைப்பாடு (Embroidery) மற்றும் வேளாண்மை (Agriculture) போன்ற பல்வேறு பயிற்சிகள் ஆண்டுக்கு 2,500 நபர்கள் வீதம் நான்கு ஆண்டுகளில் மொத்தம் 10,000 நபர்களுக்கு வழங்கப்படும்.
12. நவீன சிகைதிருத்தும் அழகுநிலையம் (MODERN SALOON SHOP) அமைக்க நிதியுதவி
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக நவீன சிகைதிருத்தும் அழகுநிலையம் (MODERN SALOON SHOP) அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.1.50 இலட்சம் வீதம் 100 பயனாளிகளுக்க ரூ.1.50 கோடி நிதியுதவி வழங்கப்படும். தகுதியான 100 பயனாளிகளுக்கு டாப்செட்கோ மூலம் கடனுதவி ரூ.5 இலட்சம் வழங்கப்படும்.
13. சமூகநீதி பள்ளி விடுதிகளுக்கான பராமரிப்பு நிதி உயர்வு
பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு நிதி சமூகநீதி பள்ளி விடுதிகளுக்கு ரூ.50,000/-லிருந்து அதிகபட்சமாக ரூ.75,000/-ஆகவும் கல்லூரி விடுதிகளுக்கு ரூ.50,000/-லிருந்து அதிகபட்சமாக ரூ.1,00,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு மொத்தம் 4.2கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்
14. சமூகநீதி விடுதிகளில் அடிப்படை வசதிகள்
அடிப்படை வசதிகளை உறுதிசெய்யும் நோக்கில், 20 கல்லூரி விடுதிகளுக்கு இன்வெர்ட்டர் (Inverter), குளிர்சாதனப்பெட்டி (Refrigerator), தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் (Water Purifiers), 940 பள்ளி விடுதிகளுக்கு இன்வெர்ட்டர் (Inverter) மற்றும் தண்ணீர் சுத்திகரிப்புக் கருவிகளும் (Water Purifiers) வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த 5.25.76 செலவினம் ஆகும்.
15. மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் சுயதொழில் திறனை மேம்படுத்தி அவர்களின் குடும்ப வருமானத்தை உயர்த்தும் நோக்கில், தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள 10,000 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். இதற்கென ரூ.6கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
16. மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலவாரியம் (MBC Welfare Board)
மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கென மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் (MBC Welfare Board) நடப்பாண்டில் ரூ.3 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்படும். உறுப்பினர்களுக்கு பிற தொழிலாளர் நல வாரியங்களில் வழங்கப்படும் உதவிகளைப் போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
சிறுபான்மையினர் நலத்துறைக்கான அறிவிப்புகள்
சிறுபான்மையினர் நலத்துறை அறிவிப்புகளை அமைச்சர் ஷாஜஹான் வெளியிட்டார்.
1. சிறுபான்மையின மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆண்டுக்கு 2,500 பேர் வீதம் மொத்தம் 10,000 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
2. கடலூர், மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.
3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.8.28 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
4. இஸ்லாமிய சமூக மாணவியர் இளங்கலை உயர்கல்வியைத் தொடரும் வகையில், அரசு நிர்ணயிக்கும் கட்டணத் தொகையை அரசே வழங்கும் திட்டம் தொடங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
5. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 10 மாவட்டங்களில் ரூ.4.45 கோடி செலவில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.
6. மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் மாவட்ட கள ஆய்வுகளுக்கான செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
7. தொன்மையான தேவாலயங்களை பழமை மாறாமல் பழுதுபார்த்து சீரமைக்க நடப்பாண்டில் ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும்.
8. முஸ்லிம் வக்ஃப் மற்றும் கிறித்துவ வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வட்டியில்லாக் கடன் வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.100 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
9. தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்திற்கு ரூ.40 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.
10. தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மூலம் சென்னையில் சிறுபான்மையினர் மகளிர் கல்லூரி புதிதாக தொடங்கப்படும்.
11. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.
சமூக நீதித்துறைக்கான அறிவிப்புகள்
சமூக நீதித்துறை சார்பில் முக்கிய அறிவிப்புகளை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார்.
1. விடுதி மாணாக்கருக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்வு
தரமான, சத்தான உணவு வழங்க பள்ளி விடுதி மாணாக்கருக்கு மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 1400-ல் இருந்து ரூ. 1800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கருக்கு ரூ. 1500-ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
2. “உறையுள்" பழங்குடியினர் குடியிருப்பு திட்டம்
வீடற்ற பழங்குடியினருக்கு 2000 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் "உறையுள்" - பழங்குடியினர் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
3. "இனிய இல்லம்" குடியிருப்புத் திட்டம்
வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்கள், தகுதியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 5,000 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
4. அகம் திட்டம் - தூய்மைப்பணியாளர்களுக்கு சொந்த வீடு
தூய்மைப் பணியாளர்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றான, பாதுகாப்பான குடியிருப்பை உறுதிசெய்யும் வகையில், வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க "அகம்" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2,500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.
5. சரிநிகர் - சம வேலை வாய்ப்பு திட்டம்
தனியார் நிறுவனங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை அதிகளவில் பணியாளர்களாக பணி அமர்த்தும் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் "சரிநிகர்" சம வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்படும்.
6. பூம்பொழில் - தங்கும் வசதிகள்
மலைப்பகுதிகளில் பழங்குடியின வாழ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளம், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் வாழ்வியலை கண்டு மகிழும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த "பூம்பொழில் தங்கும் வசதிகள்" ஏற்படுத்தப்படும். உள்ளூர் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வழங்கப்படும்.
7. புவிசார் குறியீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் விளைபொருட்களின் தனித்தன்மையை பேணிப்பாதுகாக்கும் பொருட்டு புவிசார் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
8. சிறகுகள் - பல்திறன் குழுக்கள்
பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணாக்கரின் கவனச்சிதறலை தவிர்க்கவும், விளையாட்டு மற்றும் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையிலும் அனைத்து விடுதிகளிலும் "சிறகுகள்" பல்திறன் குழுக்கள் உருவாக்கப்படும்.
9. 150 சமூக நீதி விடுதிகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர் படிப்பதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு 150 சமூக நீதி விடுதிகள் ரூ. 160 கோடியில் கட்டப்படும்.
10. ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை ஊடகத் துறையில் ஊக்குவித்து, அவர்களின் திறன்களையும் பங்கேற்பையும் மேம்படுத்தும் வகையில், ஊடகத்துறை படிப்புகளான இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் பயிலும் மாணாக்கருக்கு உட்பயிற்சி (Internship) உதவித்தொகை வழங்கும் "ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்" செயல்படுத்தப்படும்.
11. 100 புதிய வகுப்பறைகள்
சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கு ரூ.30 கோடியில் 100 புதிய வகுப்பறைகள் கட்டித் தரப்படும்.
12. சமத்துவ வீட்டு மனைத் திட்டம்
சொந்தமாக வீட்டுமனை அற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வீட்டுமனை வழங்கும் "சமத்துவ வீட்டு மனைத் திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.
13. முல்லை - மதிப்பு கூட்டல் அலகுகள்
தமிழ்நாடு முழுவதுமுள்ள பழங்குடியின மக்கள் அறுவடை செய்யும் விவசாயப் பொருட்கள் மற்றும் சேகரிக்கும் சிறு வனப்பொருட்களை மதிப்பு கூட்டுதல் மேற்கொள்ள 25 மதிப்பு கூட்டல் அலகுகள் (Value Addition Units) ரூ.12.50 கோடி மதிப்பில் நிறுவப்படும். பழங்குடியின விளைபொருட்கள் 'முல்லை' என்ற தனித்த அடையாளத்துடன் (Brand) சந்தைப்படுத்தப்படும்.
14. சென்னையில் "டிஜிட்டல் கற்றல் மற்றும் புதுமை மையம்"
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கரின் கல்வித் திறன், டிஜிட்டல் அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில், சென்னை நந்தனத்தில் "டிஜிட்டல் கற்றல் மற்றும் புதுமை மையம்" (Digital Learning & Innovation Centre) உருவாக்கப்படும்.
15. தடம் - பழங்குடியினர் மரபு நடை (TN Tribal Trails – Thadam)
பழங்குடியின மக்களின் கலாச்சாரம் பண்பாடு, மற்றும் வாழ்க்கை நடைமுறைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு, "தடம்" ழங்குடியினர் மரபு நடை எனும் கலாச்சார பயண நிகழ்ச்சியை ஐந்து மாவட்டங்களில் புதிதாக ஏற்படுத்துவதன் மூலம், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.
16. அம்பேத்கர் படிப்பகம்
மாணாக்கர் தனது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் "அம்பேத்கர் படிப்பகம்" ஏற்படுத்தப்படும். இதன் மூலம், விடுதி மாணாக்கரிடையே வாசிப்புப் பழக்கம், அறிவுத் தேடல், சுயகற்றல் மற்றும் அறிவாற்றலை வளர்த்து, கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குவதற்கான கற்றல் சூழல் உருவாக்கப்படும்.
17. சமூக நீதி விடுதி பராமரிப்பு தொகை உயர்வு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர் தங்கும் பள்ளி விடுதிகளின் ஆண்டு பராமரிப்பு தொகை ரூ. 50,000-லிருந்து ரூ.75,000-ஆகவும், கல்லூரி விடுதி பராமரிப்பு தொகை ரூ. 50,000-லிருந்து ரூ.1 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.
18. "ஏற்றம்" தூய்மைப்பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம்
தூய்மைப்பணியாளரின் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு "ஏற்றம்" -தூய்மைப்பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, வங்கி கடனுடன் 20 சதவீத மானிய உதவி வழங்கப்படும். இத்திட்டம், ரூ.50 கோடி கோடியில் நடைமுறைப்படுத்தப்படும்.
19. பழங்குடியினர் மொழிகள் சான்றிதழ் வகுப்புகள்
பழங்குடியின மொழிகள் குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், மாணாக்கரிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படும்.
20. சிகரம் - சிறப்பு விளையாட்டு திறன் மேம்பாட்டு திட்டம்
இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், குதிரையேற்றம் (Equestrian), துடுப்புப் படகு ஓட்டுதல் (Rowing), மற்றும் காற்றலைச் சறுக்கு விளையாட்டு (Wind surfing) ஆகிய பயிற்சிகள். சென்னை, இராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் கோவளம் ஆகிய இடங்களில் சிறப்புப் பயிற்சி அளிக்கும். "சிகரம் - சிறப்பு விளையாட்டு திறன் மேம்பாட்டு திட்டம்" அறிமுகப்படுத்தப்படும்.
21. வளமிகு வேளாண்மை உதவித் திட்டம்
ஆதிதிராவிட விவசாயிகள் உற்பத்தியை பெருக்க ஏதுவாக, 90 சதவீதம் மானியத்துடன் கூடிய விரைவு மின் இணைப்பு வழங்கும் "வளமிகு வேளாண்மை உதவித் திட்டம்" செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
22. விடிவெள்ளி - மகளிர் வாழ்வாதார திட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக "விடிவெள்ளி - மகளிர் வாழ்வாதார திட்டம்" செயல்படுத்தப்படும்.
23. கோயம்புத்தூரில் - வணிக மையம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், உரிய வாய்ப்புகளை உருவாக்கவும், வருவாய் ஈட்டவும் கோயம்புத்தூரில் வணிக மையம் கட்டப்படும்.
நீக்கப்பட்ட பகுதிகள் இல்லாமல் பேரவை நேரலையை ஒளிபரப்புவது குறித்து ஆய்வு - சபாநாயகர்
தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ வேலு, சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதும் நேரலை செய்யப்படுவதால், அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிற பகுதிகளை பத்திரிகைகளில் போடாவிட்டாலும், சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இதனால் அவையின் மாண்பு போகிறது. உரிமை மீறல் குழு அமைப்பதற்க்கு முன்பாக அவையில் நீங்கள் இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இரண்டு உரிமை மீறல் புகார்கள் அளித்துள்ளேன். அதனை இப்போதே ஆய்வுக்கு எடுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் (சபாநாயகர்) சொல்வதையே மதிக்கவில்லை என்றால் யார் சொன்னால் மதிப்பார்கள்?” என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், “நீங்கள் (எ.வ வேலு) கூறுவது ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படும். இன்னொரு கருத்தும் வந்துள்ளது. அமெரிக்காவில் நீக்கப்பட்ட விஷயங்கள் வெளியே வராமல் எப்படி ஒளிப்பரப்புவது என்பதை அறிந்து ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் இங்கேயும் நீக்கப்பட்ட பகுதி இல்லாமல் நேரலை வழங்குவதற்காக ஆய்வு நடத்தப்படுகிறது” என்று பதிலளித்தார்.
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர் அருண்ராஜ்
தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் அவற்றை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி ராமச்சந்திரன், பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
மேலும் தமிழ்நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாகவும், கடந்த திமுக ஆட்சியில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டதாகவும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு முகாமை நடத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ், “ஆண்டுதோறும் பருவமழையின்போது டெங்கு காய்ச்சல் வருவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 26 வரை 12,856 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதில் 7 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 33 பேர், கோயம்புத்தூரில் 26 பேர், திருவள்ளூரில் 18 பேர், சேலத்தில் 15 பேர், செங்கல்பட்டு, புதுக்கோட்டையில் தலா 9 பேர், திருப்பட்டூரில் 8 பேர், ராணிப்பேட்டை, வேலூரில் தலா 6 பேர் இறந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல் குறித்து தினந்தோறும் கண்காணித்து வருகிறோம். பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிகள் குவியும் இடங்கள், கொசு உற்பத்தியாகும் இடங்கள் ஆகியவை குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதிர் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு பணியாளர்களை அதிகமாக நியமித்து அவர்களுக்கான கொசு ஒழிப்பு மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.
தினம்தோறும் 5805 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், வீடு வீடாகச் சென்றும் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்தேகத்திற்குரிய நோயாளிகளுக்கு டெங்கு பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்பாக மாவட்ட இணை இயக்குநர்கள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு நோய்களை தடுக்க ஆயத்தமாக உள்ளது. கொசுவை ஒழிக்கும் வகையில் மழைநீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மக்களின் ஒத்துழைப்போடு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நேபாளம் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் ராஜமோகன் விளக்கம்
சட்டப்பேரவையில் நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்டெடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கம் பின்வருமாறு:-
“நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 384 பயணிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 291 பேர் வெளிநாட்டவர்கள், 91 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 75 பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர். 209 மொத்தமாக மீட்கப்பட்டுள்ளனர். அதில், தரைவழியாக குழுக்களை அனுப்பி 93 பேரும், ஹெலிகாப்டர்கள் மூலமாக 114 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். 35 வாகனங்கள் செல்லக்கூடிய பாலங்களும், 45 தொங்கு பாலங்களும் ஒரே நொடியில் அடித்து செல்லப்பட்டன. 40 கிலோ மீட்டர் சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
நேபாளத்தின் ராணுவம், காவல்படை, ஆயுத காவல்படை உள்ளிட்ட தனியார் அமைப்பினர் சேர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக தேடுதல் மற்றும் நிவாரண மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் செய்துதரப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் சுற்றுலா போயுள்ளனர். அங்கு மொத்தமாக 103 தமிழர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இயங்கி வரும் சூப்பர் யாத்ரா டூரிஸ்ட் சர்வீஸ் என்ற நிறுவனம் மூலமாக நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதில் கடலூர் மாவட்டத்திலிருந்து 11 பேர், கிருஷ்ணகிரியிலிருந்து 5 பேர், தஞ்சாவூரிலிருந்து 16 பேர், தருமபுரியிலிருந்து ஒருவர், திருச்சிராப்பள்ளியிலிருந்து 4 பேர், திருவண்ணாமலையிலிருந்து ஒருவர், திருவாரூரிலிருந்து 2 பேர், நாமக்கல்லிலிருந்து ஒருவர், மயிலாடுதுறையிலிருந்து 7 பேர், சென்னையிலிருந்து 6 பேர் என மொத்தமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 54 பேர், புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தமாக 57 பேர் கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இதில் 20 பேர் திமுரே ஆம்டு போலீஸ் ஃபோர்ஸ் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை காத்மாண்டு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொறு மணி நேரத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாறி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் 34 பேரின் தகவல்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வேகமாக 54 தமிழர்களை விரைவில் தாயகம் மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சென்னையிலிருந்து மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற நிறுவனம் மூலம் 49 பேர் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இவர்களை கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை சார்பில் 24 மணிநேர கட்டணமில்லா சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை கண்டறிய அவர்களுடைய குடும்பத்தார் இந்தியாவிலிருந்து தொடர்புகொள்ள 18003093793 என்ற எண்ணுக்கும், வெளிநாட்டிலிருந்து தொடர்புகொள்ள, +918069009900, +918069009901 ஆகிய கட்டணம் இல்லா உதவி எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டு அறையை 9289516712 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இந்த அவசர உதவி எண்களுக்கு, இதுவரை 937 அழைப்புகள் வந்துள்ளன. இதன்மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் முதலமைச்சர் தலைமையில், இன்று நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்பது குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்” என தெரிவித்தார்.
அதிகாரிகள் இருக்கையில் அமர வேண்டும் - சபாநாயகர்
துறை செயலாளர்கள் அவையிலிருந்து குறிப்புகளை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் கூறியதற்கு இறுதியாக சபாநாயகர் பதிலளித்தார்.
“கடந்த காலத்திலும் திமுக ஆட்சியிலும் இதுபோன்று நடைப்பெற்றுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் துரை முருகன் பேசியதை படிக்கிறேன். இந்த அவை சர்வதிகாரம் கொண்டது. ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அவையின் அனுமதி பெற வேண்டும். அவையில் பேசும் உறுப்பினர்கள் பொறுப்பு வாய்ந்தவர்கள். இவற்றைக் கேட்டு இலாக்க செயலாளர்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இது நல்ல பழக்கம் இல்லை. அதிகாரிகள் அவைக்கு வர வேண்டும் என கூறினார்.
இதன் பின்னர் அப்போதைய பேரவை தலைவர் பேசும்போது, அவை முன்னவர் சொன்னதை ஏற்று அதிகாரிகள் அவைக்கு வர வேண்டும் எனக் கூறி முடித்தார்.
இதையே நானும் சொல்கிறேன். முன்பு நடந்தது போல் இல்லாமல் அதிகாரிகள் இருக்கையில் அமர வேண்டும்” என்றார்.
துறைச் செயலாளர்கள் அவையில் இருக்க வேண்டும் - உதயநிதி வலியுறுத்தல்
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், கேள்வி நேரம் நடைப்பெற்றது. 5 துறை சார்ந்த கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். ஆனால் கேள்வி நேரம் நடைப்பெறும்போது துறை சார்ந்த செயலாளர்கள் அவையில் இருந்து குறிப்பு எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் கூறினார்.
தொடர்ந்து, “நாங்களும் அனைத்து கட்சித் தலைவர்களும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். ஆனால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்பாகவே அமைச்சர் விளக்கம் தரவேண்டும் என சொல்கிறார். அதை நீங்கள் அனுமதிக்கிறீர்கள். அதனை கரூர் சம்பவத்துடன் இணைத்து பேசுவது சரியாக இருக்குமா என தெரியவில்லை.
அப்போது, கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் அவையிலிருந்து பேசினார். ஆனால் இன்று முதலமைச்சரும் அவையில் இல்லை. தலைமைச் செயலாளரும் இல்லை. அதனை கவனத்தில் கொண்டு, எந்த துறையின் சார்பாக பேச உள்ளமோ, அதன் செயலாளர்கள் இருக்க வேண்டும் என்று நீங்கள் அறிவுறுத்த வேண்டும்” என்றார்
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “முன்பிருந்த நடைமுறை வேறு. இப்போது சட்டமன்றம் நேரலையில் செல்கிறது. பக்கத்து அறையில் வார் ரூம் இருக்கிறது. அங்கு அனைத்து செயலாளர்களும் அமர்ந்து நேரலையில் பார்த்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.
இதன் பின்னர் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என் நேரு, “நேரலை எப்போதும் இருப்பது தான். ஆனால் துறை செயலாளர்கள் இங்கிருந்து குறிப்புகளை எடுத்துக்கொள்வார்கள். அது முடியும் என்றால் முடியும், இல்லை என்றால் இல்லை எனக் கூறுங்கள். துறை செயலாளர்கள் அவசியம் இருக்க வேண்டும். முதலமைச்சர் இல்லையென்றால் தலைமைச் செயலாளராவது இருக்க வேண்டும்” என்றார்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை - உறுப்பினர்கள் வலியுறுத்தல்
நேபாள வெள்ளப்பெருக்கு சம்பவம் மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன், “இது ஒரு துயரமான செய்தி. இதில் மத்திய அரசு முழுமையாக ஈடுபட்டு வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சரை பிரதமர் அழைத்து சில நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லி, அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈஷாவிலிருந்து நிறைய தமிழர்கள் நேபாளம் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஷாவைச் சேர்ந்த சத்குரு, தமிழர்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். அதனால் மத்திய மாநில அரசுகள் இணைந்து தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தமிமுன் அன்சாரி, நேபாளத்திற்குச் சுற்றுலா சென்றவர்களில் 11 பேர் தனது சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், முழுமையான தகவல்கள் வராததால் அவர்களுடைய குடும்பத்தினர் பதைபதைப்பாகவும் கவலையாகவும் இருக்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுடன் இணைந்து, அவர்களை பாதுகாப்பாக கூட்டிவர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
உறுப்பினர் ஜவாஹிருல்லா, “நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
காங்கிரஸ் உறுப்பினர் தாரகை கட்பட், “வெள்ளப்பெருக்கில் சிக்கிய தமிழர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக ஒரு தனி ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்து, அங்கே அனுப்பி சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
நேபாள வெள்ளப்பெருக்கு - எதிர்க்கட்சி கவன ஈர்ப்பு தீர்மானம்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். அவர் பேசுகையில், “நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 160 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக செய்திகள் வருகின்றன. நேபாளம் சென்ற குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியவில்லை என அவர்களது உறுப்பினர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழ் மக்கள் எத்தனை பேர் சிக்கி உள்ளார்கள்? எத்தனை பேரை நாம் மீட்டுள்ளோம்? தமிழ்நாடு அரசு சார்பாக அவசர உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்கள் மூலமாக எத்தனை அழைப்புகள் வந்துள்ளது? இந்த அழைப்புகளின் அடிப்படையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் நேபாளம் செல்வதற்கான வழிமுறைகள் ஏதும் உள்ளதா?
இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் அரசு இருக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்” என்று கேட்டார். அவரைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இச்சம்பவம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தார்.
கவன ஈர்ப்பு தீர்மானமா? அமைச்சர் விளக்கமா? – பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி
அமைச்சர் ராஜ்மோகன் நேபாள வெள்ளப்பெருக்கு குறித்து சட்டப்பேரவையில் எடுத்துரைத்தார். அவர் பேச தொடங்கியவுடனே, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அமைச்சர் பேசிய பிறகு அனைவருக்கும் பேச வாய்ப்பளிப்பதாக சபாநாயகர் கூறியும் எதிர்க்கட்சியினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர்.
அப்போது எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் கவன ஈர்ப்பை கொண்டுவந்த பிறகு தான் அமைச்சர் பதிலளிக்க வேண்டும். நாங்கள் கேள்வி எழுப்பாமலே அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கமளித்தால் எப்படி? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சபாநாயகர், கரூர் சம்பவம் நடைபெற்றபோது முதலமைச்சர் தான் முதலில் பேசினார். அப்போது நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். இப்போது ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், நீங்கள் கவனத்திற்கு கொண்டுவந்த பிறகுதான் அவர் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மக்கள் பிரச்சினை என்பது ஒன்றாக இருக்க வேண்டும். மரபை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என சபாநாயகர் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த உதயநிதி, “அரசின் கவனத்திற்கு கொண்டுவந்த பிறகு பேசுங்கள். நாங்கள் குற்றம்சாட்டவில்லை” என்றார்.
இதையடுத்து பேசிய சபாநாயகர், “அரசின் கவனத்திற்கு வந்ததால் மட்டுமே அமைச்சர் பேசுகிறார் என்று இல்லை. கரூர் சம்பவம் நடந்தபோதும் இதே அவையில் முதலமைச்சர் தான் முதலில் பேசினார். அப்போது அந்த மரபு கடைப்பிடிக்கப்பட்டது” என்றார்.
தொடர்ந்து, அதிகாரப்பூர்வமான தகவலை அமைச்சர் தெரிவித்த பிறகு எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், அதுகுறித்து கேள்வி எழுப்பலாம் என்றும், அமைச்சர் தகவல்களை தெரிவித்த பிறகு எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நேபாளம் விபத்து தொடர்பாக நீங்கள் பேச அனுமதி கேட்டுள்ளீர்கள் என்பதையும் பதிவு செய்கிறேன். அமைச்சர் முதலில் தகவல்களை படித்த பிறகு நீங்கள் பேசுங்கள் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். ஆனாலும் தொடர்ந்து எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சியின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் எதிர்கட்சியினரை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி அளித்தார்.
பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்
திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், அதனைத் தடுக்க முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்காவது தடுப்பூசி செலுத்த திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “பன்றிக்காய்ச்சல் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களில் பன்றிக்காய்ச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டில் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் கட்டுக்குள் தான் உள்ளது. எனவே நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்தார். மேலும், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் அதிகமாக பாதிக்கும் நிலை உள்ளது எனவும், தடுப்பூசி தேவைப்படும் சூழல் ஏற்பட்டால், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
சென்னை - கன்னியாகுமரி இடையே 8 வழிச்சாலை - ஆதவ் அர்ஜுனா
சட்டப்பேரவையில் தேசிய நெடுஞ்சாலை வேலைகளின் தொய்வு குறித்து மத்திய அரசிடம் பேசியிருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எடுத்துரைத்தார். அப்போது, “ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சாலையில் நடக்கும் வேலைகளின் தொய்வு குறித்தும், தமிழ்நாட்டிற்கு தேவையான மற்ற சாலைத் திட்டங்கள் குறித்தும் ஒன்றிய சாலை போக்குவரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன்.
மாநில அரசு ஒத்துழைக்கும் பட்சத்தில் பல திட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு தயாராக இருப்தாகவும், கடந்த ஆட்சியிலிருந்த இடர்பாட்டை நீக்கினால் வரும் 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி வரை திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதாகவும் உறுதியளித்தார்.
அதுமட்டுமல்லாமல், மத்திய சாலை நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.500 கோடி CRF (Central Road Fund) தொகையானது தற்போது முதல் முறையாக ரூ.1,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படும் சாலைப் பாதுகாப்பு நிதியை ரூ.300 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக உயர்த்துவதாகவும் உறுதியளித்தார்” என்றார்.
தொடர்ந்து, “நிறைய இடங்களில் ரயில்வே கேட் இல்லாமல் இருக்கிறது. அந்த பணியை முதலில் செய்யவுள்ளோம். டெல்டா, புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த பிரச்சினை உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை செய்யவுள்ளோம். ரிங்ரோடு பிரச்சினையும் சரி செய்யப்படும்” என்றார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, “சென்னையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பாலம் கட்ட முயற்சி மேற்கொண்டோம். ஆனால் ஆட்சி மாற்றத்தில் கிடப்பில் போடப்பட்டது. அதை நிறைவேற்றப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜூனா, “மானியக் கோரிக்கையில் சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை 8 வழிச்சாலை அமைக்கும் DPR தயாராகிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு உள்ளே வர நீண்ட நேரம் ஆவது குறித்து முன்னாள் முதலமைச்ச்சர் ஈபிஎஸ் சொல்வது கவனத்தில் உள்ளது. அவர் சொன்னதை நிறைவற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
காட்பாடியில் உயர்மட்ட பாலம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
கேள்வி நேரத்தின் போது காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்டப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ள இருப்பதாகவும், ரிங்ரோடு பிரச்சினையும் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “மங்களூரூ - விழுப்புரம் சாலையானது தேசிய நெடுஞ்சாலை 75 வேலூர் தேசிய நெடுஞ்சாலை கோட்டத்தின் பராமரிப்பில் உள்ளது. காட்பாடி ரயில் நிலையம் கிலோமீட்டர் 56/200 முதல் பாலாறு பாலம் கிலோமீட்டர் 59/100 வரை உயர்மட்ட பாலம் அமைக்க, மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலமாக விரிவான திட்ட அறிக்கை, DPR தயார் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் விழுப்புரம் - மங்களூரு சாலையை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாநகருக்கு 20.5 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழித்தடப் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. நில எடுப்பு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. இப்புறவழிச்சாலை லத்தேரியில் துவங்கி, தங்ககோயில் வழியாக நெல்வாயில் முடிவடைகிறது. இதற்காக ரூ.1,042 கோடி மதிப்பிலான, நில எடுப்பு பணிகள் உட்பட இந்தத் திட்டத்திற்கான ஒப்புதல் மத்திய அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும்” என்றார்.
கேள்வி - பதில் நேரம்
சரியாக காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. கேள்வி - பதில் நேரத்துடன் அவை தொடங்கிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

