சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ரூ. 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் - அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்

Published : September 3, 2026 at 9:57 AM IST
|Updated : September 3, 2026 at 2:20 PM IST
இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. முதலில் வினாக்கள் - விடைகள் நேரம் இடம்பெறுகிறது. அதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (திருத்த) சட்ட முன்வடிவை முதலமைச்சர் விஜய் அறிமுகம் செய்கிறார். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின், முதன்மை நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என அவர் தனி தீர்மானம் கொண்டு வருகிறார்.
இந்நிகழ்வுகளுக்கு பிறகு, 13வது நாளாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றன.
இதுவரை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைகள், விளையாட்டு மேம்பாடு, பொதுப்பணி, மனிதவள மேம்பாடு துறைகள், நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, நீதி நிர்வாகம், எரிசக்தி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறைகள், இந்து சமய அறநிலையத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை, இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள், சமூக நீதித் துறை, பிறபடுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மீது மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
LIVE FEED
பதிலுரைக்கு 3 நாட்கள் உள்ளன; நன்றாகத் தயாராகி வாருங்கள் - உதயநிதி
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "அனைத்து தரப்பு மீது வழக்கு போடும் நீங்கள் பாஜக தலைவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எங்களுக்கு வந்தால் ரத்தம், அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? பாஜக அடித்தாலும், வலித்தாலும் வெளியே சொல்லக்கூடாது என்ற நிலையில் ஆளும் அரசு இருக்கிறது. ஜனநாயக ரீதியாக நடைபெறும் போராட்டங்களை அரசு முடக்க நினைக்கிறது. கடற்கரைக்கு பூட்டு போட்ட அரசு இந்த அரசுதான். அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய காவல்துறையும் கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது. பெரியார் கொள்கையைப் பின்பற்றும் அரசு என்று கூறிக்கொள்ளும் நிலையில், திராவிடர் கழகத்தின் வாகனப் பேரணியைத் தடுத்துள்ளனர். கடந்த 15 நாட்களாக நாங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளோம். அதற்கான பதிலை முதலமைச்சர் அளிக்கவில்லை. ஒரு துறையைச் சார்ந்த கேள்விக்கு மற்றொரு துறை அமைச்சர் பதிலளிக்கிறார்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், “அமைச்சர் என்பது கூட்டு பொறுப்பு. யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்” என்றார்.
உடனே அவை முன்னவர், “எதிர்க்கட்சித் தலைவர் கொச்சைப்படுத்திப் பேசுகிறார்” என்றார்.
இதன் பிறகு பேசிய உதயநிதி, “உயர்கல்வித் துறை அமைச்சர் பேசப்போகிறார் என்று கூறியுள்ளீர்கள். எனவே, என் பேச்சை முடித்துக்கொள்கிறேன். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு கால அவகாசம் கேட்க முடியாது. முதலமைச்சரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாட்கள் உள்ளன. நன்றாகத் தயாராகி வாருங்கள்”என்றார்.
அதற்கு சபாநாயகர், “முதலமைச்சர் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் அனைத்திற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறார். திங்கட்கிழமை பதிலுரை வழங்குவார்” என கூறினார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி, “அவர் ஏற்கனவே தயாராக இருந்தால் இப்போதே பதில் சொல்லட்டும். அதிகாரிகள் இருக்கிறார்கள். தயாராகிவிட்டு வாருங்கள். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தாருங்கள்” என தெரிவித்தார்.
மேலும், “கடந்த ஆட்சியில் எங்கள் முதலமைச்சர் சரியான தரவுகளுடன் பதிலளித்துள்ளார். ரீல்ஸ் கன்டென்ட் இல்லாமல், சம்பந்தமில்லாமல் குட்டிக் கதை சொல்லாமல், முதலமைச்சர் நேரடியாக பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அவர் தயாராக இருந்ததால்தான் நீங்கள் எதிர் வரிசையில் இருக்கிறீர்கள். யாரும் உபதேசம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி - அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தில் பேசிய அவர், “உலகின் தொன்மையான மொழி என்றால் அது தமிழ் மட்டுமே. உலகம் முழுவதும் சுமார் 9 கோடி மக்களாலும், இந்தியாவில் சுமார் 8 கோடி மக்களாலும் பேசப்படுகிறது. தமிழை நாம் ஒரு மொழியாக மட்டும் கருதுவதில்லை. அது நம்முடைய உணர்வோடும், உயிரோடும், அடையாளத்தோடும் கலந்திருக்கிறது.
அத்தகைய சிறப்புமிக்க தமிழ், நமது அலுவலகப் பயன்பாட்டில் மட்டுமன்றி, ஆட்சி, கல்வி, தொழில்துறை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசு தமிழுக்கு ‘கிளாசிக்கல் லாங்குவேஜ்’ எனப்படும் ‘செம்மொழி’ என்ற சிறப்புத் தகுதியை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம், 1956-ன் பிரிவு 2, The official language of the State of Tamil Nadu shall be Tamil என்று தெளிவாக அறிவிக்கிறது. மேற்கண்ட சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ், குறிப்பிட்ட ஆட்சி பணிகளுக்கு தமிழைப் பயன்படுத்த அரசு அறிவிப்புகள் மூலம் உத்தரவிடலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் முக்கியமாக, மேற்படி சட்டத்தில் 1956ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம், உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள், வாடகை நீதிமன்றங்கள் மற்றும் பிற நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளைப் பதிவு செய்வது, தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் உத்தரவுகளை தமிழிலேயே வழங்குவதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் ஏற்கனவே சட்டரீதியான நீதிமன்ற மொழியாக உள்ளது.
அந்த நீதிமன்ற அமைப்பின் மாநிலத்தின் உச்ச நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. தமிழ் மொழி ஆட்சி மொழியாக மட்டுமல்லாமல், நீதிமன்ற மொழியாகவும் முழுமையான பயன்பாட்டைப் பெற வேண்டும் என்பதே தமிழர்கள் அனைவரின் நீண்டகால எதிர்பார்ப்பாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் Article 348(1)-ன்படி, இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் அனைத்து உயர் நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதே Article 348(2)-ன்படி, மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன், அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியை மாநில உயர்நீதிமன்ற வழக்குகளில், அதாவது நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்க முடியும் என்று தெரிவிக்கிறது. மேலும், ஆட்சி மொழிகள் சட்டம், 1963 பிரிவு 7 லும் மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன், மாநிலத்தின் ஆட்சி மொழியை ஆங்கிலத்துடன் கூடுதலாக உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்க வழிவகுக்கிறது. அந்த மொழியில் வழங்கப்படும் தீர்ப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட வேண்டும் என்று அந்தச் சட்டம் கூறுகிறது.
எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழில் பணிகள், ஆவணங்கள் மற்றும் வாதங்களை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை செயல்படுத்த வேண்டும். இதற்காக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்கான சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் Article 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டத்தின் கீழ், மாநில ஆளுநர் அவர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப் பேரவை கோருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மூலமாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அதிகாரப்பூர்வ நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தப் பேரவையில் நான் முன்மொழிகிறேன்.
இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்” என்று தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இந்த தனித் தீர்மானமானது பேரவை விவாதத்திற்கு பிறகு ஒருமனதாக நிறைவேறியது.
தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பேசியபோது, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக உருவாக்கும் நோக்கில், சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாடு ஏற்கனவே ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. சென்னை அருகேயுள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட், கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே உள்ளிட்ட பந்தயத் தளங்களில் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்படவுள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் Formula 1, Formula 2, Formula 3, Formula 4 உள்ளிட்ட சர்வதேச தரத்திலான கார் பந்தயங்களை நடத்தும் வகையில் நவீன பந்தயத் தளம் மற்றும் அதற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும்.
மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வமும் திறமையும் கொண்ட தமிழக இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு முறையான மற்றும் தொழில்முறை பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தமிழக இளைஞர்கள் தயார்படுத்தப்படுவார்கள் என முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உலகத் தரத்தில் ஒலிம்பிக் நகரம் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
தேசிய, சர்வதேச போட்டிகளை நடத்தும் வகையில் நவீன விளையாட்டு கட்டமைப்புகளுடன், தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், உலகத் தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பில், பல்வேறு விளையாட்டுகளுக்கான உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், நவீன விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். விளையாட்டு வீரர்களின் திறனை அறிவியல் அடிப்படையில் மேம்படுத்தும் வகையில் உயர் செயல்திறன் பயிற்சி மையம் (High Performance Training Centre) அமைக்கப்படும். இதனுடன், வீரர்களின் உடல் மற்றும் மன திறனை மேம்படுத்த, விளையாட்டு அறிவியல் மையம் மற்றும் விளையாட்டு மருத்துவ மையமும் உருவாக்கப்படும்.
வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்குவதற்கான நவீன வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம் பயிற்சி, மருத்துவம், விளையாட்டு அறிவியல், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் முழுமையான விளையாட்டு கட்டமைப்பு உருவாகும் என தெரிவித்துள்ளார்.
புதிய தலைமைச் செயலகமா? - அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்
இன்று சட்டப்பேரவையில் புதிய தலைமை செயலகம் குறித்த அறிவிப்பை 110 விதியின் கீழ் வெளியிட்டார் முதலமைச்சர் விஜய். அதன்படி, 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ. 1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்ட திட்டமிடப்படுவதாக தெரிவித்துள்ளார். அதில் அனைத்து அரசு துறைகளும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பில், சுதந்திரத்திற்குப் பிறகு புனித ஜார்ஜ் கோட்டை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சுமார் 400 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் நிர்வாக மையமாகவும், மாநிலத்தின் ஆட்சி மற்றும் நிர்வாக பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாகவும் இது விளங்கி வருகிறது.
107 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தலைமைச் செயலகப் பயன்பாட்டிற்காக சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. இதனால், புதிய கட்டடங்களை கட்டுவது, விரிவாக்கம் செய்வது மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது போன்றவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
புனித ஜார்ஜ் கோட்டை பிரதான கட்டடத்தில், சட்டமன்றம், முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அலுவலர்கள் மற்றும் பல்வேறு முக்கிய அரசுத் துறைகளும், 1978 ல் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தில் அரசு செயலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தின் நிர்வாகத் தேவைகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போதுள்ள கட்டடங்களின் பரப்பளவு அதற்கேற்ற வகையில் விரிவுபடுத்தப்படவில்லை.
மேலும், புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் மீதமுள்ள நிலப்பகுதிகள் பாதுகாப்புத்துறை மற்றும் ASI கட்டுப்பாட்டில் இருப்பதால், கூடுதல் கட்டடங்களை அமைப்பதற்கும் தேவையான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இதனால், தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சி மற்றும் திறமையான நிர்வாகத்துக்கு ஏற்ற வகையில் உலகத் தரத்திலான புதிய நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, புதிய தலைமைச் செயலகத்தை மட்டும் அமைப்பதற்குப் பதிலாக, அனைத்து அரசு துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய வளாகம் உருவாக்கப்படும். இந்த புதிய வளாகத்தில் நவீன அலுவலகங்கள் மட்டுமின்றி, நிர்வாகப் பணிகள் விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் நடைபெறுவதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகத்தில்,
- புதிய சட்டமன்றக் கட்டடம்
- தலைமைச் செயலக அலுவலகங்கள்
- அனைத்து முக்கிய அரசு துறைகளுக்கான அலுவலகங்கள்
- நவீன தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள்
- மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள்
- போதுமான வாகன நிறுத்துமிடங்கள்
- நவீன மாநாட்டு அரங்குகள்
- பொதுமக்கள் சேவை மையங்கள்
- அரசு அலுவலர்களுக்கான நவீன வசதிகள்
- பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டமைப்புகள்
உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு, 20 லட்சம் சதுரடி பரப்பளவில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த வளாகம் உருவாக்கப்படும். இதற்காக ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
கோயில்களில் ரூ.5 கட்டணம் வசூலிப்பது புதிய நடைமுறை அல்ல - அமைச்சர் ரமேஷ்
தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ், “கோயில்களில் மொபைல் போன்களுக்கு தடை விதிப்பது புதிய நடைமுறை அல்ல. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்செந்தூர் கோயில் மொபைல் போன் தடை தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுறுத்தலின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வசூலிக்கப்படும் ரூ.5 கட்டணம் தொடர்பாக தற்போது தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கட்டணம் வசூலிப்பது புதிய நடைமுறை கிடையாது. கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதுபோன்ற நடைமுறை உள்ளது.
ரூ.5 கட்டணத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் கோயில் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கும், கோவியில்களுக்கு வரும் ஏழை, எளிய மக்களுக்கான அன்னதானம் உள்ளிட்ட பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். இந்து சமய அறநிலையத்துறையே இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கோயில்கள் அரசியல் செய்வதற்கான இடங்கள் கிடையாது” என்றார்.
தொடர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கும் அறிவுறுத்தல்களை தமிழக அரசு முறையாகப் பின்பற்றும் என்றும், விசேஷ நாட்களில் மொபைல் போன்களை வாங்கி வைத்து பாதுகாக்கும் நடைமுறை தேவையில்லை என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சூலூரில் மேம்பாலம் அமைக்க முதற்கட்ட ஆய்வு – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், சூலூர் மையப்பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டில் உள்ள NH-81 நெடுஞ்சாலையில், ஐந்து கிலோமீட்டர் வரையிலான சூலூர் பகுதியை மையமாகக் கொண்டு மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, NHAI உயரதிகாரிகளிடம் கொள்கை ரீதியான ஒப்புதல் (In-Principle Approval) பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஒப்புதல் கிடைத்த பின்னர் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் மற்றும் தேவையான பரிந்துரைகள் NHAI தலைமை அதிகாரிகளின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். மேலும், NHAI தலைமையகத்தின் சார்பில் திருச்சி – கோயம்புத்தூர் இடையே புதிய பசுமை வழித்தடம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணிக்காக ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய போக்குவரத்து தேவைகள், சாலை கட்டமைப்பு மற்றும் நீண்டகால போக்குவரத்துத் திட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.

