ஓசூர், கோவை, மதுரையில் மெட்ரோ - நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை

Published : May 27, 2026 at 9:55 AM IST
|Updated : May 27, 2026 at 7:27 PM IST
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் 108 இடங்களை பிடித்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அறுதி பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்னர், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் அதிரடி படை, போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படை ஆகிய மூன்று திட்டங்களில் முதல் கையெழுத்தப் போட்டார். இதனையடுத்து 717 டாஸ்மாக் கடைகள் மூடல், வரம்புடன் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து, தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகளாகப் பார்க்கப்படும் மேகதாது அணை விவகாரம், கரீப் காலத்திற்கான உர விநியோகம், மாநில மேம்பாட்டிற்கான நிதி, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேற்கூறிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் விஜய் டெல்லி புறப்பட்டு செல்கிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணிக்கு புறப்பட்டு செல்லும் விஜய், பகல் 12:30 மணியளவில் டெல்லி சென்றடைகிறார். அங்கு மாலை 4:30 மணியளவில் பிரதமரை சந்திப்பதாகவும், அதன்பின்னர், மாலை 6:45 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும், இரவு 7:30 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அரசு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
LIVE FEED
ஓசூர், கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் மெட்ரோ - மத்திய நிதியமைச்சரிடம் முதலமைச்சர் கோரிக்கை
ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின்போது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவிடவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் கேட்டுக்கொண்டார்.
நிர்மலா சீதாராமனை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசினார்.
டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்த நிலையில், தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். தமிழ்நாடு நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் - முதல்வர் சந்திப்பு நிறைவு
டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் விஜய இன்று மாலை 4:35 மணியளவில் சந்தித்து பேசினார். 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேகதாது அணை பிரச்சனை, மாநில நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கான நிதி விவகாரம் ஆகியவை குறித்து பிரதமரிடம தமிழக முதல்வர் விஜய் எடுத்துரைத்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தமது கோரிக்கைகளை மனுவாகவும் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் விஜய் அளித்ததாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் விஜய்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் விஜய் புறப்பட்டார். தமிழ்நாடு நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கை மனுக்களுடன் அவர் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் கவனம் ஈர்க்கும் விஜய் பேனர்
தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், எண்:10, ஜன்பத் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலக வளாகத்திற்கு வெளியே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் விஜய் கைகோர்த்து நிற்கும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், '59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அரசில் காங்கிரஸ்... நன்றி தலைவா...' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் விஜய்
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு, அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்குள்ள காவலர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
டெல்லி சென்றடைந்தார் முதல்வர் விஜய்
டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய். மதியம் 1 மணியளவில் தலைநகர் சென்றடைந்தார்.
குடியரசு தலைவரை சந்திக்க முதல்வர் விஜய் திட்டம்
இன்று அரசு முறை பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சருடன் செல்பவர்கள் விவரம்
சென்னையில் இருந்து டெல்லி சென்ற முதலமைச்சருடன் தனி விமானத்தில் செல்பவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:
1. பி. ஜெகதீஷ்
2. விஷ்ணு ரெட்டி
3. பி. ராம்குமார்
4. ஜெகதீஷ் அவஸ்தி
5. சி. ராஜேந்திரன்
6. நயீம் ஆயித்தாண்டி கூவகண்டி
7. ஜி. செந்தில்குமார்
8. நரிஷெட்டி மரிய ஜோசப் அனில்
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார் முதலமைச்சர் விஜய்.

