தமிழ்நாடு சட்டப்பேரவை: தொகுதிக்கு டாஸ்மாக் கடை கேட்ட எம்எல்ஏ - அவையில் சிரிப்பலை

Published : August 31, 2026 at 9:41 AM IST
|Updated : August 31, 2026 at 9:45 PM IST
தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இன்று 4 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. இன்றைய அமர்வில் முதலில் கேள்வி-பதில் நேரம் நடைபெறுகிறது. அதில், புறவழிச்சாலை, அருங்காட்சியகத்தைப் புதுப்பித்தல், சுற்றுலாத் தலம், புதிய கட்டிடம் மற்றும் தேர்தல் கட்டுப்பாடு தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலவச வேட்டி-சேலைகள் வழங்குவது தொடர்பாக, கைத்தறி, ஜவுளி மற்றும் கதர்த்துறை அமைச்சரின் கவனத்திற்கு உறுப்பினர்கள் எஸ். ஆஸ்டின் மற்றும் கே. நித்யானந்தன் உள்ளிட்டோர் கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, 2026-27ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. இன்றைய அமர்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையை முதலமைச்சர் விஜய், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் விக்னேஷ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் ஜெகதீஸ்வரி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் வினோத் ஆகியோர் கொண்டுவருகின்றனர்.
LIVE FEED
டாஸ்மாக் கடை கேட்ட எம்எல்ஏ
பேரவையில் பேசிய மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ், "பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் மதுக்கடைகளை மாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள். பின்னர், மதுக்கடைகளை மூடுங்கள் என்றும். கோரிக்கை வைத்தார்கள். இதில் வால்பாறை திமுகசட்டமன்ற உருப்பினர் குட்டி என்கிற பிரபாகரன் மட்டும்தான் வால்பாறைக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய வால்பாறை திமுக சட்டமன்ற உறுப்பினர் குட்டி என்கிற பிரபாகரன், "தற்போது வால்பாறை ரொட்டிக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே மாதா கோவில் மற்றும் அரசு உயர்னிலைப்பள்ளி இருப்பதால், அந்த டாஸ்மாக் கடையை மாற்றி வேறொரு பகுதியில் அமைத்துத்தர வேண்டும் என்றுதான் கேட்டேன்" என தெரிவித்தார்.
இதைகேட்ட அமைச்சர் "விக்னேஷ் வால்பாறை நகரத்தில் டாஸ்மாக் கடை அமைத்துத் தரப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் பேசும்போது, "தனது வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே டாஸ்மாக் கடை உள்ளதால், கடைக்கு போவதற்கு முன்பாகவும், கடைக்கு போன பிறகும் என்னை வந்து மதுப்பிரியர்கள் பார்ப்பதாகவும், அது தனக்கு பயங்கர தொல்லையாக இருப்பதாகவும் இதனால் அங்குள்ள டாஸ்மாக் கடையை மாற்றித் தர வேண்டும்" என கேட்டுக் கொண்டார்
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், "கடைக்கு போகும்போதும் வரும்போதும் மது ஒழிப்பு பிரசாரம் செய்யவும், மது ஒழிப்பு ஆலோசகர் ஒருவரையும் அங்கு நியமித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்" என்றார்.
இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர்கள் உறுதி
மதுரை மாநகராட்சியில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அந்தத் தொகையை மீட்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என மதுரை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டி கேள்வி எழுப்பினார். மேலும், மதுரை மாநகராட்சியில் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, “முந்தைய ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் மற்றும் மேயர் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. தற்போது அதிகாரமும் காவல்துறையும் உங்களிடம் தான் உள்ளது. எந்த மாநகராட்சியில் தவறு நடந்திருந்தாலும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுங்கள்” எனக் கூறினர்.
அதற்கு ஆதவ் அர்ஜுனா, “கடந்த ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் எவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்றது என மக்கள் அனைவருக்கும் தெரியும். மதுரையில் உள்ள ஒட்டுமொத்த மாநகராட்சியும் ஊழலில் ஊறிப் போனது. 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக கூறிய நிலையில் அதனை கைப்பற்ற முந்தைய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இதனை தான் மக்கள் கேட்கிறார்கள். மதுரை மட்டுமல்லாது அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. கூடிய விரைவில் எந்தெந்த மாநகராட்சியில் எந்தெந்த ஊழல் நடைபெற்றது? என்பதை நாங்கள் வெளிப்படுத்துவோம்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “மதுரை மாநகராட்சியில் கமர்ஷியல் பில்டிங்டில் முறையாக வரி வசூலிக்கப்படாமல் முறைகேடு நடந்துள்ளது. ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் அளவில் வரவேண்டிய வரி வராமல் போயுள்ளது. இதனை ஒரு சில மண்டல தலைவர்கள், மேயர் அளவில் பிரித்துக் கொண்டு போய்விடுகிறார்கள். சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை ப்ராப்பர்ட்டி டாக்ஸ் ரி-அசெஸ்மென்ட் செய்யும் பணிகள்தான் நடைபெற்று வருகிறது. முறையாக ரி-அசஸ்மெண்ட் செய்யப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கான 21 அறிவிப்புகள்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கான 21 அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார். அவற்றில் முக்கியமானவை:
1. பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைவான நீதி, இழப்பீடு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் விதமாக POCSO Portal 2.0 செயல்படுத்தப்படும்.
2. தமிழ்நாட்டில் நகர்ப்புற பகுதிகளில் 300 குழந்தை மையங்களுக்கான கட்டடங்கள் ரூ. 51 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
3. அங்கன்வாடி மையங்களுக்கு வருகை புரியும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் அரசு கட்டடங்களில் செயல்பட்டு வரும் குழந்தை மையங்களில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் பணிகள் மற்றும் இதர பராமரிப்பு பணிகள் ரூ. 12.96 கோடியில் மேற்கொள்ளப்படும்.
4. குழந்தை மையங்களில் பயிலும் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கான ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் (AI) கூறுகளுடன் கூடிய கல்விசார் காணொளிகள் மொத்தம் ரூ. 60 லட்சம் மதிப்பில் உருவாக்கப்படும்.
5. குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் குழந்தைகளின் சிறப்பான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்யும் விதமாக ஒவ்வொரு குழந்தைக்கும் பிரத்யேக பராமரிப்பு திட்டம் உருவாக்கி செயல்படுத்தும் வண்ணம் தரவுத்தள மேலாண்மை அமைப்பு (Database Management System)" ரூ. 10 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
6. தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஓய்வுக்கால வாழ்க்கையை உறுதிசெய்யும் வகையில் தரமான சேவை வசதிகளுடன் கூடிய ஓய்வு கால குடியிருப்பு வசதி பொது-தனியார் கூட்டாண்மை முறையில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
7. அனைத்து மாவட்டங்களிலும் வட்ட அளவில் திருநருக்கு பல்வேறு சேவைகள் மற்றும் குறைத்தீர்ப்பினை கையாளும் வகையில், வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும்.
கொறடாக்கள் உறுப்பினர்களை கட்டுப்படுத்தவேண்டும் - சபாநாயகர் அறிவுரை
சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டுமென சபாநாயகரிடம் ஒரே நேரத்தில் எழுந்து நின்று குரல் கொடுத்தனர். இதுபோன்று குரல் கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.
மேலும், கொறடாக்களுக்கு அறிவுரை வழங்கிய சபாநாயகர், “அரசு கொறடாவாக இருந்தாலும், எதிர்க்கட்சி கொறடாவாக இருந்தாலும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் பேசும்போது மற்ற உறுப்பினர்கள் எழுந்து வந்து குறுக்கிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொறடாக்கள் எழுந்து நிற்கும்போது, மற்றவர்கள் எழுந்து நிற்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். தங்கள் கட்சி உறுப்பினர் பேசும்போது மற்றவர்கள் எழுந்து முன்வந்து, கைகளை உயர்த்தி பேசும் நிலையை கொறடாக்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும். ‘அமருங்கள்’ என சபாநாயகர் கூறினால் உறுப்பினர்கள் அமர வேண்டும்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த திமுக கொறடா எ.வ. வேலு, சபாநாயகர் கூறிய கருத்தை தாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கையை விட்டு வெளியே வருவதுதான் தவறு என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில், சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பதற்காக கையை உயர்த்துவது சரியான நடைமுறைதான் எனக் கூறிய அவர், பலமுறை குரல் கொடுத்தும், கையை உயர்த்தியும் கவனம் கிடைக்காததால், மேஜை மீது ஏறி நின்று கையை உயர்த்திய பிறகே சபாநாயகரின் கவனம் கிடைத்ததாக தெரிவித்தார்.
இதற்கு விளக்கமளித்த சபாநாயகர், இருக்கையை விட்டு எழுந்து வெளியே வந்து ஓடி வருவது தவறு என தெளிவுபடுத்தினார். மேலும், பத்து பேர் சேர்ந்து ஒருவருக்கு பரிந்துரை செய்ய வேண்டாம் என்றும் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, இத்தனை ஆண்டுகளாக கையை உயர்த்தினால் சபாநாயகரின் கவனம் ஈர்க்கப்படும் என நம்பிக்கொண்டிருந்தோம். இன்று திமுக கொறடா புதிதாக மேஜை மீது ஏறி நின்று சபாநாயகரின் கவனத்தை ஈர்க்கலாம் என்ற அரிய வழிமுறையை எங்களுக்கு காட்டிக் கொடுத்துள்ளார் என விமர்சித்தார்.
அதற்கு, மேஜை மீது ஏறி நிற்கும் தண்டனையை நான் கொடுத்து விட மாட்டேன் என சபாநாயகர் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டன.
1. உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின்கலனால் இயங்கும் உபகரணம் ரூ. 4.00 கோடி மதிப்பில் வழங்கப்படும்.
2. அரசு நிதியுதவியுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கூடுதலாக மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 10 இல்லங்கள் ரூ.1.82 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
3. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அரசு நிதியுதவியுடன் கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் ரூ. 1.77 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
4. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக அரசு நிதியுதவியுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கூடுதலாக இரண்டு இல்லங்கள் ரூ.0.49 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
5. அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென கூடுதலாக 3 ஆரம்பநிலை பயிற்சி மையங்கள், புறஉலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென கூடுதலாக 2 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், செவித்திறன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென கூடுதலாக 1 ஆரம்ப நிலை பயிற்சி மையம் என மொத்தம் 6 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் ரூ. 0.97 கோடி நிதி ஒதுக்கீட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
6. கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் மனநலம் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மொத்தம் 100 பயனாளிகள் பயன்பெறும் வகையில், 1.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் இரண்டு இல்லங்கள் கட்டப்படும். இவ்வில்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
7. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பயன்படுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் (Benchmark Disability) மற்றும் தனியாக செல்ல இயலாத துணையாளர் மாற்றுத்திறனாளிகள் ஒருவருடன் அரசுப்போக்குவரத்து கழகங்களின் மாநகர / நகர தாழ்தளப் பேருந்துகள், (Express), LSS, டீலக்ஸ் (Deluxe), புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்துகள் நீங்கலாக) கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
8.செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் (Virtual Reality Learning) முறையில் கற்பிக்கும் திட்டம் ரூ.0.64 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
9.பார்வை மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் வாசிப்பாளர் உதவித்தொகையினை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்
ஆகிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை - 6 அறிவிப்புகள்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் அமைச்சர் விக்னேஷ் 6 அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. மறுவாழ்வு நிதி உயர்வு
கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று, விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மறுவாழ்வு நிதி ரூ. 50,000-லிருந்து ரூ. 1,00,000-ஆக உயர்த்தி ரூ.10 கோடி “மறுவாழ்வு நிதி” வழங்கப்படும்.
2. புதிய மெத்தனால் பயன்பாட்டு கொள்கை
மெத்தனால் கட்டுப்பாடு மற்றும் போலி மதுபானம் /கள்ளச்சாராயத் தயாரிப்புக்காக மெத்தனால் மற்றும் மெத்தனால் சார்ந்த மூலப்பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்துவது மற்றும் திசை திருப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய மெத்தனால் பயன்பாட்டு கொள்கை உருவாக்கப்படும்.
3. e-Kalaal - மின்னணு மயமாக்கல்
உரிமம் ரத்து, ஒப்படைப்பு, மாற்றம் உள்ளிட்ட பணிகளை வெளிப்படையாக மேற்கொள்ள 'e-Kalaal' தளத்தில் புதிய தொகுதிகள் உருவாக்கப்படும். மேலும், FL2, FL3, FL3A, FL3AA உரிமம் புதுப்பித்தல் மற்றும் மதுபான இறக்குமதி, பீர் ஏற்றுமதி அனுமதிக்கான செயலிகள் 'e-Kalaal' தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக மின்னணுமயமாக்கப்படும். இதற்காக ரூ.1.69 கோடி ஒதுக்கப்படும்.
4. அமலாக்கப் பிரிவிற்கு நவீன உபகரணங்கள் மற்றும் புதிய வாகனங்கள்
கள்ளச்சாராயம் காய்ச்சும் நிகழ்வுகளைத் தடுக்கும் பொருட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு திறம்பட செயல்படுவதற்காக 10 நான்கு சக்கர இயக்கத் திறன் கொண்ட அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் (All Terrain Vehicles) மற்றும் 10 உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு ட்ரோன்கள் (Surveillance Drones) மற்றும் அத்தியாவசிய செயல்பாட்டுக் கருவிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக மொத்தம் ரூ.2.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
5. விழிப்புணர்வுப் பணிகளுக்கான நிதி உயர்வு
கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துவதற்கான நிதி ரூ. 5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
6. சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு
கள்ளச்சாராயம், போலி / கலப்பட மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக ரூ.2 கோடியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
வேளாண்மை - உழவர் நலத்துறை புதிய அறிவிப்புகள்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
1. 64 புதிய விதை சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளின் தரம் குறையாமல் பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தருமபுரி, சேலம், திருப்பூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ரூ.64 கோடி மதிப்பீட்டில் புதிய விதை சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
2. விவசாயிகளுக்காக ரூ.85 கோடியில் புதிய துணை வேளாண்மை மையங்கள்
திருவாரூர், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு விரைவாக வேளாண் சேவைகள் கிடைக்கும் வகையில், 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய துணை வேளாண்மை மையங்கள் அமைக்கப்படும்.
3. ரூ.8.58 கோடியில் புதிய நவீன இயந்திரங்கள்
கள்ளக்குறிச்சி-1 மற்றும் திருத்தணி சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரைக்கும் திறனை அதிகரிக்கும் வகையில், நவீன கரும்பு பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் மற்றும் மோட்டார்கள் ரூ.8 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
4. தேன் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.6.84 கோடி
தேன் வளர்ப்பை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் வகையில் ரூ.6 கோடியே 84 லட்சம் நிதியில் தேன் வளர்ப்பு பெட்டிகள் மற்றும் தேன் பிழியும் கருவிகள் வழங்கப்படும். இதன் மூலம் 28,500 தேன் வளர்ப்புப் பெட்டிகளும், 2,850 தேன் பிழியும் கருவிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
5. சர்க்கரை ஆலைகளில் ரூ.6 கோடியில் பான் ஆட்டோமேஷன்
செங்கல்ராயன், திருத்தணி, வேலூர் மற்றும் பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளில் தலா 2 படிகலன் பகுதிகள் ரூ.6 கோடி செலவில் தானியங்கி முறையில் இயக்கப்படும் வகையில் Pan Automation அமைப்பு செயல்படுத்தப்படும்.
6. ரூ.5.92 கோடியில் புதிய டிரையர் இயந்திரங்கள்
கள்ளக்குறிச்சி-1, திருத்தணி மற்றும் பெரம்பலூர் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கழிவுப்பாகு இருப்பைக் குறைக்கும் வகையில், புதிய டிரையர் இயந்திரங்கள் ரூ.5 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
7. குன்னூர் பழம் பதனிடும் நிலையம் புதுப்பிப்பு
குன்னூரில் 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பழம் பதனிடும் நிலையத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், வருவாயைப் பெருக்கவும், பழம் பதனிடும் நிலையம் புதுப்பிக்கப்படும். இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதியில் நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் நிறுவப்படும்.
8. செங்கல்ராயன் சர்க்கரை ஆலையில் ரூ.90 லட்சத்தில் மின் துகளி அமைப்பு
செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 18 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின் துகளி பிடிப்பு ஆலையில் பழுதடைந்த collecting and emitting electrodes மாற்றப்பட்டு, ரூ.90 லட்சம் செலவில் புதிய அமைப்பு நிறுவப்படும்.
9. சர்க்கரை ஆலைகளில் புதிய மின் மோட்டார்கள்
செங்கல்ராயன், பெரம்பலூர், திருத்தணி சர்க்கரை ஆலைகளில் மின்மோட்டார்களை கட்டுப்படுத்தும் கருவிகள் மூலம் மின்சார சேமிப்பை ஏற்படுத்தும் வகையில், ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மோட்டார்கள் அமைக்கப்படும்.
10. கள்ளக்குறிச்சி-1 சர்க்கரை ஆலையில் புதிய படிகலன்
கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையின் தரத்தை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய படிகலன் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
11. வேளாண் பொறியியல் துறையின் 7 இயந்திரக் கலப்பைப் பணிமனைகள் நவீனமயமாக்கப்படும்.
12. 285 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு முறையில் விற்பனை பதிவு செய்ய 600 விற்பனை முனையக் கருவிகள் வழங்கப்படும்.
13. 10 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
14. 25 உழவர் சந்தைகளில் கழிவுகளை உரமாக்கும் இயந்திரங்கள் அமைக்க ரூ.71.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
15. 5 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சொந்த சரக்கு வாகன வசதி ஏற்படுத்தி சந்தை இணைப்பு வழங்கப்படும்.
16. 100 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மின்னணு எடைப்பதுமானிகள் வழங்கப்படும்.
17. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிய ‘A’ சுழற்சலை நிறுவ ரூ.99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
18. அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆலை தானியங்கிமயமாக்கப்படும்.
19. கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ரூ.60 லட்சத்தில் கரும்பு அரவைப்பகுதி மோட்டார் கட்டுப்பாட்டு அலகுகள் நிறுவப்படும்.
20. கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 250 சதுர மீட்டர் கரும்புச்சாறு சுத்திகரிப்பு அலையின் செயல்பாடு மேம்படுத்தப்படும்
21. பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் செயல்திறன் குறைந்த காற்றுக் குளிரூட்டப்பட்ட படிகமாக்கிக் கலனை மாற்றி புதிய கலன் அமைக்க ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
22. வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திறன் குறைந்த சுண்டுகலன் காலண்டிரியாவுக்கு மாற்றாக ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுண்டுகலன் காலண்டிரியா நிறுவப்படும்.
23. கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செயல்திறன் குறைந்த தொடர் சுழற் சல்லடைக்கு மாற்றாக ரூ.18 லட்சத்தில் புதிய தொடர் சுழற் சல்லடை நிறுவப்படும்.
24. பாசன வசதியுள்ள பகுதிகளில் அதிக காரத்தன்மையுடைய மிளகாய் இரகங்களின் சாகுபடியை ரூ.60 லட்சம் நிதியில் சோதனை அடிப்படையில் ஊக்குவிக்க திட்டம் கொண்டுவரப்படும்.
25. வெற்றி நிலைய சாகுபடியில் உற்பத்தியையும் இலைத் தரத்தையும் உயர்த்தி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
26. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை பகுதிகளுக்கேற்ற புதிய கரும்பு ரகங்களைத் தேர்வு செய்து வெளியிட ரூ.28 லட்சம் நிதியில் பரிசோதனை வயல்கள் அமைக்கப்படும்.
27. புதிதாக வெளியிடப்பட்ட கரும்பு ரகங்கள் மற்றும் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களைப் பிரபலப்படுத்த ரூ.24.50 லட்சம் மதிப்பில் செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
28. நவீன கரும்பு தொழில்நுட்பங்களை அறிந்திட 40 முன்னோடி கரும்பு விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்.
29. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்காக ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய பயிற்சி மையம் அமைக்கப்படும்.
30. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ‘உழவரின் வளரும் வேளாண்மை’ மாத இதழ் அதிக அளவில் விவசாயிகளைச் சென்றடையும் வகையில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும்.
31. வேளாண்மை பொறியியல் துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 115 உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட 200 அரசு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
32. நவீன வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்கள் குறித்து 300 பட்டதாரி இளைஞர்களுக்கு 5 நாள் பயிற்சி வழங்கப்படும்.
33. ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் குறித்து மாவட்டந்தோறும் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.
34. உழவர் செயலியில் வேளாண் இயந்திர இயக்குநர்கள் மற்றும் மதிப்புக்கூட்டும் இயந்திர உரிமையாளர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் உயர்வு
டாஸ்மாக் துறையில் 6 முக்கிய அறிவிப்புகளை ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார்.
டாஸ்மாக் சில்லறை கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
1. டாஸ்மாக் சில்லறை கடைகளில் 23 ஆண்டுகளாக 2000 முதல் 14,000 ரூபாய் வரை மட்டுமே டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டது. இந்த நிலையை மாற்றி தற்பொழுது பணியாளர்களின் நலனை கருத்தில்கொண்டு 1.9.2026 முதல் டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு 33,023 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 30,284 ரூபாயும், உதவி விற்பனையாளர்களுக்கு 28,680 ரூபாயும் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 486.90 கோடி அரசுக்கு செலவு ஏற்படும்.
2. டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூபாய் 20,000 வழங்கப்படும்.
3. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுதோரும் 3 சீருடைகள் துணி மற்றும் தையல் செலவிற்காக 6000 ரூபாய் வழங்கப்படும்.
4. டாஸ்மாக் சில்லறை கடைகளில் தூய்மைப்பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதிசெய்யவும், சில்லறை செலவுகளை மேற்கொள்ளவும் மாதம்தோறும் மாநகர கடைகளுக்கு ரூபாய் 5000, நகராட்சி பேரூராட்சி கடைகளுக்கு ரூபாய் 4000, கிராமப்புற கறைகளுக்கு ரூபாய் 3000 வழங்கப்படும்.
5. டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சுழற்சி முறையில் எட்டு மணி நேர பணி ஒதுக்கீடு, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.
6. டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் தகுதியுடைய 250 பணியாளர்களை சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பணியாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால், அரசு மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்கும். கடந்த 2019 முதல் டாஸ்மாக் கடைகளில் ஒரு ரூபாயிலிருந்து ஒன்பது ரூபாய் வரை கூடுதல் விலையில் மதுபானங்களை விற்ற பணியாளர்களுக்கு வெறும் அபராதங்கள் மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியில் ஒரு ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலித்தாலும் கூட, ஒரு மாதம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் அதே தவறு நடந்தால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.
84 தமிழர்களை தொடர்புகொள்ள முடியவில்லை - தமிழக அரசு தீவிர நடவடிக்கை
தமிழக சட்டப்பேரவையில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
“கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களை பாதுகாப்பாக மீட்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து, அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் புதுடெல்லி இல்லத்தில் உதவி மையங்கள் மற்றும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 27ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, புதுடெல்லி சென்று மீட்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்திய மற்றும் நேபாள அரசுகளுடன் ஒருங்கிணைந்து மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு அதிகாரியாக ஆஷிஸ் குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். அன்றைய தினமே அமைச்சர்கள் குழு புதுடெல்லி சென்று கட்டுப்பாட்டு அறைகளை ஆய்வு செய்ததுடன், மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தியது.
ஆகஸ்ட் 28ஆம் தேதி நேபாளத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 தமிழர்கள் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல், வழிதவறியவர்கள் அல்லது பல்வேறு காரணங்களால் தொடர்புகொள்ள முடியாத தமிழர்களை கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்பு கொள்ள முடியாத 5 பயணிகளின் உறவினர்களை அமைச்சர்கள் குழுவினர் நேரில் சந்தித்து, அவர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். இதுவரை கிடைத்த தகவலின்படி, தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் கைலாச யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். இவர்களில் 220 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 84 பேரை தற்போது வரை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது.
மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக நேபாளம் சென்ற 34 தமிழர்கள் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன. அவர்களின் பாதுகாப்பு குறித்தும் தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது உறவினர்கள் குறித்து தகவலறிய விரும்புபவர்கள், அரசு உதவி எண்களைத் தொடர்புகொள்ளலாம். அவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் அரசு செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இதுவரை அரசு உதவி எண்கள் மூலம் 2,161 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேபாளம் மட்டுமின்றி திபெத் மற்றும் சீனாவுடனும் மத்திய அரசு ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்புகொள்ள முடியாத 84 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழர்களின் பாதுகாப்பை தமிழக அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
தூய்மை பணியாளர்களுக்கான திட்டங்கள் - அமைச்சர் ராஜ்மோகன்
கடந்த 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் சார்பாக அவர்களை சந்தித்து, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் பேரவைக்கு கொண்டு வந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “தூய்மை பணியாளர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் அவர்கள் மீது பலபிரயோகம் செய்யக்கூடாது என காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போராடுவது அவர்களது உரிமை. அவர்கள் யாரும் எதிரி கிடையாது. போராட்டம் தொடர்பாக அரசு சார்பில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பணியின்பொழுது உயிரிழந்த தூய்மை பணியாளர்கள் ஞானகுமார், மாலா, பார்த்திபன், அருண் ராஜ் ஆகியோருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை 93 உடை மாற்றும் அறைகளுடன் கூடிய கழிப்பறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் 107 இடங்கள் கண்டறியப்பட்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தூய்மை பணியாளர்களுக்கான உடைமாற்றும் அறைகளுடன் கூடிய கழிப்பறை வசதிகள் எல்லா இடத்திலும் ஏற்படுத்தப்படும். 10.69 லட்சம் மாஸ்க், 1.18 லட்சம் கையுறைகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும்.
உணவுக்கு பதிலாக உணவுப்படி வழங்குவதற்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. வெகு விரைவில் இது நிறைவேற்றப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கான சம்பளம் நாளொன்றுக்கு 762 ரூபாயாக இருந்த நிலையில், அதை 832 ரூபாயாக உயர்த்துவது தொடர்பாக சுமூகமான முடிவு எடுக்கப்படும். இரு ஆண்டுக்கு ஒருமுறை ஒரு நபருக்கு 4 சீருடை வழங்கப்படும். 450 புதிய பேட்டரி 3 சக்கர வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், டிஜிட்டல் வருகை புறப்பாடு பதிவுமுறைக்கு பதிலாக மீண்டும் வருகை பதிவேடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒருநாள் வார விடுமுறை, மகப்பேறு காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, இது தொடர்பாக துறை சாய்ந்த அதிகாரியுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் ரத்து இல்லை - உதயநிதியின் கேள்விக்கு ஆதவ் பதில்
தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் ஏன் கைவிடப்பட்டது? என்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் நகரத்தை உருவாக்கும் முயற்சியில் அரசு இருக்கிறது. குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) ஆய்வு செய்யப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பதிலளித்தார்.
மேலும், 42 வகையான விளையாட்டுகளை சர்வதேச தரத்தில் நடத்தும் வகையில் புதிய DPR தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த புதிய திட்டம் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகவும், கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் கூறினார்.
இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சென்னைக்கு அருகே 128 ஏக்கர் நிலம் கிடைத்தது சாதாரண விஷயமல்ல. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே செம்மஞ்சேரி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 1994ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு சர்வதேச தரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படவில்லை என்றும், கூடிய விரைவில் பணிகளைத் தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக முடித்து, முதலமைச்சரால் ஸ்போர்ட்ஸ் சிட்டி திறக்கப்படும் என தெரிவித்தார்.
மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு முன்வரிசை இருக்கை கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் - சபாநாயகர்
திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ வேலு, ஜவாஹிருல்லா போன்ற மூத்த உறுப்பினர்களை முன்வரிசையில் அமர வைக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே இதுகுறித்து கடிதம் அளித்திருந்ததாகவும், அதனை பரிசீலிப்பதாக சபாநாயகர் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மூத்த உறுப்பினர்கள் முன்வரிசையில் அமரும்போது சட்டப்பேரவைக்கு தங்களது அனுபவத்தின் அடிப்படையில் சிறந்த ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், “தற்போது உறுப்பினர்கள் எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள் என்பதன் அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஒருவர் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால், அவருக்கு உரிய இடம் வழங்கப்பட்டு இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜவாஹிருல்லா மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரின் கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டு, உரிய நேரத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும்” என சபாநாயகர் உறுதியளித்தார்.
இதையடுத்து பேசிய எ.வ வேலு, நீங்கள் எடுக்கும் தீர்ப்பில் தலையிட நான் தயாராக இல்லை. நீங்கள் முடிவு எடுத்தால் அது நடைமுறைக்கு வரும் என்பதால்தான் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன் என தெரிவித்தார்.
அதற்கு சபாநாயகர், உங்கள் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என பதிலளித்தார்.
தீர்த்தக்காடு பிரச்சினை விரைவில் சரியாகும் - அமைச்சர் வன்னி அரசு
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தவெக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட தீர்த்தக்காடு பகுதியில் கடந்த 60 ஆண்டுகாலமாக மின்சாரம், சாக்கடை என எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் அதை நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த சமூகநீதித்துறை அமைச்சர் அமைச்சர் வன்னியரசு, “ஆதி திராவிடர் மக்களுக்கு இந்த இடத்தை கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று அவர்களுக்கான பட்டா கொடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசியிருந்தோம். இப்பொழுது 312 பட்டாக்கள் தயாராக இருக்கின்றன. ஏற்கனவே 80 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பட்டாக்களும் கொடுத்த பின் அங்கு மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். அதற்கான வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. தீர்த்தக்காடு பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்” எனக் கூறினார்.
பொங்கலுக்கு புதிய டிசைன் வேட்டி, சேலை - அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு
பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஆண்டுதோறும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 12 ஆண்டுகளாக ஒரே ரகத்தில்தான் வேஷ்டி சேலை வழங்கப்பட்டது. ஆனால் வரும் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் புதிய டிசைன்களில் 4 முழ வேட்டியும் புதிய ஜரிகை வைத்த சேலையும் வழங்கப்படும் என கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
“12 ஆண்டுகளாக ஒரே ரகத்தில் வேஷ்டி சேலை வழங்கப்பட்டு வருவதாக என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். மக்களுக்கு எது பிடித்துள்ளதோ அதனை தரமாக வழங்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் உத்தரவு. அதன்பேரில், துறை செயலாளர்கள் மூலமாக அனைத்து மாவட்டத்திலும் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. பெரும்பாலான மக்கள் 8 முழம் வேட்டி வேண்டாம், நான்கு முழ வெட்டி தான் வேண்டும் என கேட்டார்கள். அதன் அடிப்படையில், 4 முழ வேட்டிகளையும் ஜரிகை வைத்த சேலைகளையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.
அதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், “4 முழ வேட்டி விலை குறைவாகவும் தரமற்றதாகவும் இருப்பதாக நெசவாளர்கள் தெரிவிக்கிறார்கள். தரம் குறைவான வேஷ்டிகளை கூலி குறைவாக கொடுத்து வாங்குவதற்கு என்ன காரணம்?” என கேள்வி எழுபினார்.
இதற்கு பதிலளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், “கிராமபுறத்தில் நான்கு முழ வேட்டிகள் சிறப்பாக இருக்கிறது என்பதுதான் கிராம மக்களின் கருத்தாக உள்ளது” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, “பொங்கலுக்கு பிறகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொங்கல் பரிசாக வழங்கப்படும் நான்கு முழ வேட்டிகளை கட்டிக்கொண்டு வருகிறோம். கடந்த கலங்களில் வழங்கப்பட்ட 8 முழ வேட்டிகளை எதிர்க்கட்சியினர் கட்டிக்கொண்டு வரவேண்டும். அதைப் பார்த்து எது தரமாக உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்” என்றார்.
சிம்லாவை போன்று மாறும் நீலகிரி - அமைச்சர் உறுதி
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, நடுகாணி–பொன்னூர் பகுதியில் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர் பேசுகையில், “நடுகாணி பொன்னூர் பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. அங்கு நறுமணத் திரவியப் பூங்கா மற்றும் வண்ணத்துப்பூச்சிப் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேலும், இதனருகில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் உலகப் புகழ்பெற்ற ஜீன்பூல் பகுதி, தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக்கழகமான TANTEA-வின் தேயிலை எஸ்டேட்கள் மற்றும் பல்வேறு தனியார் தோட்டங்கள் அமைந்துள்ளன.
இந்தப் பகுதிகளில் இயற்கை வளம், விவசாயம், தோட்டக்கலை மற்றும் தேயிலைத் தோட்டங்கள் என சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளதால், அவற்றை ஒருங்கிணைத்து பண்ணை சுற்றுலா (Agri-Tourism) மையமாக மேம்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.
அத்துடன், சிம்லாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு சுற்றுலாத் தலங்களை இணைத்து சுற்றுலா காரிடார்கள் அமைக்கப்பட்டுள்ளதைப் போல, நடுகாணி பகுதியிலும் பிரத்யேக சுற்றுலா காரிடார் அமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், தமிழகத்தில் ஊட்டி உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பிரதான சுற்றுலா மையங்களை பிற மாநிலங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களைக் காட்டிலும் சிறந்த முறையில், சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான தொலைநோக்குத் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கபாலீஸ்வரர் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள் - அமைச்சர் ரமேஷ் விளக்கம்
கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ் பாபு, அருள்மிகு கபாலீஸ்வரர் கல்லூரியில் கூடுதல் கட்டடம் கட்டவும், மாலை நேர வகுப்புகள் தொடங்கவும் அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், “சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, சென்னை கொளத்தூர் அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் பிரதான சாலையில் இடம் ஒதுக்கப்பட்டு, முதற்கட்ட கட்டுமானங்கள் முடிவுற்று கல்லூரி கட்டடம் பயன்பாட்டில் உள்ளது.
மேற்படி கல்லூரியில் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகளான கட்டடம், மாணவிகள் விடுதி, கூட்ட அரங்கம், விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு சுமார் ரூ. 30.75 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஒப்பந்த புள்ளி கூறப்பட உள்ளது.
இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட பின்னர், மாலை நேர வகுப்புகள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
110 விதியின் கீழ் முதலமைச்சரின் இதர அறிவிப்புகள்
இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில்,
திருச்சியில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம்
பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் (பல்முனை தளவாட மையம்) தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் அமைக்கப்படும். இதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் ஆய்வு மேற்கொண்டு, திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம்
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (கோயம்புத்தூர் ஃபின்டெக் மையம்) 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். உலகத் தரத்திலான வசதிகள், அலுவலக இடங்கள், புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற அதிநவீன வசதிகள் இம்மையத்தில் இடம்பெறும். உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும், நவீன தொழில் நுட்பங்களை ஊக்குவிக்கவும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
மின் பகிர்மான கட்டமைப்பு (Distribution) மேம்பாட்டுப் பணிகள் 1,762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இதன்கீழ், 36 புதிய 33/11 கிலோ வோல்ட் துணை மின்நிலையங்கள் அமைத்தல், புதிய மின் பகிர்மான மின்மாற்றிகளை நிறுவுதல், சேதமடைந்த மற்றும் பயன்பாட்டுக் காலம் நிறைவடைந்த கேபிள்கள், மின்கடத்திகள், Pillar Box, Circuit Breakers உள்ளிட்ட உபகரணங்களை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
காஞ்சியில் மின்னணு உற்பத்தி பூங்கா
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில், குறைக்கடத்தி மற்றும் மின்னணு உற்பத்தி பூங்கா 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த, R & D - Research and Development வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இத்துறையில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும். மேலும், சுமார் 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஆகிய அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
196 புதிய துணை மின்நிலையங்கள் - விஜய் அறிவிப்பு
110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், 196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.
முதலமைச்சர் அறிவிக்கையில், “தமிழ்நாட்டில் 196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின்பாதைகள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மின்பாதைகள் வலுப்படுத்தப்படும். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தமிழ்நாடு மின்பரிமாற்ற மேம்பாட்டுத் திட்டம்) மூலம் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடியில் புதிய சூப்பர்கிரிட்டிகல் வெப்ப மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன், மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட New Supercritical Thermal Power Station 20 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார்.
பால் கொள்முதல் விலை உயர்வு - முதல்வர் அறிவிப்பு
110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூபாய் 3 உயர்கிறது என அறிவித்தார். இதனால் ஒரு லிட்டருக்கு 44 ரூபாயாக வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 3.15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள் எனவும் அறிவித்தார்.
கடந்த 19ஆம் தேதி 110 விதியின் கீழ், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 3 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்திருக்கிறார்.
கறவை மாடுகளுக்கான இதர இடுபொருட்களின் விலை உயர்வால், பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் அக்கோரிக்கையினை பரிசீலனை செய்து, லிட்டர் ஒன்றுக்கு பால் கொள்முதல் விலை ரூபாய் 44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்.எல்.ஏவின் கருத்து அவை குறிப்பிலிருந்து நீக்கம்
ஜல்லிக்கட்டு போட்டி குறித்து சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ கருப்பையா பேசிய கருத்து பேரவையில் நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
கடந்தமுறை நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வீட்டு வசதி துறையின் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் சோழவந்தான் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா உரையாற்றினார். அப்போது, ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை என்றும், அதற்கு மாறாக மற்ற திட்டங்களுக்கு செலவழிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தது. மேலும், தவெக எம்.எல்.ஏவின் பேச்சை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ கருப்பையா ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய கருத்து, அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார்.
“சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா ஜல்லிக்கட்டு குறித்து பேரவையில் பேசியது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் இருப்பவர்கள் என்னிடம் விளக்கம் கேட்டார்கள். மேலும் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பிலும் இது குறித்து கடிதம் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பேரவையில் ஜல்லிக்கட்டிற்கு எதிராக கருப்பையா பேசிய குறிப்பிட்ட வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. மேலும் நான் ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து தவறான அர்த்தத்தில் பேசவில்லை என சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா என்னிடம் விளக்கம் அளித்துள்ளார்” என சபாநாயகர் தெரிவித்தார்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசியது குறித்து விளக்கம் அளிக்க முயன்றபோது, அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதி கிடையாது என கூறி, அவருக்கு அனுமதி வழங்காமல் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தீர்த்தமலை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படுமா?
தீர்த்த மலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயிலை சுற்றுலாத்தலமாக அரசு அறிவிக்குமா? என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், “தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகைத் தருகின்றனர்.
மேலும், தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், உணவுக்கூடம் போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வசதிகள் தேவைப்படும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறை மூலம் விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் கருத்துரை தயார் செய்யப்படும். அதன்மூலம் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில், மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுவின் ஒப்புதலுடன் அரசுக்கு பெறப்படும் நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
சம்புவராய மன்னருக்கு மணிமண்டபம் - அமைச்சரின் பதில்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பூவராய மன்னனை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மணிமண்டபத்துடன் கூடிய வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், சம்பூவராய மன்னருக்கு மணிமண்டபம் மற்றும் வெண்கலச் சிலை அமைப்பது தொடர்பான கோரிக்கை குறித்து துறை சார்ந்த வல்லுநர்களிடம் கருத்துரைக்கள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும், அதுகுறித்த விவரங்கள் எழுத்துப்பூர்வமாக உறுப்பினருக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தாரகைக்கு இருக்கை மாற்றம்
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான தாரகை கட்பட் இதுவரை ஆளும்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த நிலையில், சட்டமன்ற குழு தலைவர் என்கிற அடிப்படையில், எதிர்கட்சியினர் அமரும் முன்வரிசையில், பாமக உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு அருகே இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு அவர் அமர்ந்துள்ளார்.
ஆனைமங்கலம் செப்பேடுகள் நாகைக்கு கொண்டு வரப்படும் - அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, “சோழர் பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பதற்கு யுனெஸ்கோவின் இன்டர் கவர்ன்மென்டல் கமிட்டி சான்றளித்துள்ளது. மேலும், கடந்த 14 ஆண்டுகளாக ஆனைமங்கலம் செப்பேடுகளை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, கடந்த திமுக ஆட்சியின்போது வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில், இந்திய பிரதமர் நெதர்லாந்து பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பின்போது, ஆனைமங்கலம் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது அவை இந்தியாவிற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனைமங்கலம் செப்பேடுகளின் உண்மையான வரலாற்றுத் தொடர்பு நாகப்பட்டினத்துடன் இருப்பதால், அவற்றை நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் வைத்து பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “சோழர் கால கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட சோழர்களுடன் தொடர்புடைய அனைத்து வரலாற்றுச் சின்னங்களும் ஒட்டுமொத்த உலகிற்கும் மிகப்பெரிய பொக்கிஷம்.
பல இடங்களைச் சுற்றி தற்போது இந்தியாவை வந்தடைந்துள்ள ஆனைமங்கலம் செப்பேடுகள், ஒரு நதி பல கரைகளைத் தொட்டு சீறிப்பாய்ந்து இறுதியில் கடலில் கலப்பதைப்போல, சோழர் கால செப்பேடுகளை மீண்டும் தமிழகம் வரும் நாகப்பட்டினத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்தார்.
சபரிமலை பக்தர்களின் வசதிக்காக 4 வழி சாலை
பேரவையில் கேள்வி நேரத்தில் பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன், சபரிமலை செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் - குமுளி 4 வழி சாலை அமைக்கப்படுமா? என கேள்வி எழிப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதிலளித்தார்.
“அண்ணே நான் நெடுஞ்சாலை துறை அமைச்சர்” - ஆதவ் அர்ஜுனா பேச்சால் சிரிப்பலை
ஆதவ் அர்ஜூனாவை போக்குவரத்துதுறை அமைச்சர் என மாறுதலாக கூறிய ஓ.பி.எஸ், அண்ணே நான் நெடுஞ்சாலை துறை அமைச்சர் என ஆதவ் அர்ஜுனா கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் தொகுதி சார்ந்து கேள்வி எழுப்பிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை - தேனி செல்லும் சாலையில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் பதில் என்ன? என்று கேட்பதற்கு பதிலாக, போக்குவரத்து துறை அமைச்சரின் பதில் என்ன? என்று ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்டார். உடனே எழுந்து பதிலளித்த அமைச்சர் ஆதவ், “அண்ணே நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்” எனக் கூறியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது..

