ETV Bharat / state

72 குண்டுகள் முழங்க நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

நல்லகண்ணு உடலுக்கு செவ்வணக்கம் செலுத்தும் முதல்வர்
நல்லகண்ணு உடலுக்கு செவ்வணக்கம் செலுத்தும் முதல்வர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 3:47 PM IST

|

Updated : February 25, 2026 at 5:31 PM IST

Choose ETV Bharat

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக இன்று மதியம் காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LIVE FEED

4:16 PM, 26 Feb 2026 (IST)

அரசு மருத்துவமனையை நோக்கி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் நல்லக்கண்ணு உடல்

மறைந்த நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், பாலன் இல்லத்தில் இருந்து அவரது உடல் சென்னை மருத்துவ கல்லுரிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. நல்லக்கண்ணு விருபப்படி அவரது உடல் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்படவுள்ளது.

2:38 PM, 26 Feb 2026 (IST)

நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை

நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிடோர் பங்கேற்று மறைந்த நல்லகண்ணு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

11:22 AM, 26 Feb 2026 (IST)

நல்லகண்ணு உடலுக்கு கேரள அரசு சார்பில் அஞ்சலி

நல்லக்கண்ணுவின் உடலுக்கு கேரள அரசு சார்பில் அம்மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் விஜயகுமார் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கேரள அரசு சார்பில் தோழர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். மிக உயர்ந்த தலைவராகவும், தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவராகவும் விளங்கியவர். கேரள அரசின் சார்பில் தோழர் நல்லகண்ணு குடும்பத்தினருக்கும், இடதுசாரி தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

11:10 AM, 26 Feb 2026 (IST)

நல்லகண்ணு ஐயாவுக்கு பாரத ரத்னா விருது - பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

நல்லகண்ணு உடலுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நல்லக்கண்ணு ஐயா அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக சேவை செய்தவர். அதனை போற்றும் வகையில் நல்லக்கண்ணு அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் கோரிக்கை வைக்கிறேன். நல்லக்கண்ணு அவர்களின் குடும்பத்தாருக்கும் கழகத்திற்கும் தேதிமுக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

பாலன் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த்
பாலன் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் (ETV Bharat Tamil Nadu)

9:46 AM, 26 Feb 2026 (IST)

பாலன் இல்லம் திரண்ட தமிழ் திரையுலகம் - நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் சென்னை தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை 9:30 மணியளவில் பாலன் இல்லம் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் நல்லகண்ணு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நல்லகண்ணுவின் உடலுக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.

பாலன் இல்லத்தில் ரஜினி
பாலன் இல்லத்தில் ரஜினி (ETV Bharat Tamil Nadu)

9:58 PM, 25 Feb 2026 (IST)

நல்லகண்ணு உடலுக்கு தவெக தலைவர் விஜய் அஞ்சலி

மறைந்த நல்லகண்ணு உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அவர் வெளியிட்டிருந்த இரங்கல் பதிவில், "சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன். அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" என பதிவிட்டுள்ளார்.

8:59 PM, 25 Feb 2026 (IST)

ஆதவ் அர்ஜுனா அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு உடலுக்கு தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய அவர், "சுதந்திர போராட்ட வீரர், இடதுசாரி இயக்கங்களின் முன்னோடி தோழர் நல்லகண்ணு அவர்கள் தன்னுடைய 18 வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும் குரலை கொடுத்துவந்தார்.

உழுபவனுக்கு நிலம் என்ற கோஷத்தை முழங்கியவர். 1990 களில் சாதி கலவரம் ஏற்பட்டபோது ஒற்றுமைக்காக பாடுபட்டவர். தன்னுடைய பிறந்த நாளுக்கு ஒரு கோடி ரூபாய் தோழர்கள் கொடுத்தாலும் அதனை கட்சிக்காக கொடுத்தவர். தமிழக அரசு விருது வழங்கிய 10 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அதை திருப்பி கொடுத்தார். இடதுசாரிகளின் ஆணிவேராக திகழ்ந்தவர்" என்றார்.

8:53 PM, 25 Feb 2026 (IST)

நல்லகண்ணு மறைவு: ஓ.பன்னீர்செல்வம் புகழஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சித்தாந்தத்தின் அடிப்படையில் இயக்கத்தின் தோழர்கள், எவ்வாறு அரசியல் நாகரீகத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த மாபெரும் தலைவரை இன்றைக்கு தமிழகம் இழந்து இருக்கிறது.

அரசியல் நாகரிகத்தோடு அரசியல் பணியில் ஈடுபடுவார்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பொதுச் சேவையில் ஈடுபட்டு இருப்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்த மாபெரும் மனிதர்.

ஐயா நல்லகண்ணுவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து அவருடைய புகழ் அவருடைய அரசியல் நாகரீகம் இந்த நாடு உள்ளவரை அவரது புகழ் பாடிக்கொண்டே இருக்கும்" என்றார்.

8:52 PM, 25 Feb 2026 (IST)

நல்லகண்ணு உடலுக்கு விஜய் சேதுபதி அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு உடலுக்கு விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நல்லகண்ணு அய்யாவுடன் என்னால் பேச முடிந்தது. பழக முடிந்தது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்

8:26 PM, 25 Feb 2026 (IST)

நல்லகண்ணுவுக்கு பிரதமர் மோடி புகழாரம்

மறைந்த நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் சமூக வலைதளப்பதிவில், "சமூகத்தின் அடிமட்ட மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நல்லகண்ணு என்றும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் அவர் மதிக்கப்பட்டார். அவரது எளிமை மதிக்கப்பட வேண்டிய அம்சமாகும். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துகொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8:18 PM, 25 Feb 2026 (IST)

நல்லகண்ணு உடலுக்கு நடிகர் நாசர் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் நாசர் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய நாசர், "இன்றைக்கு தோழர் நல்லகண்ணு தன்னுடைய வாழ்க்கையில் பெருமையோடு நிறைவு செய்து இருக்கிறார். அவர் இல்லை என்ற துக்கத்தை விட அவர் கடந்து வந்த பாதை அவர் வாழ்ந்த வாழ்க்கை, மக்களுக்காக அவர் போராடிய போராட்டத்தை பார்க்கும் பொழுது உண்மையாகவே இந்த கவலை வருத்தம் எல்லாம் மறைந்து போனது. யாருக்கும் அடிபணியாத மனிதர், எது சரியோ அதை செய்யக்கூடியவர்" என புகழாரம் சூட்டினர்.

6:49 PM, 25 Feb 2026 (IST)

தோழர் நல்லகண்ணு விட்டு சென்ற போராட்டத்தை நாம் தொடர வேண்டும்: கனிமொழி

நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி, "தோழர் விட்டு சென்ற பணியை நாம் தொடர வேண்டும். அவர் பல விஷயங்களை அடுத்த தலைமுறைக்காக விட்டுச் சென்றுள்ளார். அதனை நாம் ஒரு பாடமாக ஏற்க வேண்டும்" என்றார்.

5:28 PM, 25 Feb 2026 (IST)

பொதுவுடமை பேராசான் நல்லகண்ணு: சீமான் இரங்கல்

நூற்றாண்டு கண்ட தம்முடைய அப்பழுக்கற்ற தூய பொதுவாழ்வில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..! பதின்ம பருவத்திலேயே பொதுவுடைமை தத்துவத்தில் பெரும் ஈர்ப்பு கொண்டு, 18 வயதிலேயே பொதுவுடைமை கட்சியில் இணைத்துக்கொண்டு பயணித்த பொதுவுடமை பேராசான்..!

வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து, ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்..! விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி..! வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த உண்மையான பொதுவுடைமைவாதி..! சாதிய ஒடுக்குமுறைக்கும், சமூக தீண்டாமைக்கும் எதிராக வலிமையான போராட்டங்களை முன்னெடுத்து சமத்துவத்தை நிலைநாட்ட அரும்பாடுபட்ட சாதி ஒழிப்பு போராளி..!

தேர்தலின் வெற்றி தோல்விகள் மக்கள் தொண்டிற்கும், தூய பொதுவாழ்விற்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்பதை தம்முடைய அயராத அரசியல் பணிகளால் உலகிற்கு உணர்த்திய மாண்பமை தலைவர்..! ஐயா அவர்களை நான் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என் மீது பேரன்புகொண்டு வாழ்த்தி, நல்ல நூல்களைப் பரிசளித்த பேரறிஞர்..! பெருமதிப்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, தூய்மையான அரசியலுக்கும், அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், இந்தியப் பொதுவுடைமை கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன். தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு புலிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கச்செய்து, ஐயாவின் மறைவால் ஏற்பட்டுள்ள துயரை நாம் தமிழர் கட்சி பகிர்ந்துகொள்கிறது. பொதுவுடைமை பிதாமகன், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

5:19 PM, 25 Feb 2026 (IST)

பாலன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும் நல்லகண்ணு உடல்

மறைந்த நல்லகண்ணு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

5:18 PM, 25 Feb 2026 (IST)

உறவினர்களிடம் நல்லகண்ணு உடல் ஒப்படைப்பு

மறைந்த நல்லகண்ணு உடலை அவர்கள் உறவினர்களிடம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது.

4:55 PM, 25 Feb 2026 (IST)

நல்லகண்ணு மறைவு எதிரொலி: கட்சி தலைமை அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் சிபிஎம் கொடி

நல்லக்கண்ணு மறைவையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில், கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

4:47 PM, 25 Feb 2026 (IST)

நல்லகண்ணு மறைவு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது - ஆளுநர் ரவி

"முதுபெரும் அரசியல் தலைவர் திரு. இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எளிமை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அவரது மறைவு ஆழமாக உணரப்படும் ஒரு வெற்றிடத்தை விட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4:44 PM, 25 Feb 2026 (IST)

நல்லகண்ணு மறைவு பேரிழப்பு: நயினார் நாகேந்திரன்

நல்லகண்ணு மறைவு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தாலும் அனைத்து மக்களிடமும் கட்சியினரிடமும் அனுசரித்து சென்றவர். அரசு நிதி வழங்கினாலும் அதனை கட்சிக்கே வழங்கி வந்தார். அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. பாஜக சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

4:00 PM, 25 Feb 2026 (IST)

நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை: தமிழக அரசின் அறிவிப்புக்கு முத்தரசன் நன்றி

மறைந்த நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அதற்கு சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார்.

3:55 PM, 25 Feb 2026 (IST)

தூய்மையின் அடையாளம் நல்லகண்ணு: திருமாவளவன்

நல்லகண்ணு மறைவு அதிர்ச்சி அளிக்கிறது, அரசியலில் தூய்மையின் அடையாளமாக திகழ்ந்து வந்தவரை தற்போது நாம் இழந்துள்ளோம். அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

3:50 PM, 25 Feb 2026 (IST)

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவர் - சசிகலா இரங்கல்

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள பதிவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பொதுவுடைமை சிந்தனையாளருமான அய்யா திரு.R நல்லகண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். சுதந்திர போராட்ட வீரரான அய்யா திரு.நல்லகண்ணு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக உழைத்தவர். அய்யா நல்லகண்ணு அவர்கள் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு, தன்னலமின்றி,அனைவரிடத்திலும் சமமாக நட்பு பாராட்டக்கூடிய சிறந்த மனிதர்.

சுமார் 80ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியலில் தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டிருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ எந்த பதவியிலும் இருந்தது கிடையாது. ஆனால் மக்கள் மன்றத்தில், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும் அயராமல் தொண்டாற்றியவர். எளிமையின் சிகரமாக, நேர்மையின் இலக்கணமாக விளங்கிய அய்யா திரு.நல்லகண்ணு அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

3:44 PM, 25 Feb 2026 (IST)

நல்லகண்ணு மறைவுக்கு விஜய் இரங்கல்

நல்லகண்ணு மறைவு தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன். அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" என பதிவிட்டுள்ளார்.

Last Updated : February 25, 2026 at 5:31 PM IST