தொழில் போட்டி காரணமாக மதுபான பார் மேலாளர் கொலை; அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு
இந்த கொலை வழக்கில் குடவாசல் பேரூராட்சி துணைத் தலைவராக பதவி வகித்த அதிமுகவை சேர்ந்த சண்முகம் மூளையாக செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Published : March 1, 2026 at 10:45 PM IST
கிருஷ்ணகிரி: தொழில் போட்டி காரணமாக மதுபான பார் மேலாளரை கொலை செய்த வழக்கில் 6 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் - ஓசூர் சாலையில் தனியார் மதுபான பார் உள்ளது. இந்த பாரில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சாக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் (36) மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 22ம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு தங்குமிடத்திற்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ், கெலமங்கலம் காவல் ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. அதில், கொலை செய்யப்பட்ட தினேஷ் குமார் மீது தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கு இருப்பது தெரிய வந்தது. அதனால் பழி வாங்கும் விதமாக தினேஷ் குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதனை தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தனிப்படை போலீசார் கடந்த 25ம் தேதி கும்பகோணம் பகுதியை சேர்ந்த சிவா (எ) சிவானந்தம் (28), விஸ்வா (26), பிரபாகரன் (32) ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (36), விஷ்ணு (33), அண்ணாதுரை (34) ஆகிய மூன்று பேரை நேற்று தனிப்படையினர் கைது செய்து தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் விசாரணையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் 6 பேர் தலைமறைவாக உள்ளதாகவும், இதில் குறிப்பாக குடவாசல் பேரூராட்சி துணைத் தலைவராக பதவி வகித்த அதிமுகவை சேர்ந்த சண்முகம் தலைமறைவாக இருப்பதும் தெரிந்தது.
மேலும், சண்முகம் இவருடைய நண்பர் கார்த்திக் இருவரும் முன்னதாக மதுபான பார் நடத்தி வந்துள்ளனர். இதில் நஷ்டம் ஏற்படவே, சண்முகம் கார்த்திக்கிடம் மதுபான பாரை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திக் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளார். கார்த்திக்கிடம் தினேஷ் குமார் டிரைவராகவும், பாரில் மேனேஜராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், இவர் கார்த்திக்கிடம் சேர்ந்த பிறகுதான் தொழில் மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, கார்த்திக்கின் பார் தொழில் வளர்ச்சிக்கு தினேஷ் தான் காரணம் என ஆத்திரமடைந்த சண்முகம் தரப்பு தொழில் போட்டி காரணமாக தினேஷ் குமாரை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த கொலை வழக்கில் சண்முகம் உள்ளிட்ட மேலும் ஆறு பேரை தேடி வருவதாகவும் கெலமங்கலம் போலீசார் தெரிவித்தனர்.

