அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழக்கறிஞர் கடிதம்
முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக பேசிய, அமைச்சர் மரிய வில்சன் ஊழல் தடுப்பு சட்டத்திற்கு உட்பட்டவர்தான். எனவே, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கடிதத்தில் பரபரப்பு புகார்.

Published : August 29, 2026 at 9:29 PM IST
சென்னை: அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழக்கறிஞர் ஜெனிபர் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெனிபர் என்பவர், இந்திய தேர்தல் ஆணையர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர், தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அந்த புகாரில், "கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரிய வில்சன் வெற்றி பெற்றார். தவெக அரசில் தற்போது அவர் நிதித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் சட்டசபையில் அவர் பேசும்போது, தனது கல்வி நிறுவனம் அனுமதி தொடர்பாக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்லாமல் ஊழல் தடுப்பு சட்டத்திற்கும் உட்பட்டது.
அமைச்சர் மரிய வில்சனின் இந்த பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து பேசியது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. இது தமிழக அரசியல் மட்டுமல்லாமல் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் மரிய வில்சன் அரசு ஊழியர் என்பதால், அவரும் ஊழல் தடுப்பு சட்டத்திற்கு உட்பட்டவர்தான். எனவே, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
அவர் அமைச்சராக பதவியேற்றபோது எடுத்த பதவி பிரமாணத்திற்கு முரணாகவும், தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டுள்ளார். அரசியலமைப்பு பதவியில் அதிகாரத்துடன் உள்ள மரிய வில்சன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு உட்பட்டவர்தான்.
| இதையும் படிங்க: விஜய் பிரதமராக வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்தியர்களின் விருப்பம்: அமைச்சர் நிர்மல்குமார் |
அவர் சட்டசபை விதிகளையும் பின்பற்றவில்லை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் பின்பற்றவில்லை. அவர் ஒரு புதிய விதியையும், விஞ்ஞான ரீதியான சமூகத்தையும் உருவாக்க பார்க்கிறார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் பதவியை திரும்ப பெற முடியாது. அதே நேரத்தில் அவர் தேர்வானதற்காக தரப்பட்ட சான்றிதழை திரும்ப பெற தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
எனவே, அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

