நாய் வேட்டைக்கு வந்த சிறுத்தையிடம் சிக்கிய இளைஞர் - வனத் துறை அதிகாரி விளக்கம்
செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது அதனை வேட்டையாட சிறுத்தைகள் வரும். எனவே இதுபோன்ற பிராணிகளை வீட்டில் வளர்க்க வேண்டாம் என பழங்குடி மக்களிடம் அறிவுறுத்தி வருவதாக வனச்சரக அலுவலர் தெரிவித்திருக்கிறார்.

Published : February 24, 2026 at 3:09 PM IST
திருநெல்வேலி: வீட்டில் வளர்த்து வரும் நாயை வேட்டையாட வந்த போது அதனை தடுக்க முயன்ற போது சிறுத்தை தாக்கியதில் இளைஞர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் காரையாறு பகுதியிலுள்ள அகஸ்தியர் காணி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (வயது 33). கூலித் தொழிலாளியான இவர் நேற்று (பிப்.23) அதிகாலை தனது மனைவி விஜிதா மற்றும் 3 வயது பெண் குழந்தை சஷ்விதாவுடன் வழக்கம் போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
இரு தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கௌதம் வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை தன்னை தாக்கியதாகக் கூறி கெளதம் கையில் காயத்துடன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கெளதம் கூறுகையில், “அன்று (பிப்.23) திடீரென சத்தம் எங்களுடைய வீட்டில் வளர்க்கும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. நாயை காப்பாற்ற வேண்டுமென நாங்கள் கூச்சலிட்டதால், அந்த சிறுத்தை என் மேல் பாய்ந்து என்னை தாக்கியது. தொடர்ந்து நான் சத்தம் போடவே, அங்கிருந்து தப்பி அடர் வனப்பகுதிக்குள் ஓடி சிறுத்தை மாயமானது” என்றார்.
இந்த சம்பவத்தால் காயமடைந்த கௌதமை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறையினரும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
| இதையும் படிங்க: 'நாங்கள் சொன்னால் மத்திய அரசு கேட்கும்' - கல்விக் கடன் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு |
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான காரையாறு வனப் பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகின்றன. சமீபகாலமாக இந்த வன விலங்குகள் காட்டை விட்டு மலையடிவாரப் பகுதிகளான பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி போன்ற பகுதிகளுக்குள் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் காட்டுக்குள் வசித்து வரும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சிறுத்தை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காரையாறு வனச்சரக அலுவலர் கல்யாணியை ஈடிவி பாரத் சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம் கூறுகையில், “சம்பவத்தன்று கௌதம் வீட்டில் படுக்காமல் அருகில் நாய் கட்டிப் போட்ட இடத்தில் படுத்து உறங்கியுள்ளார். எனவே நாயை சிறுத்தை தாக்க வந்த போது அதனை கௌதம் தடுக்க முயன்றுள்ளார். அதனால் சிறுத்தை கௌதமை தாக்கியுள்ளது. நாங்கள் நேரில் சென்று பார்த்த போது சிறுத்தை கௌதமை தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
பொதுவாக நாய், பூனை, கோழி போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது அதனை வேட்டையாட சிறுத்தைகள் வரும். எனவே இதுபோன்ற பிராணிகளை வீட்டில் வளர்க்க வேண்டாம் என பழங்குடி மக்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ஆனாலும் அவர்கள் கேட்பதில்லை. எனவே மீண்டும் அடுத்த வாரம் இது தொடர்பாக கூட்டம் நடத்தி அறிவுறுத்த இருக்கிறோம். சிறுத்தை தாக்கி பாதிக்கப்பட்ட கௌதம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று கூறினார்.

