ETV Bharat / state

நள்ளிரவில் நேர்ந்த துயரம் - கார் விபத்தில் சட்டக்கல்லூரி மாணவி பலி

காரை ஓட்டிய ஜெகதீப் உட்பட மற்ற மூன்று மாணவர்களும் லேசான காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 4:27 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் அருகே இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளிப்புற நுழைவு வாயில் கேட் அருகே இன்று அதிகாலையில் இரண்டு கார்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. காரில் பயணித்த ஒரு இளம்பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காரில் இருந்த மற்றொரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் தரமணியில் அமைந்துள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

அதன்படி, கேரளாவை சேர்ந்த மாணவி ஜூனு, பிரியா, ஜெகதீப், ஆசிப் ஆகிய நான்கு மாணவர்களும் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக இருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்ததும், விருந்தினராக வந்த ஒருவரை நுங்கம்பாக்கத்தில் விடுவதற்கு காரில் சென்றனர். அங்கு அவரை விட்டுவிட்டு ஹோட்டலில் உணவு அருந்தியுள்ளனர். அதன் பின்னர் கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலை வழியாக வந்துள்ளனர்.

காரை மாணவர் ஜெகதீப் ஓட்ட, மாணவிகள் இருவரும் பின்புறமாக அமர்ந்து வந்துள்ளனர். அப்போது திடீரென முன்னாள் சென்ற கார் வலது புறமாக திரும்பியதால் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஜூனு தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிய ஜெகதீப் உட்பட மற்ற மூன்று பேரும் லேசான காயத்துடன் அருகிலுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், முன்னாள் சென்ற காரின் ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் யார் மீது தவறு என்பதை கண்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: திமுக கவுன்சிலரை தட்டி தூட்டிய போலீஸ்