ETV Bharat / state

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதால் அதலபாதாளத்திற்கு போன நிலத்தின் மதிப்பு - முதலீட்டாளர்கள் கவலை

பரந்தூர் பகுதியில் ஒரு சதுர அடி நிலத்தின் விலை ரூ.2,000-ஆக இருந்த நிலையில், தற்போது 500 ரூபாய்க்கு கூட கேட்க ஆளில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பரந்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்
பரந்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 9:00 PM IST

3 Min Read
Choose ETV Bharat

-BY அசோக்குமார் பெருமாள்

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் அப்பகுதியில் நிலத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளன. இதனால் தாங்கள் கவலையில் உள்ளதாக அந்த பகுதியில் நிலத்தில் முதலீடு செய்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னையின் 2-வது விமான நிலையமானது, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்​கர் பரப்​பள​வில் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதற்​காக, முதல் கட்டமாக 1,700 ஏக்கர் நிலம் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

ஆனால், அங்கு விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் உள்ளிட்ட அந்த பகுதியில் உள்ள சில கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தொடர்ந்து 1,150 நாட்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் தொழில் வளர்ச்சியை மனதில் வைத்து முந்தைய அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டியது.

ஆனால், அதன் பிறகு ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, கட்சித் தொடங்கியபோதே இத்திட்டத்தை கைவிடுவதை தங்களது கொள்கை முடிவாக அறிவித்தது. தற்போது ஆட்சி அமைத்த பிறகு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதில் உறுதியாக நின்று அறிவித்தது. சட்டசபையில் விதி எண் 110-இன் கீழ், விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்தை கைவிடுவதாக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், இத்திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, இத்திட்டத்தை நடைமுறைபடுத்த அரசுக்கு இடம் கொடுத்தவர்கள் செய்வதறியாது புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க.. பெரியாரின் பெயரை சேகர்பாபு சொல்லக்கூடாது... சட்டப்பேரவையில் கொதித்தெழுந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

முந்தைய அரசு, தங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் நேரடியாகவோ மறைமுகமாவோ அழுத்தம் கொடுத்து, குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக கூறியதன் விளைவாக விவசாய நிலங்களை கொடுத்ததாக, நிலம் கொடுத்த விவசாயிகள் கூறுகின்றனர்.

தற்போது இத்திட்டம் கைவிடப்பட்டிருக்கும் நிலையில் சொந்த நிலத்தையும், வேலைவாய்ப்பையும் இழந்து நடுத்தெருவில் நிற்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, தங்கள் மீது அக்கறை கொண்டுள்ள இந்த அரசு தங்களது நிலத்தை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மூன்று பிரிவாக பணம் தரப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதனை நம்பி நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரு பிரிவு பணம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பணம் வரவேண்டியுள்ள நிலையில், இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் குமுறும் விவசாயிகள், பணம் வரும் என்று எதிர்பார்த்து பல்வேறு திட்டமிடல்களை வைத்திருந்ததால் தற்போது செய்வதறியாமல் புலம்புகிறார்கள்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட பிறகு, அங்குள்ள களநிலவரம் குறித்து தெரிந்து கொள்ள பசுமை விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஏகனாபுரம் சுப்பிரமணியனை சந்தித்தோம். அவர் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "பரந்தூரில் விமான நிலையத் திட்டம் அறிவித்தவுடன் ஏகனாபுரத்தை சுற்றியுள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் பணிகளை முந்தைய அரசு தொடங்கியது. அருகிலேயே நிலம் வாங்குவதற்கு பலரும் போட்டியிட்டதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்தது.

முதலீட்டாளர்கள் பலர் அதிக தொகை கொடுத்து நிலம் வாங்கினர். ஒரு சதுர அடி நிலத்தின் விலை ரூ.2,000ஆக இருந்தது. தற்போது விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் சதுர அடி விலை 500 ரூபாய்க்கு கூட கேட்பதற்கு ஆள் இல்லாத நிலை நிலவுகிறது. நிலத்தின் மதிப்பு குறைந்துவிட்டதால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க.. தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தினேனா? நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் விளக்கம்

மேலும், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட்டாலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 20 சதவீதம் பேர் மட்டுமே பயன்பெறுவர். 80 சதவீதம் பேர், தென்னகப் பகுதிகளான மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களாக இருப்பார்கள்.

எனவே, எங்கு அதிக தேவை இருக்கிறதோ அந்த இடத்தை தேர்வு செய்யாமல், விவசாயிகளும் விவசாய நிலங்களும் அதிகம் இருக்கும் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பது ஏற்புடையதல்ல. தென்தமிழகத்தில் பசுமை விமான நிலையம் அமைப்பதுதான் சரியாக இருக்கும்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஏகநாதபுரம் மக்கள் போராடினார்கள். ஆனால், முந்தைய அரசும், நிலங்களில் முதலீடு செய்தவர்களும் அப்போது கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்றைய விலை வீழ்ச்சி அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது" என்று தெரிவித்தார்.

இதேபோல் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு இடம் கொடுத்த குணசேகரன் என்பவர் கூறுகையில், "பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே, நிலத்தை கையகப்படுத்த தொடங்கிவிட்டனர்.

என்னுடைய நிலத்தை, என்னிடம் இருந்து கட்டாயப்படுத்தி வாங்கினார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று மிரட்டினார்கள். 2017இல் ஹைதராபாத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கு 1 கோடி இழப்பீடு கொடுத்தார்கள். ஆனால், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள எனது நிலத்தை 65 லட்ச ரூபாய்க்கு எடுத்துக் கொண்டனர்.

தற்போது எங்கள் நிலத்தை எங்களுக்கே திருப்பித் தர வேண்டும். எங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.