ETV Bharat / state

திருவண்ணாமலை அடிவாரத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் - எ.வ. வேலு வலியுறுத்தல்

அடிவாரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு
சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு (SS Tamilnadu Assembly YT)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 3:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருவண்ணாமலை: மலை அடிவாரத்தில் வசிக்கும் 1,535 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மலை அடிவாரப் பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை காலி செய்யுமாறு வருவாய்த்துறை நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் 1,535 குடும்பங்களுக்கும் பட்டா வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா எ.வ.வேலு சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.

எ.வ.வேலு கவன ஈர்ப்பு தீர்மானம்

சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 1) 11-வது நாளாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, நடைபெற்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய தி.மு.க. கொறடா எ.வ.வேலு, திருவண்ணாமலை மாநகராட்சியின் 1, 5, 6, 7, 14, 24, 25 மற்றும் 26 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த மலை அடிவாரப் பகுதிகளில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 1,535 வீடுகளில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், மலை அடிவாரப் பகுதியில் வசிக்கும் 1,535 குடும்பங்களும் 30 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக எ.வ.வேலு தெரிவித்தார்.

மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் வீடுகளை காலி செய்யாவிட்டால், 1905-ஆம் ஆண்டின் ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மின் இணைப்பு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் இருப்பதாகவும், வீடுகளுக்கான வரி செலுத்தியதற்கான சான்றுகளும் இருப்பதாகவும் எ.வ.வேலு சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரம், குடும்பச் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சனைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று எ.வ.வேலு வலியுறுத்தினார்.

மலை அடிவாரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக குறிப்பிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு, இந்த விவகாரத்தில் அரசு உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்கள் மூலம் நேரடியாக வாதாட வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், 1,535 வீடுகளுக்கும் பட்டா வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சர் செங்கோட்டையன் பதில்

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களின் நிலை, நீதிமன்ற வழக்கு மற்றும் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க: ரேசன் கடைகளில் 35 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் - அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் சட்ட நிலை, அந்த நிலத்தின் வகைப்பாடு மற்றும் அங்கு வசிக்கும் மக்களிடம் உள்ள ஆவணங்கள் ஆகியவற்றை சட்டரீதியாக ஆய்வு செய்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.

மக்களின் நீண்டகால குடியிருப்பு மற்றும் அவர்களிடம் உள்ள அரசு ஆவணங்களையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் அரசின் சார்பில் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.