'விஜய் படத்துடன் ஜெபம்' - திரைப்பட விளம்பரத்திற்கு தடை விதித்த தூத்துக்குடி பனிமய மாதா பேராலய நிர்வாகம்
கட்சியின் அடையாளங்கள், சின்னங்கள் மற்றும் கொடிகளை பேராலயத்தின் உட்பகுதியிலோ அல்லது வளாகத்திலோ பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published : January 6, 2026 at 7:36 PM IST
தூத்துக்குடி: பேராலயத்தையோ அல்லது பேராலய வளாகத்தையோ திரைப்படத்தின் விளம்பர நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்று பனிமய மாதா பேராலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் சுபத்ரா முருகன் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர் சாமுவேல் ராஜா உள்ளிட்டோர் பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் ஜனநாயகன் திரைப்படம் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வெளிவர வேண்டும் என்று அந்த திரைப்படத்தின் போஸ்டருடன் ஜோசப் விஜய் என்ற பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்திற்கு பிரார்த்தனை செய்வதற்காக சென்றனர். அப்போது அங்கு பேராலயம் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பின்வாசல் வழியாக சென்று பேராலயத்தில் ஜெபம் செய்து விட்டு முன் வாசல் கதவை திறக்க வேண்டும் என்று கூறி, பேராலய நிர்வாகத்தை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்திற்கு வருகை தரும் இறைமக்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆலயத்தின் புனிதத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் பின்வரும் நடைமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று பேராலய நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ''அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் பேராலயத்திற்கு வரும் போது கட்சியின் அடையாளங்கள், சின்னங்கள் மற்றும் கொடிகளை பேராலயத்தின் உட்பகுதியிலோ அல்லது வளாகத்திலோ பயன்படுத்தக் கூடாது. ஆலய வளாகத்திற்குள் கோஷங்களும், வெடிகளும் போடக் கூடாது.
திரைப்பட ப்ரோமோஷன் (Promotion) மற்றும் விளம்பர நோக்கத்திற்காக பேராலயத்தையோ, பேராலய வளாகத்தையோ பயன்படுத்தக் கூடாது. விளம்பர நோக்கில் புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.
| இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு - அமைச்சர் ரகுபதி பேட்டி |
பேராலயத்தின் புனிதத்தையும், அன்னையின் மாண்பையும் போற்றும் வகையில் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுகின்றோம். ஆலயத்தின் மாண்பைக் குறைக்கும் வகையிலான அல்லது அவமதிக்கும் வகையிலான அனைத்து செயல்களையும் இனி வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

