பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா- பக்தி பரவசத்தில் ஆழ்ந்த பக்தர்கள்
வரும் செப்.17- ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திட்டமிட்டப்படி மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Published : July 5, 2026 at 3:14 PM IST
மதுரை: பழமுதிர்சோலை முருகன் திருக்கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அரோகரா...அரோகரா...கோஷம் எழுப்பி பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.
முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலை அருள்மிகு முருகன் திருக்கோயில், மதுரை அழகர்மலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்த நிலையில் கும்பாபிஷேக விழாவை நடத்த தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் முடிவுச் செய்யப்பட்டது. அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டு வர்ணம் பூசுதல் உள்ளிட்டத் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், திருக்கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 01- ஆம் தேதி மங்கள இசையுடன் வேத மந்திரம் முழங்க மஹா கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கின. ஜூலை 02- ஆம் தேதி விநாயகர் வழிபாடு முளைப்பாரி இடுதலுடன் முதல் கால யாக வேள்வியுடன் தொடங்கிய யாக சாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இதையடுத்து, இன்று (ஜூலை 05) அதிகாலை 04.00 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி கடைசி கால யாக வேள்வி, மகாபூர்ணாஹூதி, மகா தீபாராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு மேளதாளங்கள் முழங்க குடை பரிவாரங்களுடன் நடைபெற்று முதலில் அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை சோலைமலை சுப்பிரமணியசாமி ஆலய விமானம், ராஜகோபுரம் 5 கலசங்களுக்கும் அதிகாலை 05.45 மணிக்குள் மேல் 06.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். அதனைத் தொடர்ந்து தீபாராதனைகள் காட்டப்பட்டன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா...அரோகரா...அரோகரா என விண்ணைப் பிளக்கும் வகையில் கோஷங்களை எழுப்பி பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர். பின்னர் ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மஹா கும்பாபிஷேகத்தை பக்தர்கள் எளிதில் காணும் வகையில் ஆறு எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல், மருத்துவம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
பக்தர்களின் வசதிக்காக மதுரை பெரியார் பேருந்து நிலையம், மேலூர், நத்தம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 23 சிசிடிவி கேமராக்கள் மற்றும் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் 4 டிஎஸ்பி, 22 ஆய்வாளர்கள், 47 துணை ஆய்வாளர்கள் மற்றும் என சுமார் 500- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
| இதையும் படிங்க: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு: 41 மின்சார ரயில்கள் ரத்து |
கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கலந்து கொண்டார். தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "முருகன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. திட்டமிட்டபடி வரும் செப்.17- ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அதில் தாமதம் இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

