ETV Bharat / state

அமைச்சர் கே.என்.நேரு மீதான புகார்: பிழை திருத்தப்பட்ட அதிமுக மனுவை ஏற்றது நீதிமன்றம்

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளித்த புகார் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 1:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிரான முறைகேடு வழக்கை பிழைகளுடன் நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிட முடியாது என அதிமுக எம்.பி இன்பதுரை தாக்கல் செய்த மனுவை நீதிமன்ற பதிவுத்துறை திரும்பி அனுப்பியது. பின்னர் பிழையை திருத்தி இன்பதுரை மனுவை தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது துறையில் முறைகேடாக பணி நியமனம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் கே.என். நேரு, அவரது உறவினர்கள் வீடுகளில் கடந்த 2025 ஏப்ரல் மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சுமார் 1,020 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. மேலும், ஒப்பந்ததாரர்களிடம் 7.5 முதல் 10 விழுக்காடு வரை கமிஷன் தர வேண்டும் என கட்டாயம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

இதற்கு ஆதாரமாக குறுந்தகவல்கள், படங்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணம் பெறப்பட்டதற்கான பண பரிமாற்ற ஆதாரங்களை அமலாக்கத் துறை திரட்டியுள்ளது. அதன் அடிப்படையில், சுமார் 2,538 நபர்களிடம் ஒவ்வொரு பதவிக்கும் 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாக அமலாக்கத்துறை தங்களின் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு - கோப்புப்படம் (ETV Bharat)

மேலும், பணி நியமனத்துக்கு 10 ரூபாய் நோட்டை அடையாளமாக வைத்து முறைகேடு நடந்துள்ளது. நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடுகளில் அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனையில், இதற்கான ஆதாரங்கள் கைபற்றப்பட்டுள்ளது. இந்த ஊழலால் தகுதியான நபர்களுக்கு வேலை கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.

எனவே, இந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என காவல் துறை இயக்குநருக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. அதனால், “அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும். மக்களின் நலன் கருதி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பினார்.

இதையும் படிங்க: தணிக்கை துறை மூலம் நெருக்கடி - விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த மாணிக்கம் தாகூர்

கடந்த 2025, டிசம்பர் 13-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளித்த புகார் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், பல்வேறு பிழைகள் இருப்பதால், மனுவை விசாரணைக்கு பட்டியலிட முடியாது என்றும், பிழைகளை திருத்தி மீண்டும் மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தி அதனை திருப்பி அனுப்பியுள்ளது.

இதனிடையே, அமைச்சர் கே.என் நேருவுக்கு எதிரான மனுவில் இருந்த பிழைகளை திருத்தி அதிமுக எம்.பி இன்பதுரை மீண்டும் பதிவுத் துறையில் இன்று பிற்பகல் தாக்கல் செய்தார். அதை பதிவுத் துறை ஏற்று எண்ணிடப்பட்டதால், வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.