பொங்கல் சிறப்பு பேருந்துகள் சேவை தொடக்கம் - வெறிச்சோடி காணப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஓ.எம்.ஆர் சாலையை பயன்படுத்துமாறு காவல் துறை அறிவுறுத்தியிருந்தது.

Published : January 9, 2026 at 3:48 PM IST
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் சேவை தொடங்கிய நிலையில் பயணிகள் கூட்டம் இல்லாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சிரமம் இன்றிச் செல்வதற்காக இன்று முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வழக்கமாக இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன் சேர்த்து இன்று மட்டும் 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து 6 நாட்களில் 22,797 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 11,290 பேருந்துகள் என மொத்தம் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், தஞ்சாவூர், புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, திருவண்ணாமலை, செஞ்சி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் www.tnstc.in அல்லது TNSTC Official மொபைல் ஆப். வாட்ஸ்அப் முன்பதிவு: 9444018898 புகார் எண்கள்: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் குறித்த புகார்களுக்கு 9445014436 என்ற எண்ணையும் 24 மணி நேரமும் செயல்படும் டோல்-ஃப்ரீ எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல கிளாம்பாக்கத்தில் 9 மையங்களும், கோயம்பேட்டில் 1 மையமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தப்பட்டுள்ள நடைமேடை விவரங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பயணிகள் இந்த வசதி மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், காலை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளிலும் கூட்டங்கள் இல்லாமல் செல்கின்றன.

| இதையும் படிங்க: தீபாவளி ஆஃபர் போல 'ஆட்சியில் பங்கு ஆஃபர்' கொடுக்கிறார் விஜய் - திருமாவளவன் விமர்சனம் |
ஆனால் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகப்படியான பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஓ.எம்.ஆர் சாலையை பயன்படுத்துமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணியில் தாம்பரம் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

