முதலமைச்சரின் திருச்சி பேச்சு ஏமாற்றம் தருகிறது; போக்கை மாற்றுங்கள்: கி. வீரமணி தாக்கு
அரசியல் அனுபவம் இல்லாமல் முதலமைச்சர் பேசுவது ஏற்புடையதல்ல. எதிர்க்கட்சிகள் என்னென்ன குறைகளை சொல்கிறார்கள் என்பதை கேட்டு, அதனை சரி செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயகம் என கி. வீரமணி

Published : June 3, 2026 at 1:13 PM IST
சென்னை: முதலமைச்சரின் திருச்சி பேச்சு மாற்றத்தை தரவில்லை; மாறாக ஏமாற்றத்தையே தருவதாக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விமர்சித்துள்ளார்.
முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தந்தை பெரியாரின் குருகுலத்தில் பயின்று பல்வகையான ஆற்றல்களை தன்னகத்தே கொண்டு, ஒரு வரலாறாக திகழ்ந்தவர் கருணாநிதி.
தந்தை பெரியாரால் மாணவர் பருவம் தொட்டு ஈர்க்கப்பட்டவர் அவர். அண்ணாவுக்கு பின்னால் திமுகவுக்கு கருணாநிதி தலைமை தாங்கி எவ்வாறு சிறப்பாக வழிநடத்தினாரோ, அதேபோல் கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலின் வந்துள்ளார்.
அவர் நடத்திய திராவிட மாடல் ஆட்சி, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு மட்டுமல்ல. உலக நாடுகளுக்கே ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
இன்றைக்கு சிலர் திராவிடம் காணாமல் போய்விட்டது என்றெல்லாம் அலட்சியமாக பேசுகிறார்கள். திராவிடத்தை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது என்பதே உண்மை.
திராவிடம் என்றுமே வாழும் வரலாறு. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல திமுக. மாறாக, ஆழமான அடித்தளம் கொண்ட திராவிட தத்துவம் திமுக.
கருணாநிதியின் பிறந்த நாள் ஆண்டு என்பதை, திராவிட எழுச்சி நாளாக தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என கி. வீரமணி பேசினார்.
முதலமைச்சர் விஜய் மீது விமர்சனம்
தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சித்தது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த கி. வீரமணி, "விஜய் தன்னை முதலமைச்சர் என்று நினைவில் கொள்ளாமல் பழைய தேர்தல் பேச்சுக்களையே பேசி வருகிறார்.
முதலமைச்சரின் திருச்சி பேச்சு பழைய தேர்தல் பேச்சை போன்று அமைந்திருப்பதும் அவர் முதலமைச்சர் என்பதை மறந்து பேசி இருப்பதும் மக்களிடம் முகம் சுளிப்பை மட்டுமல்ல அரசியல் தெளிவு உள்ளவர்களும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இருந்தது.
இதுபோன்ற போக்கை முதலமைச்சர் மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் அனுபவம் இல்லாமல் முதலமைச்சர் பேசுவது ஏற்புடையதல்ல. எதிர்க்கட்சிகள் என்னென்ன குறைகளை சொல்கிறார்கள் என்பதை கேட்டு, அதனை சரி செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயகம்.
தனது ஆட்சியின் கொள்கை என்ன என்பதை மக்களுக்கு விளக்குவதுதான் முதலமைச்சரின் மிக முக்கியமான கடமை. முதலமைச்சரின் திருச்சி பேச்சு மாற்றத்தை தரவில்லை; ஏமாற்றத்தையே தந்துள்ளது" என கி. வீரமணி கூறினார்.

