ETV Bharat / state

அனிதா வெறும் உடல் அல்ல; நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட சுடர்: கி. வீரமணி பேச்சு

சமூக நீதிக்காகவும், உரிமைக்காகவும் குரல் எழுப்பும்போது தடைகள் ஏற்பட்டால், அடைக்கலம் தர எங்கள் பெரியார் திடல் உள்ளது என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.

அனிதா நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட தி.க. தலைவர் வீரமணி உள்ளிட்டோர்
அனிதா நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட தி.க. தலைவர் வீரமணி உள்ளிட்டோர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 2:20 AM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: "அனிதா வெறும் உடல் அல்ல; நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட சுடர்" என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

நீட் தேர்வை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி தனது உயிரை மாய்த்துக் கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று (செப்.1) நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையில் முதலில் இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி கோரப்பட்டு அது கிடைக்காததால், பெரியார் திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திரைப்பட நடிகர் சத்யராஜ், சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், மாணவர்கள், இளைஞர்கள் என திரளானோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், "லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவுகளை சிதைத்து, அவர்களின் வாழ்க்கையையே பறிக்கக்கூடிய ஒரு அச்சுறுத்தலாக நீட் தேர்வு இருக்கிறது.

அனிதா உயிரிழந்ததை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்ததை ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம். மாணவர்களின் போராட்டத்தை அரசாங்கம் அலட்சியப்படுத்தக் கூடாது.

1965-ஆம் ஆண்டு ஏற்படுத்திய எழுச்சியைப் போல, இப்போதும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி மாணவர்களுக்கு இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வதே எங்களின் ஒரே கோரிக்கை. அதிகாரிகள் அல்லது அமைச்சர்களை மாற்றுவதால் மட்டும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது.

இதையும் படிங்க: அனிதாவின் தியாகம் வீண் போகாது, நீட் தேர்வை தூக்கி எறியும் நாள் வரும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

அனிதா வெறும் உடல் அல்ல; நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட சுடர். மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மாணவர்களின் குரலை அடக்க முடியாது" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சத்யராஜ், "நீட் தேர்வு நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். சமூக நீதிக்காகவும், உரிமைக்காகவும் குரல் எழுப்பும்போது தடைகள் ஏற்பட்டால், அடைக்கலம் தர எங்கள் பெரியார் திடல் உள்ளது.

இதன் மூலம் தெரியவரும் செய்தி என்னவென்றால், எங்களுக்கு ஒரு இடம் நிரந்தரமாக இருக்கிறது. நீங்கள் எங்கு தடைவிதித்தாலும், நாங்கள் இங்கு வந்து எங்களுடைய கோரிக்கையையும், நியாயத்தையும், நீதியையும் கேட்போம்" என சத்யராஜ் கூறினார்.

பின்னர் மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேசுகையில், "அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை சென்னை பெசன்ட் நகரில் நடத்த அரசு அனுமதி மறுத்தது. பெசன்ட் நகரில் திருவிழாக்கள் நடைபெறுவதைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியிருந்தால் இந்த அரசுக்கு நற்பெயர் கிடைத்திருக்கும்.

அடுத்த ஆண்டும் இதே நாளில் பெசன்ட் நகரில் அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரப்படும். அப்பொழுதும் அனுமதி மறுக்கப்பட்டால். பெசன்ட் நகர் கடற்கரையில் தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படும்" என ஆவேசமாக தெரிவித்தார்.