ETV Bharat / state

கரூர் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன் பவர் கட் ஆனதா? சிபிஐ முன் ஆஜரான மின்வாரிய அதிகாரிகள்!

கரூர் தவெக கூட்டம் நடத்த அனுமதி கோரிய கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை மின்வாரிய அதிகாரிகள் கையில் தனி கோப்பாக எடுத்து வந்து சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைக்கு ஆஜரான தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அதிகாரிகள்
விசாரணைக்கு ஆஜரான தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அதிகாரிகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 13, 2025 at 6:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சில நிமிடத்திற்கு முன்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் இரண்டு அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், ஏஎஸ்பி முகேஷ்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள், கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் தற்காலிக முகாம் அமைத்து பல குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்றைய விசாரணை

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சில நிமிடத்திற்கு முன்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக, எழுந்த புகாரின் பேரில் கரூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு சம்மன் வழங்கப்பட்டது. அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி பணியில் இருந்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் கரூர் மேற்கு நகரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன், கரூர் இபி ஏஓ கண்ணப்பன் ஆகியோர் இன்று மதியம் 1.13க்கு சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

விசாரணையில், தவெக சார்பில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை மின்வாரிய அதிகாரிகள் கையில் தனி கோப்பாக எடுத்து வந்தனர். இவர்களை தொடர்ந்து கூட்ட நெரிசலில் காயமடைந்த 4 நபர்கள் விசாரணைக்காக ஆஜராகினர். அவர்களிடம் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் 4 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு ஆஜரான தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அதிகாரிகள்
விசாரணைக்கு ஆஜரான தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அதிகாரிகள் (ETV Bharat Tamil Nadu)

நடைபெற்று வரும் விசாரணை

முதற்கட்டமாக செப். 17ஆம் தேதி, தமிழக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த ஆவணங்கள் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து கரூர் வேலுச்சாமிபுரம் சாலையில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள், பொதுமக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டாம் கட்டமாக நவம்பர் 3 ஆம் தேதி, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பரப்புரை வாகனத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 8 ஆம் தேதி தவெக திருச்சி மண்டல வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு மற்றும் பனையூர் தலைமை அலுவலக நிர்வாகி குருசரண் உள்ளிட்ட மூவர் முக்கிய வீடியோ ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கினர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை இணை செயலாளர் ரமேஷ் மரணம்!

இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 9 ஆம் தேதி சுமார் 8 மணி நேரத்துக்கு மேலாக வீடியோ ஒளிப்பதிவு ஆதாரங்களை வைத்து சிபிஐ அதிகாரிகளிடம் தவெக தரப்பு கூட்ட நெரிசல் சம்பவம் சதி எனக்கூறி முறையிட்டனர். தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக, தவெக கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்துக்குள் புகுந்த ஆம்புலன்ஸ் வாகனம் குறித்தும், அதன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.