ETV Bharat / state

சிவகங்கை தொகுதியில் தவெக வெற்றி: 3-வது இடத்திற்கு தள்ளப்பட்ட கருணாஸ்

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில் நாதன், திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தவெக சார்பில் குழந்தைராணி, நாதக சார்பில் ரா.இந்துஜா உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனர்.

கோப்புப்படம்
சிவகங்கையில் வெற்றி பெற்ற குழந்தை ராணி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2026 at 1:30 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளர் குழந்தை ராணி வெற்றி பெற்றார்.

சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வீரமிக்க வரலாறு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்காக "சிவகங்கை சீமை" என்று போற்றப்படுகிறது. சிவகங்கை, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தப் பகுதியாகும்.

ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முதல் இந்திய ராணி வேலு நாச்சியார் ஆட்சி செய்த வீரமண் இது. வெள்ளையரை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த மருது பாண்டியர்களின் (பெரிய மருது, சின்ன மருது) நிர்வாகத் தலைமையிடமாக சிவகங்கை திகழ்ந்தது. 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை (கௌரி விலாசம்), அப்பகுதி மன்னர்களின் ஆட்சிச் சிறப்பை இன்றும் பறைசாற்றுகிறது.

சிவகங்கை தொகுதியில் 1971 முதல் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 4 முறை அதிமுக, 3 முறை காங்கிரஸ், தலா இரு முறை திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

சிவகங்கை சட்டப் பேரவை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,78,124. ஆண் வாக்காளர்கள் 1,36,035. பெண் வாக்காளர்கள் 1,42,086. மூன்றாம் பாலினத்தவர்: 3. கடந்த 23-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் 76.01 சதவீத வாக்குகள் பதிவாகின.

2021 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட் பி.ஆர். செந்தில் நாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ். குணசேகரனை 11,253 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த நிலையில், இந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவான பி.ஆர். செந்தில் நாதனுக்கே அதிமுக மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

மேலும், திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச் சேர்ந்த நடிகர் கருணாஸ் இங்கு போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றதாக மாறியுள்ளது. தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏ. குழந்தைராணி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரா. இந்துஜா உள்ளிட்டோரும் களத்தில் உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை 29 சுற்றுகளாக நடைபெற்றது. இறுதியில் தவெக வேட்பாளர் குழந்தை ராணி 73,356 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-ம் இடத்தை அதிமுகவின் செந்தில் நாதனும், 3-வது இடத்தை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸும் பெற்றனர்.