திமுகவில் ஓபிஎஸ் இணைந்ததன் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது: கனிமொழி பளிச் பதில்
திமுகவின் தேர்தல் அறிக்கை இன்னும் 10 நாட்களில் முதலமைச்சரிடம் வழங்கப்படும். யார் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டாலும் திமுகவின் தேர்தல் அறிக்கையை தான் மக்கள் நம்புவார்கள் என கனிமொழி கூறினார்.

Published : February 28, 2026 at 1:34 PM IST
சென்னை: திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்தன் மூலம் உண்மையான திராவிட இயக்கத்தை யார் நடத்தி வருகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு புரிந்துவிட்டது என கனிமொழி தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சரும், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியுமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று திமுகவில் இணைந்தார். நீண்டகாலமாக அதிமுகவில் ஜெயலலிதாவுடன் பயணித்தவரான ஓபிஎஸ், திமுகவில் இணைந்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் துணையுடன் எப்படியாவது அதிமுகவில் இணைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு இடமளிக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்ததால் ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டார்.
இந்த சூழலில்தான், அவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில், திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது குறித்து அக்கட்சி எம்.பி. கனிமொழியிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "திராவிட கருத்துக்களை முன்னெடுத்து செல்லும் ஒரே தலைவர் ஸ்டாலின் என்ற நம்பிக்கையாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது உள்ள அன்பினாலும் ஓ. பன்னீர்செல்வம் எங்களுடன் இணைந்துள்ளார்.
இதன் மூலம் யார் உண்மையான திராவிட இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்; திராவிட மாடல் ஆட்சியை தரக்கூடியவர்கள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெளிவாக தெரிந்து விட்டது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுகவின் தேர்தல் அறிக்கை இன்னும் 10 நாட்களில் முழுமை பெற்று முதலமைச்சரிடம் வழங்கப்படும். யார் தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை தான் மக்கள் நம்புவார்கள். மக்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை தேர்தல் அறிக்கையாக திமுக வெளியிடும். காங்கிரஸ் கட்சியை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக இன்று அழைத்திருக்கிறோம்" என கனிமொழி கூறினார்.
முன்னதாக, ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் தென் மாவட்டங்களில் இருந்து திமுகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, முக்குலத்தோரின் வாக்குகளையும், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக ஆதரவு வாக்குகளையும் ஓபிஎஸ் வருகையால் திமுக அறுவடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் வட மாவட்டங்களிலும் திமுகவுக்கு பலம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

