மாநில அரசியலுக்கு தயாராகும் கனிமொழி! பச்சைக்கொடி காட்டுவாரா மு.க.ஸ்டாலின்?
கனிமொழி எம்.பி.யாக பதவி வகிக்கும் தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில்தான் அவர் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Published : March 4, 2026 at 7:56 AM IST
By பாண்டிராஜ்
சென்னை: திமுகவின் டெல்லி முகமாக அறியப்படும் கனிமொழி, தேசிய அரசியலை விட்டு விட்டு மாநில அரசியலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி, திமுகவின் சார்பில் கடந்த 2007 மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும், கடந்த 2019 மற்றும் 2024 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தேசிய அரசியலை விட்டுவிட்டு, மாநில அரசியலில் கனிமொழி கருணாநிதி ஈடுபட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர், குறிப்பாக, கடந்த ஜனவரி 5ஆம் தேதி, கனிமொழியின் பிறந்தநாளை, தமிழ்நாடு சட்டப்பேரவை கட்டடம் போல வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டியும், 'நாளைய சட்டமன்றமே' என போஸ்டர் ஒட்டியும் வெகு விமரிசையாக கொண்டாடினர்.

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், கனிமொழியை மாநில அரசியலுக்கு எப்படியாவது கொண்டு வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர், குறிப்பாக, தேசிய அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு மாநில அரசியலை கையில் எடுப்பதற்கு கனிமொழியும் ஆர்வமுடன் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்று, திருப்பி செலுத்தி வருகின்றனர், வழக்கமாக திமுகவின் விருப்ப மனு விநியோகம் தொடங்கும் போது அக்கட்சியின் தலைவர் மற்றும் இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பெயரில் நிர்வாகிகள் விருப்ப மனு செலுத்துவது வழக்கம்.
| இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு |
ஆனால், இந்த முறை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு அடுத்தபடியாக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழியின் பெயரில் 30க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் அவரது ஆதரவாளர்களால் கடந்த 2ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் கனிமொழி போட்டியிட 15 விருப்ப மனுக்களும், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட 5 விருப்ப மனுக்களும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 4 விருப்ப மனுக்களும், தென்காசி தொகுதியில் போட்டியிட 4 விருப்ப மனுக்களும், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட 3 விருப்ப மனுக்களும் திமுக தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது.
இது, திமுக நிர்வாகிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கனிமொழி தற்போது எம்.பி.யாக பதவி வகிக்கும் தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, அங்கு கடந்த 2001 முதல் 2021 வரை ஆறு முறை வெற்றி பெற்றுள்ள அனிதா ராதாகிருஷ்ணன், சமீபத்தில் அங்கு நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சானது, கனிமொழியின் மாநில அரசியல் வருகையை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.

அந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இறுதியாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், அப்படியெல்லாம் பேச வேண்டாம்; திமுகவின் சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை எனக் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்க இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், கனிமொழி மாநில அரசியலுக்கு வருவாரா? அவரை மாநில அரசியலுக்கு அழைக்கும் அவரின் தொண்டர்களின் எண்ணத்திற்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டுவாரா? என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரியவரும்.

