ETV Bharat / state

விபத்தில் சிக்கிய டெஸ்ட் டிரைவ் கார் - ஊழியர் உயிரிழப்பு

விபத்துக்குள்ளான கார் தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 11:23 AM IST

1 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: இரும்பு குழாய் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் கார் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் விமல் ராஜ், ஆகாஷ் மற்றும் முரளி உள்ளிட்டோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இந்நிறுவனத்தின் சார்பில் எட்டிமடை பகுதியில் கார் விற்பனை முகாம் நடைபெற்றது. இந்த முகாம் முடிவடைந்து டெஸ்ட் டிரைவிற்கு வைக்கப்பட்ட காரை ஊழியர்கள் 3 பேரும் கோவைக்கு ஓட்டிச் சென்றனர்.

டெஸ்ட் டிரைவ் காரை ஊழியர் ஆகாஷ் ஓட்டிய நிலையில் முன் இருக்கையில் விமல்ராஜ் மற்றும் பின்புறம் முரளி ஆகியோர் அமர்ந்திருந்தனர். கார் எட்டிமடை சந்திப்பு அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. ஆனாலும் வாகனத்தை நிறுத்தாத ஓட்டுநர், அருகில் இருந்த மற்றொரு பாதை வழியாக காரை இயக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், தரையில் எரிவாயு குழாய் பதிப்பதற்காக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரும்பு குழாய் மீது மோதி விபத்துக்குள்ளானது.

உயிரிழந்த ஊழியர் விமல்ராஜ்
உயிரிழந்த ஊழியர் விமல்ராஜ் (ETV Bharat Tamil Nadu)

இதில், கார் உடனே தீப்பிடித்த நிலையில், காரை ஓட்டிய ஆகாஷ் மற்றும் பின்புறம் அமர்ந்திருந்த முரளி ஆகியோர் காரில் இருந்து இறங்கினர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த விமல்ராஜ் காருக்குள் சிக்கிக் கொண்டதால் தீயில் கருகி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: அஜித்குமார் கொலை வழக்கு; டிஎஸ்பி-யின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - நீதிமன்றத்தின் கேள்வியால் 'டுவிஸ்ட்'

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்தே கவுண்டன் சாவடி மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீயில் எரிந்து கருகிய கார்
தீயில் எரிந்து கருகிய கார் (ETV Bharat Tamil Nadu)

இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறுகையில்,“காரில் வந்து விபத்தை ஏற்படுத்திய ஊழியர்கள், பொதுமக்கள் தாக்கி விடுவார்கள் என்ற அச்சத்தில் காரை அதி வேகமாக ஓட்டியுள்ளனர். இதில், விபத்து ஏற்படுத்திய இடத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்ததால் ஊழியர்கள் அதனை கவனிக்காமல் விபத்து ஏற்பட்டதா?அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்“ என்றனர்.