ETV Bharat / state

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலையில் 'துளி கூட தங்கம் இல்லை'... பக்தர்களிடம் பெற்ற 312 சவரன் எங்கே?

போலீஸ் விசாரணையை தொடர்ந்து, உற்சவர் மற்றும் ஏலவார்குழலி சிலைகள் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 8:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டு 312 சவரனில் செய்யப்பட்டதாக கூறப்பட்ட சிலைகளில் ஒரு துளி கூட தங்கம் இல்லை என்ற தகவல் நீதிமன்றம் மூலம் மனுதாரருக்கு தெரிய வந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை சேதமடைந்ததால், கடந்த 2015 ஆம் ஆண்டு புதிய உற்சவர் சிலை செய்ய இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்தபதி முத்தையா வழிகாட்டுதலின்படி, புதிய சோமாஸ்கந்தர் உற்சவர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் ஆகிய இரண்டு சிலைகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலையில் செய்யப்பட்டன.

அந்த சிலைகளில் 5 சதவீதம் தங்கம் சேர்க்க வேண்டும் என அறநிலையத் துறை உத்தரவில் உள்ளது. ஆனால், தங்கம் சேர்க்கப்பட்டதில் பல்வேறு சந்தேகம் எழுந்ததால், அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின்படி, 2017-ல் சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முத்தையா ஸ்தபதி, செயல் அலுவலர் முருகேசன், அர்ச்சகர் ராஜப்பா, செந்தில் உள்ளிட்ட 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். பின்னர், அறநிலையத் துறையின் முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் 2017-ல் கைது செய்யப்பட்டனர். மேலும், புதிதாக செய்த உற்சவர் சிலைகளை ஆய்வு செய்த ஐஐடி நிபுணர் குழு, ‘சிலைகளில் துளி கூட தங்கம் இல்லை’ என்று தெரிவித்தது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் (ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இவ்வழக்கை கிடப்பில் போட்டதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சிவகாஞ்சி போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து 2023-ம் ஆண்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சிவகாஞ்சி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

கோயில் செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த ஸ்தபதி மாசிலாமணி ஆகிய இருவரை நீக்கியும், ஹிந்து சமய அறநிலையத் துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா ஆகிய இருவரை சேர்த்தும், சிவகாஞ்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

மேலும், 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட கூடுதல் எப்ஐஆரின் நகல் மனுதாரரான அண்ணாமலைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதில் 312 சவரன் தங்கம் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டதாகவும், ஆனால் அவை சிலையில் சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை (ETV Bharat Tamil Nadu)

இதன்படி, கோயில்களில் சிலை மற்றும் சிலை சார்ந்த பொருட்களை திருடுவது பிரிவு 380 (2), ஒரே நோக்கத்திற்காக பலர் கூட்டாக குற்றச்செயல்களில் ஈடுபடுவது பிரிவு 34 ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி, விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா, ஸ்தபதி முத்தையா, அர்ச்சகர்கள் என 9 பேர் ஆஜராகினர். அவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: அன்புமணியின் கூட்டணி பேச்சு சட்டவிரோதம் - ராமதாஸ் கண்டனம்

தொடர்ந்து, ஜனவரி 5-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை பிப்ரவரி 2-ந் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.