'தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடுவோம்' - செல்வப்பெருந்தகை
மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை திட்டத்தைச் சீரழிக்க வேண்டும் என்று மோடி அரசு நினைப்பதாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published : January 11, 2026 at 3:58 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பேரை திரட்டி பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கத்தின் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, "மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பாஜக அரசை கண்டித்து, போராட்டம் நடத்தப்படுகிறது. பிரதமர் மோடிக்கு, மகாத்மா காந்தி பெயரை இந்திய தேசத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒரு மோடி அல்ல, ஆயிரம் மோடி வந்தாலும் காந்தி பெயரை மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது.
உலகத்தில் எத்தனையோ நாடுகளில் விடுதலைக்காக போராடிய தலைவர்கள் அந்த நாட்டின் அரியணையில் அமருவர். ஆனால் இந்தியாவில் அகிம்சை ஆயுதம் மூலமாக போராடி விடுதலையை பெற்று தந்த காந்தியோ நான் அரியணை ஏற மாட்டேன் என கூறினார்.
காந்தி நடுநிலையோடு செயல்பட்டவர். யார் இந்த தேசத்தில் பிறந்தாலும் இந்நாட்டின் குடிமக்கள் என தெரிவித்தார். ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என்பது இந்த நாடு ஒரு மதத்திற்கானது என கூறுகிறது. இது தான் முரண்பாடு. இது தான் இந்திய இறையாண்மை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேள்வி எழுப்புகிறது.
மோடியால் இந்த நாடு அனைவருக்குமானது என கூற முடியுமா? ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பேச்சு பேசுகிறார். காந்தி பெயரில் உள்ள திட்டத்தை அழிக்க பார்க்கிறார்கள். காந்தியின் புகழை அழிக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம்.
காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எல்லோரையும் நேசிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும் என்பது தான். பாஜகவின் கொள்கை என்ன? இந்த நாட்டை ஒரு தரப்பினர் தான் ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை திட்டத்தைச் சீரழிக்க வேண்டும் என்று மோடி அரசு நினைக்கிறது. அதனை கண்டித்து தேசம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து செல்ல இருக்கிறோம். தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் பேரை திரட்டி டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் அறிவிப்போம்" என்றார்.
இதையடுத்து காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், ''கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக நேர்மையாக ஆட்சிக்கு வரவில்லை. ஆட்டோவில் சூடு வைப்பதுபோல், பாஜகவினர் சூடு வைத்து மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ளனர். மோடி மஸ்தான் வேலை செய்து வந்தவர்கள். எனவே வரும் தேர்தலில் EVM மெஷினை ஒழிக்க வேண்டும்.
ராகுல் காந்தியை இளம் தலைவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவருக்கு வயதாகிக்கொண்டே போகிறது. எனவே அவரை விரைவில் ஆட்சியில் அமர வைக்க வேண்டும். அடுத்த ஆட்சியில் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும். நம் நாட்டில் புரட்சியும், தியாகமும் செய்ய காங்கிரஸ் கட்சியை தவிர வேறு கட்சிகள் இல்லை.
நடிகர் விஜய் மட்டும் தான் தனி விமானத்தில் செல்ல வேண்டுமா? ஏன் நாம் சொல்லக்கூடாதா? 4, 5 தனி விமானம் புக் செய்து நாமும் டெல்லி சென்று போராடுவோம். பிரதமர் வேறு நாட்டிற்கு தப்பி ஓடிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொலைக்கார பாவிகள் எல்லாம் பெரிய பெரிய பதவியில் உட்கார்ந்துள்ளனர். ஏன் ராகுல் காந்தி அமரக்கூடாது?

| இதையும் படிங்க: 'இந்து மக்களை ஏமாற்றவே சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்' - முதல்வரிடம் கேள்வி எழுப்பும் வானதி சீனிவாசன் |
நேரு 12 வருடம் ஜெயிலில் இருந்துள்ளார். மோடி ஜெயிலுக்கு சென்றுள்ளாரா? அவர்களை வரும் 2029 வரை ஆட்சியில் அமர விடக்கூடாது. அவர்களை பிடித்து திகார் ஜெயில் அடைக்க வேண்டும். அங்கு இடமில்லை என்றால் தமிழகத்தில் உள்ள பாளையங்கோட்டை, வேலூர் சிறையில் அடைக்க வேண்டும்'' என்றார்

