‘ஜனநாயகன்’ மீது குறியா? ரசிகர்களை அந்தரத்தில் ஏற்றிய போலீஸ்; தனியார் இடத்தில் இருந்த கட்அவுட் அகற்றம்!
இரு சிறுவர்களை கம்பத்தின் மேலே ஏற வைத்து, ஆபத்தான முறையில் 60 அடி கட் அவுட் பேனரை காவல் துறையினர் கீழே இறக்கிய காணொலி காட்சி இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.

Published : January 7, 2026 at 8:36 PM IST
தூத்துக்குடி: ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்காக தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகரும், தவெக தலைவருமான விஜய்-யின் கட்அவுட்டை காவல் துறையினர் அகற்றியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய் நடிப்பில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில், ‘ஜனநாயகன்’ டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில் உள்ள திரையரங்கில், ஜனவரி 9-ஆம் தேதி, காலை 9 மணிக்கு ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு இலவசமாக ரசிகர் மன்ற காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அந்த பகுதியில் பேனர் வைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் ஒரு பகுதியாக, திரையரங்கின் அருகே உள்ள தனியார் இடத்தில், விஜய் நிற்கும் வகையிலான 60 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கட்அவுட், அனுமதியின்றி வைக்கப்பட்டதாகக் கூறி சாத்தான்குளம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் 10-க்கும் மேற்பட்டோர், திரையரங்கின் அருகே வந்து 60 அடி உயர கட்அவுட்டை கயிறு மூலம் கட்டி கீழே இறக்கினர்.
மேலும், தீயணைப்பு துறையினர் கட்அவுட்டை கழற்ற வந்த இடத்தில், அவர்கள் மேலே ஏறி கழற்றுவதற்கு பதிலாக, விஜய் ரசிகர்களான இரு சிறுவர்களை கம்பத்தின் மேலே ஏற வைத்து, ஆபத்தான முறையில் 60 அடி கட்அவுட்டை கீழே இறக்கிய காணொலிக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் இடத்தில், உரிமையாளரின் அனுமதியுடன் வைக்கப்பட்ட கட்அவுட்டை அகற்றிய காவல் துறையினரின் செயலுக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர்.
| இதையும் படிங்க: ‘ஜனநாயகன்’ டிக்கெட் இலவசம் - சர்ச்சையை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்ட தூத்துக்குடி தவெக நிர்வாகி |
ஒரு பக்கம் ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டு, அதற்கான தீர்ப்பு ஜனவரி 9 அன்று (படம் வெளியாகும் நாள்) தான் வழங்கப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காவல் துறையினரால் படத்தின் பேனர்கள் அகற்றப்பட்டு வரும் சம்பவங்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

