ETV Bharat / state

'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்' - தேர்தல் அறிவிப்புக்கு முன் வழிகாட்டு நெறிமுறை வெளியிட ஜாக்டோ ஜியோ கோரிக்கை

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

ஜாக்டோ ஜியோ கோப்பு படம்
ஜாக்டோ ஜியோ கோப்பு படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 10:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள் - வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக வெளியிட வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், காந்திராஜன் ஆகியோர் எழுதி உள்ள கடிதத்தில், ''தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 3.1.2026 அன்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 9.1.2026 அன்று இத்திட்டத்திற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசுப் பணியாளர் 23 ஆண்டு கால ஓய்வூதியத்தினை பெறுவதற்கான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பதால் கடந்த 8.2.2026 அன்று சென்னையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசுப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி, நன்றியினைத் தெரிவித்துக் கொண்டோம்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசுப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் தானும் ஒரு மாநில ஒருங்கிணைப்பாளர் தான் என்ற பெருமிதத்தோடும் உற்சாகத்தோடும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு, எதிர் வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ல் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியினையும் அளித்ததை ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தினால் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் விதிகள் வழிகாட்டு நெறிமுறைகளில் பின்வரும் அச்சம் இடம்பெற வேண்டும் என ஜாக்டோ ஜியோ கேட்டுக் கொள்கிறது. ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதத் தொகையினை முற்றிலுமாக ரத்து செய்திட வேண்டும். இதுநாள் வரை பிடித்தம் செய்த தொகையினை பழைய ஓய்வூதியத் திட்டத்தினைப் போல் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்காக மாற்றிட வேண்டும்.

மிகக் குறுகிய காலத்தில் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர்கள், அவரது கணவன், மனைவி, வாரிசுகள் இறக்க நேரிடும் நிகழ்வுகளில், அப்பணியாளரின் சேமிப்புத் தொகையானது வட்டியுடன் வாரிசுதாரருக்கு வழங்க வேண்டும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஒய்வூதியக் கால பலன்கள் அனைத்துமே கருவூலக் கணக்குத் துறையின் சார்பாக IFHRMS மென்பொருள் மூலமாகவே வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை கண்டிப்பாகக் கொண்டு வருவார் என்ற வைராக்கியத்தோடு 31.12.2025க்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசுப் பணியாளர்களில் ஏறத்தாழ 3,000 பேர் சிபிஎஸ் இறுதித் தொகையினைப் பெறாமல் உள்ளனர். அவர்களையும் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்த்திட வேண்டும்.

31.12. 2025க்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரிய ஊழியர்கள்-அரசுப் பணியாளர்களில் பெரும்பகுதியினர், சிபிஎஸ் திட்டத்தில் இறுதித் தொகையினை முழுமையாகப் பெற்றிருந்தாலும், ஓய்வூதியம் மட்டுமே பணி ஓய்விற்குப் பிறகான வாழ்நாள் துணை என்பதனை உணர்ந்துள்ளனர். இவர்கள் தாங்கள் சிபிஎஸ் திட்டத்தின் கீழ் பெற்ற முழுத் தொகையினையும் முழுமையாக அரசுக் கணக்கில் திருப்பிச் செலுத்த முன்வந்து தங்களையும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்திட வேண்டும் எனக் கோரியுள்ளனர். இவர்களையும் இத்திட்டத்தில் இணைத்திட வேண்டும்.

இதையும் படிங்க: 'என்னது... தாய்க்கழகமா? என்னால் ஜீரணிக்க முடியவில்லை': ஓபிஎஸ்ஸை விமர்சித்த தமிழிசை செளந்தரராஜன்

31.12.2025க்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசுப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உரிமை ஓய்வூதியமானது கண்ணியமானத் தொகையாக அமைய வேண்டும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகள்-வழிகாட்டு நெறிமுறைகளானது, இந்திய தேர்தல் ஆணையத்தினால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 குறித்த அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக வெளியிடப்படவேண்டும்'' என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.