மாணவரின் ஒரு ஃபோன் கால்; ஆட்டோவில் வந்த 300 மரக்கன்றுகள் - நடந்தது என்ன?
மரக்கன்றுகள் அனைத்தும், ராயப்பன் கொட்டாய் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடப்பட்டு, மாணவர்களே அதனை பராமரித்து பசுமையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக இயற்கையைக் காப்போம் அமைப்பினர் தெரிவித்தனர்.


Published : February 24, 2026 at 9:41 PM IST
தர்மபுரி: பள்ளி மாணவரின் கோரிக்கையை ஏற்று தனியார் அமைப்பு, அரசு பள்ளி ஒன்றுக்கு 300 மரக்கன்றுகளை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் இராயப்பன்கொட்டாய் அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 10 ஆசிரியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் எட்டாம் வகுப்பில் ஆசிரியர் ராமலிங்கம் காடுகள் வளர்ப்பு குறித்து மாணவர்களிடையே பாடம் நடத்தும் போது, தருமபுரி மாவட்டத்தில் இயற்கை காப்போம் தலைமையகம் அமைப்பினர், மரக்கன்றுகளை வழங்கி அதனை பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது குறித்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பேசியது அங்கு படிக்கும் அருண் பாலாஜி என்கின்ற மாணவரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியரிடம் மாணவன், சம்பந்தப்பட்ட அமைப்பை எப்படி தொடர்பு கொள்வது என்று கேட்டறிந்துள்ளார்.
பின்னர் ஆசிரியர் ராமலிங்கம் வாயிலாக, இயற்கை காப்போம் அமைப்பில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் தாமோதரனின் தொடர்பு எண் மாணவருக்கு கிடைத்துள்ளது. உடனே, தாமோதரனைத் தொடர்பு கொண்ட மாணவர், தனக்கு இயற்கையின் மீதும், காடுகள் வளர்ப்பு மீதும் அதிகம் ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் இடத்தில் பசுமையை பாதுகாக்க மரக்கன்றுகள் வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து, ஆசிரியர் தாமோதரன் இயற்கையை காப்போம் தலைமை அமைப்பினர் மூலம் 300 மரக்கன்றுகளை ஆட்டோவில் எடுத்து வந்து அரசு பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விநியோகித்துள்ளார்.
இவ்வாறு வழங்கப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும், ராயப்பன் கொட்டாய் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடப்பட்டு, மாணவர்களே அதனை பராமரித்து பசுமையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக இயற்கையைக் காப்போம் அமைப்பினர் தெரிவித்தனர்.
| இதையும் படிங்க: தலைவர்கள் பரப்புரைக்காக ‘ரோல்ஸ் ராய்ஸ்’ தரத்தில் உருவாகும் வாகனங்கள் - 'பிரமிப்பு' ஏற்படுத்தும் அலங்காரம் |
இதுதொடர்பாக பேசிய மாணவன் அருண் பாலாஜி, தனக்கு காடுகள் வளர்ப்பில் இருக்கும் ஆர்வத்தை நம்மிடம் பூரிப்புடன் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், “மரம் காடுகள் வளர்ப்பு குறித்து எனக்கு ஆர்வம் உண்டு. இதனால், அறிவியல் ஆசிரியரிடம் மரங்கள் வளர்ப்பு குறித்து அவ்வப்போது கேட்பேன்.
இந்த நேரத்தில் அவர் வகுப்பறையில் மரங்கள் வளர்ப்பு தொடர்பாக இயற்கை காப்போம் அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக எங்களிடம் பேசினார். உடனடியாக, அவர்களை தொடர்பு கொண்டு இந்த பகுதியில் இருக்கும் பசுமையான சூழலை பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த வகையில், அவர்களும் மரக்கன்றுகளை கொண்டு வந்து விநியோகித்து ஆலோசனை வழங்கினர்,” என்று தெரிவித்தார்.

