போர் எதிரொலி; கொடைக்கானலில் இஸ்ரேலியர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருவதால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Published : March 3, 2026 at 10:56 PM IST
திண்டுக்கல்: ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் எதிரொலியாக, கொடைக்கானலில் தங்கி உள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் கொடைக்கானல் காவல்துறையினர் இணைந்து துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டதில் உள்ள கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற மலைவாசஸ் தலமாக உள்ளது. இங்கு கோடைக்காலம் மட்டுமின்றி, ஆண்டின் அனைத்து விதமான காலங்களிலும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
அந்த வகையில், கொடைக்கானலுக்கு டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இஸ்ரேலில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் இஸ்ரேலில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை புரிந்தனர்.
இவர்களில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நாடு திரும்பிய நிலையில், தற்போது 20க்கும் மேற்பட்ட பயணிகள் வட்டக்கானல் பகுதியில் தங்கி உள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் தொடர்ந்து போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இது, ஈரான் மக்களை பெரும் துயரம் அடைய செய்துள்ளது. இதற்கு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் 5 முதல் 6 வாரங்கள் வரை நீடிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொடைக்கானலில் தங்கி உள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் மற்றும் கொடைக்கானல் காவல்துறையினர் இணைந்து துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மேலும், கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் தங்கி உள்ள வட்டக்கானல் பகுதிக்குள் கடும் வாகன சோதனை முடிந்த பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வட்டக்கானல் பகுதி முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

