EXPLAINER: பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க மின்சார வாகனங்களை நோக்கி செல்வது சரியா? நிபுணர் கூறுவது என்ன?
மக்கள் மின்சார வாகனங்களை நம்பிக்கையுடன் பயன்படுத்த வேண்டுமெனில், நகரங்கள் மட்டுமன்றி, கிராமங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் விரிவான சார்ஜிங் கட்டமைப்புகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விரைவாக உருவாக்க வேண்டும் என்று நிபுணர் தெரிவிக்கிறார்.

Published : May 28, 2026 at 6:27 PM IST
-BY எஸ்.சிவக்குமார்
சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டின் எதிரொலியாக இந்தியாவில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மே 15ஆம் தேதி எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை ஐந்து முறை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும் விற்பனையாகிறது. சிஎன்ஜி எரிபொருள் கிலோவுக்கு ரூ.3.50 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் ஓரிரு மாதங்களில் லிட்டர் 130 ரூபாய் வரை உயரம் எனவும், இதனால் அத்தியாவாசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்றும் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.
| இதையும் படிங்க.. கடைசி விளையாட்டுத் திடலான பூங்காக்களை காப்போம்: டெல்லி காவல் துறையின் 'ஆபரேஷன் விமுக்த்' திட்டம் |
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போதைய சூழலில், தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் சிஎன்ஜி எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, இதனை நிரப்ப ஏராளமான வாகனங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன், பொதுமக்கள் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து பொதுப் போக்குவரத்தை அதிகம் உபயோகிக்க வேண்டும் என்றும், மேலும் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களுக்கு மாறலாமா என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. இருப்பினும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களை பயன்படுத்துவது சாத்தியமா என்ற சந்தேகமும் வாகன ஓட்டிகள் மத்தியில் உள்ளது. அவ்வாறு மாறுவதால், EV எனப்படும் மின்சார வாகனங்களுக்கு மாறுவதால் அதில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மின்சார இருசக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனங்களையும் அதிக அளவில் பார்க்க முடிகிறது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பொதுமக்களும் மின்சார வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மோட்டார் சந்தைகளில் மின்சார வாகனங்கள், பல்வேறு வடிவங்களில் பலதரப்பட்ட திறன்களின் விற்பனையாகி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும், செலவு குறைவு என்பதாலும் பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

2025 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 50 லட்சம் (5 மில்லியன்) மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாகனங்களை சார்ஜிங் செய்வதற்கு, தமிழ்நாட்டில் சுமார் 1300 EV சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. மேலும் புதிதாக 500 சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030-க்குள் மத்திய அரசு நாடு முழுவதும் 1 லட்சம் பொது சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்த சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எப்படி சமாளிப்பது? மின்சார வாகனங்களுக்கு மாறுவது சரியா? அதில் இருக்கும் சாதக- பாதகங்கள் குறித்து பொதுபோக்குவரத்து மற்றும் மின்சார வாகனங்களின் நிபுணர் முனைவர் வளவன் அமுதன், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார். அவற்றை இங்கு பார்க்கலாம்.

கேள்வி: தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையை சாமானிய மக்கள் எப்படி சமாளிப்பார்கள்?
வளவன் அமுதன்: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பது சாமானிய மக்களின் குடும்பச் செலவை அதிகரிக்கச் செய்து, அவர்களின் அன்றாட வாழ்வில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தினசரி வேலைக்குச் செல்லும் மக்கள், சிறு வியாபாரிகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் இதனால் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த சூழலில் தேவையற்ற பயணங்களை குறைத்தல், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துதல், பகிர்ந்து பயணம் செய்தல் போன்ற மாற்று நடைமுறைகளுக்கு மாற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதே நேரம், மத்திய, மாநில அரசுகளும் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேலும் வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.
கேள்வி: எரிபொருள் விலை உயர்வால் மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறத் தொடங்கி இருக்கிறார்களா?
வளவன் அமுதன்: எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் மத்தியில் மின்சார வாகனங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினசரி அதிக தூரம் பயணம் செய்பவர்கள் மற்றும் செலவைக் குறைக்க விரும்பும் நடுத்தர குடும்பங்கள், மின்சார வாகனங்களை மாற்று வாய்ப்பாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், சார்ஜிங் நிலையங்களின் கட்டமைப்பு, ஆரம்பத்தில் மின்சார வாகனத்திற்கு ஆகும் செலவு, மற்றும் நீண்ட தூர பயன்பாடு போன்ற சவால்கள் இன்னும் முழுமையாக தீர்க்கப்பட வேண்டியுள்ளது.
கேள்வி: மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் தமிழ்நாட்டில் போதுமான அளவில் உள்ளனவா?
வளவன் அமுதன்: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், அதற்குத் தேவையான சார்ஜிங் நிலையங்கள் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவில் இல்லை. குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் நீண்ட தூர சாலைகளில் சார்ஜிங் நிலைய வசதி மிகவும் குறைவாக உள்ளது. மக்கள் மின்சார வாகனங்களை நம்பிக்கையுடன் பயன்படுத்த வேண்டுமெனில், நகரங்கள் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் விரிவான மின்சார நிரப்பு கட்டமைப்புகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விரைவாக உருவாக்க வேண்டும்.
மேலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் சார்ஜிங் நிலையங்கள் சரியான முறையில் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வருகின்றன.
சார்ஜிங் நிலையங்கள் தொழில்நுட்ப ரீதியாக தோல்வியடையும்போது, அது பயணிகளின் நம்பிக்கையை சிதைக்கிறது. மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் ஒரு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும் எத்தனை சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது என்பதில் கவனம் செலுத்தாமல் எத்தனை சார்ஜிங் நிலையங்கள் முறையாக செயல்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

கேள்வி: தனி நபர் வாகன பயன்பாடு குறைந்தால், கூடுதல் பயணிகளை சமாளிக்க பொதுப் போக்குவரத்து தயாராக உள்ளதா?
வளவன் அமுதன்: எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அதிகமாக பொதுப் போக்குவரத்தை நாடும் நிலை உருவானால், தற்போதைய வசதிகள் மட்டும் போதுமானதாக இருக்காது. பல நகரங்களில் ஏற்கனவே கூட்ட நெரிசல், போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லாதது மற்றும் நேர தாமதம் போன்ற சவால்கள் உள்ளன. எனவே, கூடுதல் பேருந்துகள், அதிகப்படியான சேவை நேரங்கள் மற்றும் மேம்பட்ட பயண வசதிகளை அரசு விரைவாக ஏற்படுத்தினால் மட்டுமே அதிகரிக்கும் பயணிகள் தேவையை சமாளிக்க முடியும். மேலும் பொது போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களை முறையாக பராமரிப்பதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கேள்வி: எரிபொருள் விலை உயர்வு தொடர்ந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனை எதிர்காலத்தில் பாதிக்கப்படுமா?
வளவன் அமுதன்: எரிபொருள் விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால், எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனையில் தாக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது. குறிப்பாக எரிபொருள் செலவை தவிர்க்க மக்கள் மாற்று போக்குவரத்து வழிகளையும் மின்சார வாகனங்களையும் அதிகமாக தேர்வு செய்யத் தொடங்கலாம். அதே நேரத்தில், வாகன உற்பத்தி நிறுவனங்களும் புதிய சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப மின்சார மற்றும் மாற்று எரிசக்தி வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நிலை உருவாகலாம் என்று வளவன் அமுதன் கூறினார்.

