முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் இல்லை - வைகோ
அரசியலில் தோல்விகள் வந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் என்னை போல் தொடர்ந்து ஜி.கே.வாசன் பயணித்து வருகிறார் என வைகோ கூறினார்.


Published : August 30, 2026 at 6:15 PM IST
சென்னை: முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரின் நினைவிடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று (ஆகஸ்ட் 30) மரியாதை செலுத்தினர்.
அந்தவகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுக முதன்மை் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய வைகோ, "அரசியலில் தோல்விகள் வந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் என்னை போல் தொடர்ந்து ஜி.கே.வாசன் பயணித்து வருகிறார். இந்திரா காந்திக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் மூப்பனார். அவரை அரசியலில் பல முறை விமர்சித்து பேசியுள்ளேன்.
இருப்பினும், விமான பயணங்களின்போது என்னை அவரது இருக்கைக்கு அருகில் அமர வைத்து அழைத்து செல்வார். மேலும், அவரது காரிலேயே என்னை வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார். விருந்தோம்பலுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் மூப்பனார். அவரது இறுதி நாட்களில் மருத்துவமனையில் அவரை தினமும் சந்தித்து விட்டு தான் வருவேன்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம், விஜய் பிரதமர் வேட்பாளர் தேர்வுக்கு பொருத்தமானவாரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வைகோ, "முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் அல்ல. அவர் தமிழ்நாட்டிற்கு ஏற்றவர்" என்றார்.
இதனிடையே சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். அந்தவகையில், அக்கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர், மூத்த தலைவர்கள் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் இதில் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.வி.தங்கபாலு கூறுகையில், "மூத்த தலைவர் மூப்பனாரின் 25-ஆம் ஆண்டு நினைவு நாளில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று மரியாதை செலுத்தினோம். மூப்பனாருடன் பயணியாற்றியது இப்போதும் நினைவில் உள்ளது. அவரது பங்கு எப்போதும் போற்றுதலுக்கு உரியது" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பீட்டர் அல்போன்ஸ், "35 ஆண்டுகள் மூப்பனாருடன் பயணித்தேன். காலையில் அவரை சந்திக்கும் முதல் நபராகவும், மாலையில் சந்திக்கும் கடைசி நபராகவும் இருந்துள்ளேன். எந்த முடிவுகளையும் எங்களிடம் தெரிவித்துவிட்டே எடுப்பார்.
தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து, அதை எதிர்த்து அரசியல் செய்யலாம் என நான் கூறினேன். ஆனால், காங்கிரஸ் இயக்கத்தை பலவீனப்படுத்தி விட்டால் அது போன்ற ஒரு இயக்கத்தை உருவாக்க முடியாது என கூறி அதை அவர் தவிர்த்துவிட்டார்" என்றார்.
பின்னர் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "தமிழகத்தில் வகுப்புவாத சக்தி உள்ளே வராமல் தடுத்தவர் மூப்பனார். அவர் காமராஜரின் வாரிசாக இருந்தவர். சோனியா காந்தி அவர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். மேலும், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி உடன் நெருங்கி பழகியவர். அவர் எப்போதும் நினைவுகூரப்பட வேண்டியவர்" என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பாக கலந்துகொண்ட அமைச்சர் ஸ்ரீநாத், " மூப்பனார் எந்தவித பதவிக்கும் ஆசைப்படாதவர். பிரதமராக வாய்ப்பிருந்தும் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு மக்கள் சேவையில் இருந்தவர்" என புகழாரம் சூட்டினார்.

