ETV Bharat / state

அனைத்து உணவகங்களிலும் 3 மாதங்களுக்கு தீவிர ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு

சமையலறை, உணவு சேமிப்பு, சுகாதாரம் குறித்து செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை தீவிர சோதனை நடத்த உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

உணவக சமையலறை - கோப்புப்படம்
உணவக சமையலறை - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 8:27 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு சோதனை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம்-2006-ன்படி, உணவகங்கள், ஹோட்டல்கள், உணவு விற்பனை நிலையங்கள், கேன்டீன்கள், கேட்டரிங் நிறுவனங்கள், தெருவோர உணவு விற்பனையாளர்கள், சிறு அளவிலான சிற்றுண்டி சில்லறை விற்பனையாளர்கள், தேநீர் கடைகள் ஆகியவற்றில் உள்ள சமையலறைகள், உணவு சேமிப்பு வளாகங்களின் தரம் மற்றும் சுகாதாரம் ஆகியவை குறித்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை, 3 மாதங்களுக்கு சிறப்பு ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. 52 கோயில்களில் செல்போன் தடை ஏன்? - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

இந்த உத்தரவின்படி, உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர்கள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுத் தணிக்கை சரிபார்ப்புப் பட்டியலை அனைத்து வகை உணவகங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி, உணவுப் பாதுகாப்பு துறையின் ஆய்வுக்கு முன்னரே சுய தணிக்கை மேற்கொண்டு, தேவையான சுய மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.

சுய தணிக்கை அறிக்கையை, உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வரும்போது உணவு வணிகர்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆய்வின்போது ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால், அவ்விதிமீறலின் தீவிரத்தன்மையின் அடிப்படையில், தேவையான அபராத நடவடிக்கை, வழக்குப் பதிவு செய்தல், நிர்வாக நடவடிக்கை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

உணவு சேவை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வின்போது, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் உரிமம், பதிவுச் சான்றிதழை முறையாகப் பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சமையலறை மற்றும் உணவு சேமிப்பு வளாகங்களின் தரங்கள் மற்றும் சுகாதார நிலைமைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை சேமித்து வைத்திருத்தல், பிரிட்ஜ் முறையாக செயல்படாத நிலையில் இருத்தல், மேசைகள் மற்றும் சுவர்களில் கிரீஸ், எண்ணெய் படிந்திருத்தல் போன்ற முக்கியமான விதிமீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க.. ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மெட்ரோவில் 1.04 கோடி பேர் பயணம்

உணவு கையாளுபவர்களின் தனிப்பட்ட சுகாதாரம், கைகளை முறையாகக் கழுவுதல் மற்றும் தேவையான இடங்களில் கையுறைகள், தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் போன்ற சுத்தமான, பாதுகாப்பான உடைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மேற்கண்டவற்றில் ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால், உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேவையான இடங்களில் உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்விற்கு அனுப்ப வேண்டும். ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால், தேவையான இடங்களில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம். 2006. அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.