''அதிகாரத்தில் பங்கு'' - திமுக - காங்கிரஸ் மோதலை தூண்டிவிட்டதா விஜய் தந்த ஆஃபர்?
கட்சியை வலிமைப்படுத்தவும், கட்சிக்காரர்களை திருப்திப்படுத்தவும் இதுபோன்று பேசுவார்கள். காங்கிரஸ் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு எங்களுடன் பேசிய பிறகு தான் முடிவு எடுக்கப்படும்

Published : January 5, 2026 at 11:00 PM IST
- By எஸ். உசேன்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே தகிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு பக்கம் பிரச்சாரம், விருப்ப மனுக்கள் பெறுவது, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது என இருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகையால் யார் யாருடன் கூட்டணி சேர போகிறார்கள்? என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிமுக, பாஜக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் இன்னும் யார் யாரெல்லாம் அந்த கூட்டணியில் சேர போகிறார்கள்? என்பதும் குறிப்பாக டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்வார்களா? அல்லது தவெகவுடன் கூட்டணி அமைப்பார்களா? என்பதும் கூட பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
இதே போல் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக என கூறிக்கொண்டாலும் தேர்தல் நெருக்கத்திலே தான் அரசியல் கட்சிகளின் இறுதி முடிவு குறித்து தெரிய வரும். காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்த நிலையில் ''கை எங்கேயும் நம்மை விட்டு செல்லாது'' என்று கூறி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அணை போட்டார்.

காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சர்ச்சை
இதனை தொடர்ந்தே காங்கிரஸ் கட்சியில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு வதந்திகளுக்கும் கட்சி நிர்வாகிகளின் தனிப்பட்ட விருப்பத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது மேலிடம். ஆனாலும், காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் திமுக கூட்டணியுடன் இருக்க வேண்டும் என சிலரும், அதிக தொகுதி மற்றும் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்றால் தவெகவுடன் கூட்டணி அமைப்பது தான் சிறந்தது என இன்னும் சிலரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருவது அந்த கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொளுத்தி போட்ட பிரவீன் சக்கரவர்த்தி
இது போன்ற சர்ச்சைகள் எப்போதெல்லாம் எழுகிறதோ அப்போதெல்லாம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ''அகில இந்திய தலைமை தான் முடிவு எடுக்கும்'' என்று கூறி சமாளிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர் என அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, ''விஜயை பார்த்ததும், உத்தரப்பிரதேசத்தை விட தமிழ்நாடு அதிக அளவில் கடன் வாங்குகிறது'' என்று கொளுத்தி போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிகார பகிர்வை பெரிதும் விரும்புகிறார்கள்
இது குறித்து செல்வப்பெருந்தகை விளக்கம் அளிக்கும் போது, ''திமுக குறித்து யார் எதிராக பேசினாலும் அமைதியாக இருக்க முடியாது. இந்த விவகாரம் குறித்து தலைமையிடம் புகார் அளிக்கப்பட்டு விட்டது'' என்று கூறினார். இதற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில், ''ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என யாராவது கூறுவார்களா?" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரை தவிர மற்றவர்கள் ஒட்டுமொத்தமாக ஆட்சி அதிகார பகிர்வை பெரிதும் விரும்புகிறார்கள் என்பதாகவே பார்க்க முடிகிறது.

விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே?
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில், ''யாருக்கு வாக்கு? – IPDS தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம் இப்போது அதிகாரம் மட்டும் அல்ல. அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே'' என்று குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்ட அஜெண்டாவை தெரிந்துகொண்ட திருமா
மாணிக்கம் தாகூர் கருத்து குறித்து சமூக வலைதளம் மூலமாக பதிலளித்த திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம் அப்துல்லா, ''சமூக ஊடகங்களை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும். கடந்த ஓராண்டாக இந்துத்துவ ஆதரவு பக்கங்கள் தமிழ்நாட்டு ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு வருமா? என்ற செய்தியை தொடர்ந்து பேசி வந்தனர். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை ஒரு போதும் பிடிக்கப் போவதில்லை. இந்த நிலையில் வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் திட்டமிட்ட அஜெண்டா என்பதை உணர்ந்த திருமாவளவன், காதர்மொய்தீன் போன்ற கூட்டணித் தலைவர்கள் “ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பது தான் இந்த கூட்டணியின் ஒற்றை நோக்கம்” என்று தங்களது பேட்டிகளில் தெளிவுப்படுத்தினர்.
ஒருங்கிணைப்பை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் பிளான்
அதன் பிறகு இந்துத்துவ சமூக ஊடகங்களில் இந்த பேச்சுகள் கிட்டத்தட்ட மறைந்து விட்ட நிலையில் தற்போது மாணிக்கம் தாகூர் “இந்தப் பேச்சு எங்கிருந்து யாரால் உருவாக்கப்பட்டது என்று உணராது” மீண்டும் இந்த பேச்சை எடுக்கிறார். அனைத்து தலைவர்களும் மிகச் சரியாக இருக்கிறார்கள். அனைத்து தொண்டர்களும் மிகுந்த ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியை எதிர் நோக்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய “முடிந்து போன” குரலை மாணிக்கம் தாகூர் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும்?'' என குறிப்பிட்டிருந்தார்.
இதுதான் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை
எம்.எம்.அப்துல்லா கருத்துக்கு சமூகவலைதளம் மூலமாகவே பதில் அளித்த மாணிக்கம் தாகூர், '' நான் காங்கிரஸ் காரன். நேற்று .. இன்று .. நாளை என சங்கிகளை எதிர்த்து பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் அஞ்சாமல் குரல் கொடுப்பது என் கடமை. காங்கிரஸ் இயக்கத்தின் நிலைப்பாடு குறித்து பேசுவேன். இது எங்கள் இயக்கத்தின் பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் கூறிய கருத்து. இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை'' என அதிரடியாக பதிவிட்டு இருந்தார்.

''பேச்சுவார்த்தையின் போது முடிவும் எடுக்கப்படும்'' - திமுக
மாணிக்கம் தாகூர் கருத்து குறித்து திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் கூறும் போது, ''திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச தமிழக காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் எங்களிடம் பேச வேண்டும். மாணிக்கம் தாகூர் யார்? மாநில தலைவரும் இல்லை. அகில இந்திய தலைவரும் இல்லை. அவர் கூறுவதை ஏன் ஏற்க வேண்டும்? தமிழக காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட குழு தான் பேச வேண்டும். தொகுதி எண்ணிக்கை குறித்து பேசும் போது தான் அனைத்து முடிவும் எடுக்கப்படும்'' என்றார்.
இதுக்கு பேரு தான் ''நமக்கு நாமே ஆறுதல்'' திட்டமோ?
அதற்கு, ''தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பேச்சுவார்த்தை குழு தலைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து பேசியுள்ளாரே'' என கேட்டதற்கு, ''கட்சியை வலிமைப்படுத்தவும், கட்சிக்காரர்களை திருப்திப்படுத்தவும் இதுபோன்று பேசுவார்கள். காங்கிரஸ் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு எங்களுடன் பேசிய பிறகு தான் முடிவு எடுக்கப்படும்'' என்று டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.
''வாக்காள பெருங்குடி மக்களே'' என்ற சத்தம் வெகு விரைவில் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்க உள்ள நிலையில் யாருக்காக யார் கேட்பார்கள் என்பது தான் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. அநேகமாக இந்த மாத இறுதியிலேயே தெரிந்து விடும் என்று கூறப்படுவதால் அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

