வங்கக்கடலில் வலுபெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published : January 6, 2026 at 11:18 AM IST
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இந்தியப் பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதியில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் இந்தியப் பெருங்கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
மேலும் மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை நாளை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இதில், நாளை மறுநாள் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
| இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிரான மனு; விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு |
கனமழை வாய்ப்பு
தொடர்ந்து ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதனைத்தொடர்ந்து, 10 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

