ETV Bharat / state

ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் பொறுப்பு

திருப்பத்தூர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் சிவில் வழக்குகள் தொடர்பாக வழக்காடும் விதமாக இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில்
திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 3, 2026 at 10:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருப்பத்தூர்: ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞருக்கு அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட புதூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலை (65). இவரது கணவர் சிங்காரவேல். இவர் உடல்நலக்குறைவால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதேபோல், இவரது இரண்டு ஆண் பிள்ளைகளும் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆகையால், இப்போது அவருக்கு ஒரே ஒரு பெண் பிள்ளை மட்டுமே உள்ளார். இவரும் திருமணமான நிலையில், தற்போது அவரது கணவருடன் மாமியார் வீட்டில் வசித்து வருகிறார். எனவே, அஞ்சலை தனியாகவே வசித்து வருகிறார். அத்துடன், வருமானத்திற்காக ஆடு வளர்ப்பில் அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும், தேவைக்கேற்ப வேறு சில சிறுசிறு விவசாயம் சார்ந்த வேலைகளையும் அவர் பார்த்து வந்துள்ளார்.

அந்த வகையில், 8 ஆடுகளை வளர்த்து வந்த அஞ்சலை, அம்பலால் தெருவில் வசிக்கும் வழக்கறிஞர் ஷேக் சுல்தான் என்பவரது வீட்டில் ஆடு மற்றும் மாடுகளின் கொட்டகையை சுத்தம் செய்யும் வேலையை பார்த்து வந்துள்ளார். பின்னர் அந்த வேலையை குறிப்பிட்ட சில காரணங்களுக்காக விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று அஞ்சலை வளர்த்து வந்த ஆடு ஒன்று காணாமல் போயுள்ளது. இதன் காரணமாக அஞ்சலை வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

ஆடு திருடிய வழக்கில் கைதான வழக்கறிஞர்
ஆடு திருடிய வழக்கில் கைதான வழக்கறிஞர் (ETV Bharat Tamil Nadu)

அப்போது, அம்பலால் தெரு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷேக் சுல்தான் (அஞ்சலை வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர்), திருமலை என்பவருடன் சேர்ந்து, காரில் வந்து அஞ்சலையின் ஆட்டை திருடிச் சென்றது தெரிய வந்தது. ஆகவே, இதுதொடர்பாக வழக்கறிஞர் சுல்தான் மீது, வாணியம்பாடி நகர காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற ஷேக் சுல்தான் விரைவிலேயே சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இதையும் படிங்க: செஞ்சியில் பர்த் டே சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

இத்தகைய நபருக்கே தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், சிவில் வழக்குகள் தொடர்பாக வழக்காடும் விதமாக இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஆடு திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர் தற்போது அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட சம்பவம், திருப்பத்தூர் மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் சத்தியம் வாங்கி உள்ளார்: இதனிடையே, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருப்பத்தூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் கலந்து கொண்டு, மாவட்டத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்க்கொண்டார்.

கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பொறுப்புகளுக்கு, பணம் வாங்கி கொண்டு, பதவி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு. "மக்களிடம் பணம் வாங்க கூடாது என்று முதலமைச்சர் எங்களிடம் சத்தியம் வாங்கியுள்ளார். என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்துவர்கள் மீது, ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டை கூறினால், அவர் தவெக நிர்வாகியாக இருந்தாலும் அவரை ஜெயிலில் போடுவேன்" என்று அமைச்சர் ஆவேசமாக கூறினார்.