ETV Bharat / state

சென்னையில் 'குளு குளு' சீசன் தொடரும் - வானிலை ஆய்வு மையம்

ஜனவரி 9 மற்றும் 10-ஆம் தேதி தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 4:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: சென்னை உள்பட சில மாவட்டங்களில் குளிர்ச்சியான வானிலை தொடரும் எனவும், சில கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை நிலவரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிக லேசான மழையும் பெய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை குறைவாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் பதிவாகியுள்ளது.

மழைக்கான வாய்ப்பு தொடர்பான வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட படம்
மழைக்கான வாய்ப்பு தொடர்பான வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட படம் (RMC Chennai)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்பு

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜனவரி 9 மற்றும் 10-ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

நேற்று (08-01-2026) தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (09-01-2026) காலை 8:30 மணியளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மட்டகளப்பிற்கு (இலங்கை) கிழக்கு - தென்கிழக்கே சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

முறையே, திரிகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு - தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை) கிழக்கு - வடகிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் சிறப்பு பேருந்துகள் சேவை தொடக்கம் - வெறிச்சோடி காணப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

இது, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே நாளை (10-01-2026) மதியம் அல்லது மாலைக்குள் கரையை கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.