வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Published : January 7, 2026 at 5:15 PM IST
சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர், நீலகிரி, நாகபட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்துள்ளது. ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.
தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று (ஜன.6) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (ஜன.7) காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது, அதே பகுதிகளில் மட்டகிளப்பிற்கு (இலங்கை) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 790 கி.மீ தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு-தென்கிழக்கே 880 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 1150 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 1270 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் இன்று (ஜன.7) கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஜன.8 - நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜன.9 - திருவாரூர், நாகபட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்; ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜன.10 - மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜன.11 - திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னைக்கான வானிலை அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

