ETV Bharat / state

தொழில்நுட்பம் மட்டுமல்ல வைரத்தையும் உருவாக்கும் சென்னை ஐஐடி - எப்போது பயன்பாட்டுக்கு வரும்? வெளியானது 'அப்டேட்'

'அதிக வெப்பம் - அதிக அழுத்தம்' முறையில் வைரங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகிறோம். இது ஓரிரு ஆண்டுகளில் முடிந்துவிடும் என்று சென்னை ஐஐடி பேராசிரியர் அருணாச்சலம் கூறினார்.

வைரம் (கோப்புப்படம்)
வைரம் (கோப்புப்படம்) (IIT Madras)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 3, 2026 at 7:48 PM IST

|

Updated : January 3, 2026 at 9:04 PM IST

3 Min Read
Choose ETV Bharat

- BY எஸ்.ரவிச்சந்திரன்

"தகவல் தொழில்நுட்பம் நொடிக்கு நொடி வளர்ந்து வரும் நிலையில், 5G / 6G, காந்தவியல், வெப்ப மேலாண்மை, சென்சார்கள் மற்றும் குவாண்டம் போன்றவற்றுக்கு ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரம் பெரிதும் உதவும்" என கூறினார் ஐஐடி பேராசிரியர் அருணாச்சாலம்.

உலகின் விலை உயர்ந்த கரிமங்களில் முக்கியமானது வைரம். பூமிக்கு அடியில் கார்பன் அணுக்களால் இயற்கையாக உருவாகும் வைரம் கடினத் தன்மை காரணமாக தன்னிகரற்று விளங்குகிறது. வைரம் என்றால் சாமானிய மக்களைப் பொறுத்தவரை ஆபரணத்தில் இடம் பெறும் விலை மதிப்பற்ற ஒரு கல். அவ்வளவு தான். ஆனால், வைரம் என்பது மருத்துவத்தில் தொடங்கி செமி கண்டக்டர் துறை வரை முக்கியமானதாக விளங்குகிறது என்பதே உண்மை.

தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் விலை, பூமிக்கு அடியில் குறைந்து கொண்டே வரும் வளம் போன்றவற்றால் வைரத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், பட்டை தீட்டுவதற்கான செலவும் அதிகம். இதனால், உலகம் முழுவதும் வைரத்திற்கு பரவலாக தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல்வேறு தொழில் துறைகள் பாதிக்கப்படும் சூழலும் அதிகரித்து வருகிறது.

வாகனம், சுரங்கம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல முன்னணி துறைகளில் வைரம் மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவத்தில் புற்றுநோய்க்கான கதிரியக்கவியல் சிகிச்சையில் வைரம் முக்கிய இடம் வகிக்கிறது.

இந்த நிலையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம் ஆய்வகங்களில் வைரங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது சென்னை ஐஐடி. இது தொடர்பாக, கடந்த 2023-24-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது அறிவிப்பை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர், இதற்காக, சென்னை ஐஐடி-க்கு ரூ.242 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, ஆய்வுப் பணிகளை தொடங்கியது சென்னை ஐஐடி.

முதற்கட்டமாக, சென்னை ஐஐடியில், வைரங்களை உருவாக்குவதற்காக ‘இந்திய ஆய்வக வைர மையம்’ 2023 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இந்த Lab Grown Diamonds என்றழைக்கப்படும் வைரங்கள், இயற்கையாக கிடைக்கும் வைரங்களுக்கு நிகரான அனைத்து பண்புகளையும், வேதியியல் கூறுகளையும் கொண்டிருக்கும் என பேராசிரியர்கள் கூறுகின்றனர். அதே சமயம் இயற்கை வைரங்களை விட இதன் விலை 3-ல் ஒரு பங்காக தான் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு மக்கள் கையில்

சென்னை ஐஐடியில் உருவாக்கப்படும் வைரம்
சென்னை ஐஐடியில் உருவாக்கப்படும் வைரம் - மாதிரிப்படம் (ETV Bharat Tamil Nadu)

இது குறித்து சென்னை ஐஐடியின் இயற்பியல் துறை பேராசிரியர் ராமச்சந்திர ராவ் கூறுகையில், “தொழில், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கான பல தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதே போல, நல்ல தரமான வைரத்தை உற்பத்தி செய்வதில் இந்தியாவை முதலிடத்தில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், ஆராய்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். சென்னை ஐஐடி ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் வைரங்கள் ஓராண்டிற்குள் மக்களுக்கு கிடைக்கும்” என தெரிவித்தார்.

இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும்

சென்னை ஐஐடியில் வைரம் உருவாக்க பயன்படும் இயந்திரம்
ஆய்வக வைரத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படவுள்ள இயந்திரம் - மாதிரி படம் (ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய சென்னை ஐஐடி இயந்திரவியல் துறை பேராசிரியர் அருணாச்சலம், “வைரத்தை ஆய்வகத்தில் உருவாக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இதற்காக, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வைரங்களின் பயன்பாடும், தேவைகளும் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தியா இதில் தன்னிறைவு அடைய வேண்டுமானால், ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் தான் ஒரே வழி.

பொதுவாக, பூமிக்கடியில் கிடைக்கும் வைரங்களை பட்டை தீட்டி, அதன் மதிப்பை அதிகரித்து ஏற்றுமதி செய்து வருகிறோம். இதற்கான செலவு அதிகம். அதனால் தான் ஆய்வகத்தில் வைரத்தை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஆய்வக வைரங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், அனைத்து தொழில்துறையும் வளர்ச்சி அடையும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

ஆய்வகங்களில் வைரங்களை உருவாக்க சர்வதேச அளவில் இரு தொழில்நுட்பங்கள் இருந்தாலும், நாம் 'அதிக வெப்பம் - அதிக அழுத்தம்' என்பதை பயன்படுத்துகிறோம்.

செமிகண்டக்டருக்கும் பயன்படும் வைரம்

தற்போது, இதற்கான போதுமான தொழில்நுட்ப வசதிகள் நம்மிடம் இல்லை. எனவே, முதற்கட்டமாக அதற்கான இயந்திரங்களை வடிவமைத்து வருகிறோம். மேலும், 'அதிக வெப்பம் - அதிக அழுத்தம்' முறையில் வைரங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் தீவிரம் காட்டி வருகிறோம். இதனை ஓரிரு ஆண்டுகளில் உருவாக்கி விடுவோம். ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், இன்று உலகமே கவனம் செலுத்தி வரும் செமிகண்டக்டர் துறைக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கும்.

இயற்கை - செயற்கை வைரங்களுக்கு என்ன வித்தியாசம்?

ஐஐடி இயந்திரவியல் துறை பேராசிரியர் அருணாசலம் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

உயரழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக, பூமிக்கு அடியில் 150 கி.மீ.க்கு கீழே உள்ள கார்பன் மூலக்கூறுகள் வைரமாக மாறும். கார்பன் மூலக் கூறுகளின் படிவம் தான் வைரம். அதனை இயற்கையான முறையில் எடுக்க அதிகளவில் செலவு ஆகும். அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் நிறைய பாதிப்புகளை உண்டாக்கும்.

இதையும் படிங்க: திமுகவும், அதிமுகவும் கூட்டுக் களவாணிகள் - சீமான் விளாசல்

ஆய்வக வைரங்களை அதிகளவு உற்பத்தி செய்தால், இயற்கை வைரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தலாம். மேலும், சென்சார், செமிகண்டக்டர் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இயற்கை வைரத்திற்கும், ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது. வெறும் கண்ணால் பார்த்தாலும் அல்லது மைக்ரோஸ்கோப் வைத்து பார்த்தாலும் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அதே சமயம், இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிக்க உள்ளோம்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அருணாச்சலம், “வைரங்களுக்கான அதிகரித்து வரும் தேவை என்பது தவிர்க்க முடியாதது. தகவல் தொழில்நுட்பம் நொடிக்கு நொடி வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், 5G / 6G, காந்தவியல், வெப்ப மேலாண்மை, சென்சார்கள் மற்றும் குவாண்டம் போன்ற மின்னணு பயன்பாடுகளுக்கு பெரிதும் உதவும். நமது ஆராய்ச்சி முடிந்து ஆய்வக வைரங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், இந்த துறைகளில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும்” எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

Last Updated : January 3, 2026 at 9:04 PM IST